Home / இந்திய செய்திகள் / `பிரபாகரன் உரிய நேரத்தில் வெளிவருவார்’ – பழ. நெடுமாறன்

`பிரபாகரன் உரிய நேரத்தில் வெளிவருவார்’ – பழ. நெடுமாறன்

தமிழர் தேசிய முன்னணி தலைவர் பழ.நெடுமாறன் இன்று (13) ராமநாதபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசுகையில்,

”இலங்கை கடற்படையினரால் பிடித்துச் செல்லப்பட்ட தமிழக மீனவர்களின் படகுகளில் சுமார் 150 படகுகள் மீண்டும் பயன்படுத்த முடியாத நிலையில் சேதமடைந்து மூழ்கிக் கிடக்கின்றன. அவற்றை மீட்டு வருவதை விட அந்த படகுகளுக்கு இலங்கை அரசிடம் இருந்து நஷ்ட ஈட்டு தொகையினை பெற்றுத் தருவதே சிறந்ததாகும். அல்லது மத்திய அரசு அந்த தொகையினை மீனவர்களுக்கு வழங்க வேண்டும்.

இறைவனை வழிபடுவதில் அனைவருக்கும் சம வாய்ப்பு வழங்கப்பட வேண்டும். இதை மேற்கோள்  இட்டுத்தான் சபரிமலைக்கு எல்லா வயதுடைய பெண்களும் செல்லலாம் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. சபரிமலை கோயிலில் மட்டும்தான் பெண்கள் செல்ல முடியாத நிலை உள்ளது. மற்ற ஐயப்பன் ஆலயங்களுக்கு எல்லாம் பெண்கள் சென்று வழிபடுகின்றனர். எனவே பெண்களை சபரிமலை கோயிலுக்கு அனுமதிப்பதை வரவேற்கிறேன்.

மாநில சுயாட்சிக்கு குரல் கொடுத்து வரும் தி.மு.க, முதல்வர் பழனிசாமி மீதான ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்க மத்திய அரசின் கையில் உள்ள சி.பி.ஐ-யின் விசாரணையைக் கோருவதன் மூலம் மாநில சுயாட்சிக் கொள்கைக்கு எதிராக நடந்து கொண்டுள்ளது. இந்த விவகாரத்தில் உயர் நீதிமன்றம் சி.பி.ஐ விசாரணைக்குத்தான் உத்தரவிட்டுள்ளதே தவிர தண்டனை வழங்கவில்லை. எனவே, இப்போதே முதல்வர் பழனிசாமி பதவி விலகத் தேவையில்லை. தமிழக உயர்கல்வித் துறை, ஊழல் மிகுந்ததாக உள்ளது. மாணவர் சேர்க்கை துவங்கி துணை வேந்தர் நியமனம் வரை புகார் எழுந்துள்ளது. எனவே, இதுகுறித்து விசாரிக்கத் தனி ஆணையம் அமைக்க வேண்டும்.

தமிழகத்தில் பேச்சுரிமை, எழுத்துரிமை, கருத்துரிமை உள்ளிட்டவை முற்றிலுமாக பறிக்கப்பட்டு வருகிறது. இலங்கையில் தமிழர்களின் வாழ்வாதாரம் இன்னும் சீர் செய்யப்படவில்லை. இதனால் அங்கு மக்கள் போராட்டம் நடத்தத் துவங்கியுள்ளனர். இதுபோன்ற பிரச்சனைகள் தொடர்வதால், அங்கு தமிழீழம் அமைய வேண்டும் என்ற போராட்டம் வெடிக்கும். விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் இறுதிக் கட்ட போரில் கொல்லப்படவில்லை. அவர் நலமுடன் இருந்து வருகிறார். இலங்கை தமிழர்களின் உரிமை போராட்டக் களத்தில் உரிய நேரத்தில் வெளிப்படுவார் பிரபாகரன்” என்றார்.

 

 

About இனியவன்

x

Check Also

இன்று காலை சபரிமலை நடைப்பந்தல் வரை சென்றுள்ள 2 பெண்கள் : பக்தர்களுடன் போலீசார் பேச்சுவார்த்தை

சபரிமலை : சபரிமலையில் ஐயப்பனை தரிசிப்பதற்காக தெலுங்கானாவைச் சேர்ந்த தனியார் டிவி செய்திவாசிப்பாளர் கவிதா மற்றும் கொச்சியை சேர்ந்த இருமுடி ...

%d bloggers like this: