Home / விளையாட்டுச் செய்திகள் / விண்டீஸ் அணிக்கு எதிரான உலக கோப்பை லீக் போட்டியில் நியூசிலாந்து அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் ‘திரில்’ வெற்றி

விண்டீஸ் அணிக்கு எதிரான உலக கோப்பை லீக் போட்டியில் நியூசிலாந்து அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் ‘திரில்’ வெற்றி

விண்டீஸ் அணிக்கு எதிரான உலக கோப்பை லீக் போட்டியில் நியூசிலாந்து அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் ‘திரில்’ வெற்றி பெற்றது.

இங்கிலாந்து மண்ணில் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடக்கிறது. மான்செஸ்டரில் நடந்த லீக் போட்டியில் நியூசிலாந்து, விண்டீஸ் அணிகள் மோதின. ‘டாஸ்’ வென்ற விண்டீஸ் கேப்டன் ஹோல்டர் பவுலிங் தேர்வு செய்தார்.

நியூசிலாந்து அணி துவக்கத்திலேயே அதிர்ந்தது. காட்ரெல் வீசிய முதல் ஓவரின் முதல் பந்தில் கப்டில் அவுட்டானார். இந்த அதிர்ச்சியிலிருந்து மீள்வதற்குள், ஐந்தாவது பந்தில் முன்ரோ டக் அவுட்டானார். முதல் ஓவரில் 10 ரன்களுக்கு 2 விக்கெட்டை இழந்து அணி தடுமாறியது.

கேப்டன் வில்லியம்சன், ராஸ் டெய்லர் ஜோடி இணைந்தது. அனுபவ வீரர்களான இவர்கள், முதலில் விக்கெட் சரிவை தடுக்கும் பணியில் இறங்கினர். இதனால், இந்த ஜோடி அடுத்து சந்தித்த நான்கு ஓவரில் இரண்டு பவுண்டரி மட்டுமே அடித்தது.. முதல் 10 ஓவரில் 30 ரன்கள் மட்டுமே கிடைத்தது. தாமஸ் பந்தை வில்லியம்சன் பவுண்டரிக்கு விரட்டினார். தன் பங்கிற்கு, ஹோல்டர் பந்தை டெய்லர் பவுண்டரிக்கு விளாசினார். இருவரின் நிலையான ஆட்டம், பவுலர்களுக்கு நெருக்கடி தந்தது. இருவரும் அரை சதம் கடந்தனர். மூன்றாவது விக்கெட்டுக்கு 160 ரன்கள் சேர்த்தபோது, டெய்லர் (69) ஆட்டமிழந்தார். வில்லியம்சன் ஒரு நாள் அரங்கில் 13வது சதம் விளாசினார். இவர் 148 ரன்களில் அவுட்டானார். மற்றவர்கள் ஏமாற்ற, நியூசிலாந்து அணி 50 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 291 ரன்கள் எடுத்தது. விண்டீஸ் சார்பில் அதிகபட்சமாக காட்ரெல் 4 விக்கெட் வீழ்த்தினார்.

பிராத்வைட் சதம்

விண்டீஸ் அணிக்கு ஷாய் ஹோப், பூரன் தலா ஒரு ரன்களில் ஆட்டமிழந்தனர். ஹெட்மயர், கெய்ல் அரை சதம் விளாசினர். பெர்குசன் ‘வேகத்தில்’ ஹெட்மயர் (54), கேப்டன் ஹோல்டர் (0) சிக்கினர். கெய்ல் 87 ரன்கள் (8 பவுண்டரி, 6 சிக்சர்) எடுத்தார். லீவிஸ் டக் அவுட்டானார். பொறுப்புடன் விளையாடிய கார்லோஸ் பிராத்வைட் சதம் விளாசினார். இவர் பவுல்ட்டின் அபார ‘கேட்ச்சில்’ 101 ரன்களில் சிக்க, விண்டீஸ் அணி 49 ஓவரில் 286 ரன்கள் மட்டும் எடுத்து வீழ்ந்தது.

மோசமான துவக்கம்

விண்டீசுக்கு எதிரான துவக்க வீரராக களமிறங்கிய நியூசிலாந்தின் மார்டின் கப்டில், கோலின் முன்ரோ, ‘டக்–அவுட்’ ஆகினர். இதன்மூலம் உலக கோப்பை அரங்கில், ஒரு போட்டியில் துவக்க வீரர்கள் இருவரும் ‘டக்–அவுட்’ ஆன சோகம் 5வது முறையாக நிகழ்ந்தது.

இதற்கு முன்…

* கடந்த 1983ல் நியூசிலாந்துக்கு எதிராக பாகிஸ்தானின் மோசின் கான், முடாசர் நாசர் ‘‘டக்–அவுட்’ ஆனார்கள். அதன்பின், அதே ஆண்டு இந்தியாவின் கவாஸ்கர், ஸ்ரீகாந்த், ஜிம்பாப்வே அணிக்கு எதிரான போட்டியில் ஒரு ரன் கூட எடுக்காமல் வெளியேறினர்.

* கடந்த 1999ல் ஸ்காட்லாந்தின் பட்டர்சன்–பிலிப் ஜோடி, பாகிஸ்தானுக்கு எதிராக ‘டக்–அவுட்’ ஆகினர்.

* கடந்த 2015ல் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக இலங்கையின் திரிமான்னே, தில்ஷன் ஜோடி ஒரு ரன் கூட எடுக்காமல் ‘பெவிலியன்’ திரும்பினர்.

‘கோல்டன் டக்’

நியூசிலாந்தின் மார்டின் கப்டில், கோலின் முன்ரோ, தாங்கள் சந்தித்த முதல் பந்திலேயே ஒரு ரன் கூட எடுக்காமல் ‘பெவிலியன்’ திரும்பினர். இதன்மூலம் சர்வதேச ஒருநாள் போட்டி அரங்கில், துவக்க வீரர்கள் இருவரும் ‘கோல்டன் டக்’ (சந்தித்த முதல் பந்தில் விக்கெட்டை பறிகொடுத்தல்) ஆன சோகம் 3வது முறையாக அரங்கேறியது.

இதற்கு முன்…

* கடந்த 2006ல் வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக ஜிம்பாப்வே அணியின் பீட் ரிங்கே, டெர்ரி டப்பின் ‘கோல்டன் டக்’ ஆகினர்.

* கடந்த 2015ல் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இலங்கையின் திரிமான்னே, தில்ஷன் இப்படி விக்கெட்டை பறிகொடுத்தனர்.

22

கிறிஸ் கெய்ல் பந்தில் ராஸ் டெய்லர் 69 ரன்களில் ஆட்டமிழந்தார். இதனையடுத்து, நியூசிலாந்துக்கு எதிரான ஒரு நாள் போட்டிகளில் அதிக விக்கெட் வீழ்த்திய விண்டீஸ் வீரர் என்ற பெருமை பெற்றார். இதுவரை 22 விக்கெட் கைப்பற்றி உள்ளார்.

7

சிறப்பாக செயல்பட்ட நியூசிலாந்தின் வில்லியம்சன், கேப்டனாக 7வது சதம் அடித்தார். இதன் மூலம், ஒரு நாள் அரங்கில் நியூசிலாந்துக்காக அதிக சதம் விளாசிய கேப்டன்கள் பட்டியலில் ஸ்டீபன் பிளமிங்குடன் முதலிடத்தை பகிர்ந்து கொண்டார்.

About இனியவன்

x

Check Also

கிரிக்கெட் வீரர்களின் முறைகேடுகளைத் தவிர்க்க புதிய நடவடிக்கை

கிரிக்கெட் வீரர்கள் ஊக்க மருந்துகளை உட்கொள்வது, பல்வேறு முறைகேடுகளில் ஈடுபடுவது போன்ற குற்ற செயல்கள் குறித்த விழிப்புணர்வை இந்திய கிரிக்கெட் ...

%d bloggers like this: