Home / விளையாட்டுச் செய்திகள் / ‘ஹாட்ரிக்’ வெற்றி பெறுமா இந்தியா: இன்று நியூசி.,யுடன் மோதல்

‘ஹாட்ரிக்’ வெற்றி பெறுமா இந்தியா: இன்று நியூசி.,யுடன் மோதல்

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று பிற்பகலில் நாட்டிங்காமில் உள்ள டிரென்ட் பிரிட்ஜ் மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் இந்தியா – நியூஸிலாந்து அணிகள் மோதுகின்றன.

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இம்முறை இதுவரை தோல்விகளை சந்திக்காத அணிகளாக இந்தியா, நியூஸிலாந்து வலம் வருகின்றன. விராட் கோலி தலைமையிலான இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்காவை 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியிருந்தது. இதைத் தொடர்ந்து 2-வது ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலியாவை 36 ரன்கள் வித்தியாசத்தில் வென்றிருந்தது.

அதேவேளையில் கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூஸிலாந்து அணி முதல் ஆட்டத்தில் இலங்கை அணியை 10 விக்கெட்கள் வித்தியாசத்தில் தோற்கடித்திருந்தது. தொடர்ந்து வங்கதேச அணியை 2 விக்கெட்கள் வித்தியாசத்திலும், ஆப்கானிஸ்தான் அணியை 7 விக்கெட்கள் வித்தியாசத்திலும் வென்றிருந்தது.

பயிற்சி ஆட்டத்தில் நியூஸிலாந்து அணியானது இந்தியாவுக்கு எதிராக ஆதிக்கம் செலுத்தியிருந்தது. அந்த ஆட்டத்தில் டிரென்ட் போல்ட்டின் சீரான வேகம், ஸ்விங் பந்து வீச்சுக்கு தடுமாறிய இந்திய அணி 179 ரன்களுக்கு சுருண்டிருந்தது. குறைந்த அளவிலான இலக்கை துரத்திய நியூஸிலாந்து அணி எளிதாக வெற்றி பெற்றிருந்தது.

இந்த தோல்விக்கு இன்றைய ஆட்டத்தில் இந்திய அணி பதிலடி கொடுக்க முயற்சிக்கக்கூடும். காயம் காரணமாக இன்றைய ஆட்டத்தில் இந்திய அணியின் தொடக்க வீரரான ஷிகர் தவண் களமிறங்க மாட்டார் என ஏற்கெனவே தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அவரது இடத்தில் கே.எல்.ராகுல் களமிறங்கக்கூடும்.

முதல் இரு ஆட்டத்திலும் சதம், அரை சதம் விளாசிய ரோஹித் சர்மாவுக்கு உறுதுணையாக கே.எல்.ராகுல் விளையாடும் பட்சத்தில் தொடக்க ஓவர்களில் நியூஸிலாந்து அணியின் பந்து வீச்சு மிரட்டல்களை எளிதாக கடந்து செல்ல முடியும். மேலும் நடுவரிசை வீரர்களுக்கும் அழுத்தம் குறையும்.

ரோஹித் சர்மாவுடன் தொடக்க வீரராக கே.எல்.ராகுல் களமிறங்க உள்ளதால் ஏற்கெனவே அவர் களமிறங்கிய 4-வது இடத்தில் யாருக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்பதில் சற்று எதிர்பார்ப்பு உள்ளது. இந்த இடத்துக்கு தினேஷ் கார்த்திக், விஜய் சங்கர் இடையே கடும் போட்டி நிலவக்கூடும்.

இதற்கிடையே நாட்டிங்காமில் இன்று மழை பெய்வதற்கான அதிக வாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதனால் திட்டமிட்டபடி ஆட்டம் 50 ஓவர்களை கொண்டதாக முழுமையாக நடத்தப்படுமா என்பது சந்தேகம்தான். டிரென்ட் பிரிட்ஜ் ஆடுகளமானது வழக்கமாக பேட்டிங்குக்கு சாதகமாகவே இருக்கும்.

ஆனால் குளிர்ந்த வானிலை காரணமாக நிச்சயம் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும் என கருதப்படுகிறது. இதனால் இன்றைய ஆட்டத்தில் இந்திய அணி கூடுதலாக ஒரு வேகப்பந்து வீச்சாளருடன் களமிறங்க வாய்ப்புள்ளது. அந்த வகையில் மொகமது ஷமி, விளையாடும் லெவனில் இடம் பெறக்கூடும்.

அவர், இடம் பெறும் பட்சத்தில் கேதார் ஜாதவ் தனது இடத்தை இழக்க நேரிடலாம். உலகக் கோப்பை தொடரில் இதுவரை இந்தியா – நியூஸிலாந்து அணிகள் 7 முறை மோதி உள்ளன. இதில் நியூஸிலாந்து 4 ஆட்டங்களிலும், இந்தியா 3 ஆட்டங்களிலும் வெற்றி பெற்றுள்ளன.

அணிகள் விவரம்

இந்தியா: விராட் கோலி (கேப்டன்), ஷிகர் தவண், ரோஹித் சர்மா, கே.எல்.ராகுல், மகேந்திர சிங் தோனி, கேதார் ஜாதவ், தினேஷ் கார்த்திக், ஹர்திக் பாண்டியா, விஜய் சங்கர், ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், யுவேந்திர சாஹல், மொகமது ஷமி, ஜஸ்பிரித் பும்ரா, புவனேஷ்வர் குமார்.

நியூஸிலாந்து: கேன் வில்லியம்சன் (கேப்டன்), மார்ட்டின் கப்தில், ஹென்றி நிக்கோல்ஸ், ராஸ் டெய்லர், காலின் மன்றோ, டாம் லேதம், டாம் பிளண்டெல், ஜிம்மி நீஷாம், காலின் டி கிராண்ட்ஹோம், மிட்செல் சாண்ட்னர், இஷ் சோதி, டிம் சவுதி, டிரென்ட் போல்ட், லூக்கி பெர்குசன், மேட் ஹென்றி.

About இனியவன்

x

Check Also

RADIOTAMIZHA | IPL கிரிக்கெட் போட்டி மறு அறிவித்தல் வரை ஒத்திவைப்பு

13 ஆவது இந்தியன் பிரீமியர் லீக் போட்டிகள் மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளன. இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்ததைத் ...

%d bloggers like this: