Home / விளையாட்டுச் செய்திகள் / நபி போராட்டம் வீண்.. மண்ணைக்கவ்விய ஆப்கான்: இந்தியா திகில் வெற்றி

நபி போராட்டம் வீண்.. மண்ணைக்கவ்விய ஆப்கான்: இந்தியா திகில் வெற்றி

சவுத்தாம்ப்டனில் நடைபெற்ற ஐசிசி உலகக்கோப்பை 2019-ன் 28வது போட்டி கடும் பரபரப்பான நிலையில் ஆப்கான் அணியின் இந்தியாவுக்கான எச்சரிக்கை மணியுடன் இந்திய வெற்றியில் முடிந்தது.  ஆனால் உண்மையில் விராட் கோலி படையை தண்ணி குடிக்க வைத்தனர் ஆப்கான் அணியினர். மொகமது ஷமி துல்லிய பந்து வீச்சில் ஹாட்ரிக் சாதனை புரிந்தார்.

டாஸ் வென்ற விராட் கோலி 300 ரன்களுக்கும் மேலான இலக்கை எதிர்நோக்கி முதலில் பேட்டிங் செய்ய முடிவெடுத்தார், ஆனால் ஆப்கான் அணியின் பந்து வீச்சை கம்பீரமாக ஆடி எதிர்கொள்ளாமல் சொதப்பலாக ஆடி 224 ரன்களை எடுத்தனர்,அதுவும் விராட் கோலியின் சரளமான அரைசதம் மற்றும் கொஞ்சம் திக்குமுக்காடினாலும் பயனுள்ள அரைசதம் எடுத்த கேதார் ஜாதவ் ஆகியோரினால் இந்த ஸ்கோர் சாத்தியமானது.

தொடர்ந்து ஆடிய ஆப்கானிஸ்தான் அணி 49.5 ஓவர்களில் 213 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. மொகமது நபி 55 பந்துகளில் 4 பவுண்டரிகள் 1 சிக்சருடன் 52 ரன்கள் எடுத்து மரண பயம் காட்டி ஷமி ஹாட்ரிக்கின் முதல் விக்கெட்டாக வீழ்ந்தார். இவர் பும்ரா வீசிய ஷார்ட் பிட்ச் பந்தை ஆன் திசையில் புல் ஷாட் ஆடியது அரக்கத்தனமான ஷாட் அதுவும் 80 மீட்டர்கள் சென்ற மிகப்பெரிய சிக்ஸ் ஆனதில் ரசிகர்களுக்கு திக் திக். பும்ராவையே சிக்ஸ் அடித்துவிட்டாரே ஷமி என்ன ஆவாரோ என்ற பயத்தை நபி ஏற்படுத்தினார், ஏனெனில் ஏற்கெனவே ஷமியை நடந்து வந்து லாங் ஆஃபில் ஒரு பிரமாதமான பவுண்டரியை விளாசியிருந்தார் நபி.

சேத்தன் சர்மாவுக்குப் பிறகு 32 ஆண்டுகள் கழித்து ஷமி ஹாட்ரிக் சாதனை!

49வது ஓவரை பும்ரா மீண்டும் அபாரமாக வீசி 5 ரன்களையே கொடுக்க கடைசி ஓவரில் 16 ரன்கள் எடுத்தால் ஆப்கான் வெற்றி, ஸ்கோர் 209/7 என்று இருந்தது. அப்போது மொகமது ஷமி வீசிய தவறிய யார்க்கர் புல்டாஸாக மாற முதல் பந்தை நேராக பவுண்டரி அடித்த மொகமது நபி எனும் போராளி ஒரு பிரமாதமான அரைசதத்தை நிறைவு செய்தார். லேசாக இந்திய நெஞ்சங்களில் பீதி ஏற்பட்டது, ஸ்டேடியத்தில் இந்திய ரசிகர்கள் வேண்டாத தெய்வமில்லை என்பது போல் மிகவும் உணர்ச்சிவயப்பட்ட ஒரு நிலையில் பதற்றத்துடன் காணப்பட்டனர்.

ஷமி அடுத்த பந்தை வீச  நபி அதனை டீப் மிட்விக்கெட்டில் அடித்தார் ஆனால் ஒரு ரன் ஓடவில்லை. அடுத்த பந்தை நபி ஒதுங்கிக் கொண்டு ஆட நினைக்க அவரைத் தொடர்ந்தா ஷமி பந்து லேசான யார்க்கர் லெந்த் நபி தூக்கினார் லாங் ஆனில் பாண்டியாவிடம் கேட்ச் ஆக போராளி நபி ஆட்டமிழந்தார். இதற்கு அடுத்த பந்தே அப்டாப் ஆலம் லேசாக ஒதுங்கிக் கொண்டு மட்டையை தன் போக்கில் சுற்றினார் பவுல்டு ஆனார். துல்லியப் பந்து வீச்சு. அடுத்த பந்தே முஜிபுர் ரஹ்மானும் லேசாக ஒதுங்கிக் கொண்டு நேராக அடிக்கப் பார்த்தார், ஆனால் இதுவும் துல்லிய யார்க்கர் பவுல்டு ஆனார். ஷமி உலகக்கோப்பையில் ஹாட்ரிக் சாதனை நிகழ்த்தினார்.

1987 உலகக்கோப்பை கிரிக்கெட்டில் இந்திய அணியின் சேத்தன் சர்மா ஹாட்ரிக் சாதனை நிகழ்த்திய பிறகு 32 ஆண்டுகள் கழித்து மொகமது ஷமி இந்திய அணிக்காக இரண்டாவது ஹாட்ரிக் சாதனையை 2019 உலகக்கோப்பையில் நிகழ்த்திக் காட்டினார். ஆப்கான் அணி 213 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து  நெஞ்சை நிமிர்த்திய தோல்வி கண்டது. இந்திய அணி இந்த வெற்றியைக் கொண்டாடுவதில் ஒன்றுமில்லை.

இந்திய அணிக்கு எச்சரிக்கை மணி!

கடைசியில் அழுத்தத்தில் ஷமி யார்க்கரில் எடுத்த ஹாட்ரிக் விக்கெட்டுகள் போக மீதி விக்கெட்டுகளை எல்லாம் இந்திய பவுலர்கள் நல்ல பந்தைப் போட்டு எடுக்கவில்லை என்பதே விஷயம். ஆப்கான் போன்ற அணிகள் டி20 மனநிலையில் எப்போதுமே ஆடுவதால் 3-4 டாட்பால்கள் போட்டால் அவ்வளவுதான் அவர்கள் அழுத்தம் ஏற்பட்டு அடுத்த பந்திலோ அடுத்த ஓவரிலோ ஆட்டமிழந்து விடுவார்கள், அதுதான் நடந்தது இன்று.

இந்திய அணி எப்படியிருந்தாலும் வெற்றி பெற்று விடும் என்பது தெரியும், ஆனால் இந்த மாதிரி வெற்றி பெறுவது, தோனி, விஜய் சங்கர், கேதார் ஜாதவ், ராகுல் போன்றோரின் மந்தமான இன்னிங்ஸ்களுக்கு ‘பயனுள்ள பங்களிப்பு’ என்ற அந்தஸ்தை வழங்கி விடும். உண்மையில் பார்த்தால் விஜய் சங்கர் ஏன் அணியில் எடுக்கப்பட்டார்? அவருக்கு ஆப்கான் அணி பந்து வீச்சையே ஆக்ரோஷமாக எதிர்கொள்ள முடியவில்லை, மேலும் அன்று முதல் பந்திலேயே விக்கெட் எடுத்தவருக்கு இன்று ஓவரே வழங்கப்படவில்லை. இத்தனைக்கும் ஹர்திக் பாண்டியா முதல் 2 ஓவர்களை சொதப்பலாக வீசி பவுண்டரிகளை வழங்கினார்.

உண்மையில் தினேஷ் கார்த்திக் இருந்திருந்தால் அழகாக விராட் கோலியுடன் ஸ்ட்ரைக்கை ரொடேட் செய்திருப்பார் என்பதையும் ரிஷப் பந்த் இருந்திருந்தால் ஆப்கான் ஸ்பின்னர்களை வெளியே அடித்திருப்பார் என்பதையும் அனுபவசாலியான விறுவிறு பவுலர் ஜடேஜா இருந்திருந்தால் ஆப்கானை இன்னும் முன்னமேயே முடித்திருப்பார் என்பதையும் நம்மால் யோசிக்காமல் தவிர்க்க முடியவில்லை என்பதே இந்தப் போட்டி நமக்குள் ஏற்படுத்தும் உணர்வாக இருக்கிறது

தொடக்கத்தில் ஆப்கான் அணியினர் நிதானமாக ஆடி 6 ஓவர்களில் 20 ரன்கள் தொடக்கம் கண்டனர், எப்போது ஒதுங்கிக் கொண்டு சுற்றும் சஸாய் 24 பந்துகளில் 10 ரன்களுக்கு தேவையில்லாமல் ஷமி பந்தை சுற்றி பவுல்டு ஆனார். குல்பதின் நயீப், ரஹ்மத் ஷா மிக அருமையாக ஆடி 44 ரன்களை 2வது விக்கெட்டுக்காகச் சேர்த்தனர்.

முதல் 8 ஓவர்களில் பும்ரா 4-13-0, ஷமி 4-1-6-1.  சாஹல் 9வது ஓவரில் அழைக்கப்பட்டார். பாண்டியாவை குல்பதின் நயீப் 2 பவுண்டரிகளை ஒரே ஓவரில் விளாசினார். முதல் ஒவரில் பாணிடியா 8 ரன்களைக் கொடுக்க மொத்தம் 2 ஓவர்களில் 20 ரன்கள் என்று பாண்டியா சொதப்பிக் கொண்டிருந்தார். கடைசியில் பாண்டியா கொஞ்சம் லைன் மற்றும் லெந்தை இறுக்க ரன்கள் வராததால் டி20 மனநிலை என்பதால் பொறுக்க மாட்டாமல் அடுத்த ஷார்ட் பிட்ச் பந்தை புல் செய்தார் சரியாகச் சிக்கவில்லை, நேராக விஜய் சங்கர் கையில் உட்கார்ந்தது. 27 ரன்களில் நயீப் வெளியேறினார். உண்மையில் பவுண்டரி அடிக்க வேண்டிய பந்து.

பும்ரா கொடுத்த திருப்பு முனை:

 

 

அதன் பிறகு ரஹ்மத் ஷா (36), ஷாஹிதி (21) இணைந்து நிலையாக ஆடி ஸ்கோரை 29வது ஓவரில் 106 ரன்களுக்குக் க்கொண்டு சென்றனர். அதாவது 42 ரன்கள் பார்ட்னர் ஷிப். அப்போதுதான் கோலி ஆட்டம் கையை விட்டுப் போய்க்கொண்டிருக்கிறது என்று பும்ராவை அழைத்தார்.

ஷார்ட் பிட்ச் பந்தை ரஹ்மத் ஷா ஹூக் ஆட முயன்றார் உண்மையில் ஒரு டாப் வீரருக்கு இந்தப் பந்தை பும்ரா வீசியிருந்தால் சிக்ஸ் அல்லது பவுண்டரி போயிருக்கும், ஆனால் ரஹம்த் ஷாவுக்கு போதிய ஸ்கில் சேட் இல்லாததல பும்ராவை இந்த ஷாட்டை அவர் ஆடியிருக்கக் கூடாது பந்து சாஹலிடம் கேட்ச் ஆனது. இதே ஒவரில் நன்றாக ஆடிவந்த ஷாஹிதியும்  ஷார்ட் ஆஃப் லெந்த் பந்தை எம்பினார், மட்டையை திருப்பினார் விளிம்பில் பட்டு பும்ராவிடமே கேட்ச் ஆனது. இந்தப் பந்தையும் ஒரு அனுபவ சர்வதேச வீரர் இருந்தால் பவுண்டரிக்கு அனுப்பியிருப்பார், ஆனால் இரண்டும் பும்ராவுக்கு விக்கெட், இது ஒரு திருப்பு முனை ஓவர். இதே பந்தை இங்கிலாந்திடமோ, ஆஸ்திரேலியாவின் வார்னர், மேக்ஸ்வெல் ஆகியோருக்குப் போட்டு பும்ராவினால் விக்கெட் எடுத்திருக்க முடியாது என்றே தோன்றுகிறது. ஏனெனில் ஆப்கான் வீரர்களின் ஸ்கில்செட் மிகவும் வரம்புக்குட்பட்டது.

அஷ்கர் ஆப்கானும் (8) டாட்பால்களினால் அழுத்தமாகி சாஹலை அடித்து விட வேண்டும் என்ற அவசரத்தில் சுற்றினார் பவுல்டு ஆனார். 130/5. 15 ஓவர்களில் வெற்றிக்குத் தேவை 95 ரன்கள். நஜ்புல்லா ஜத்ரான், நபியுடன் இணைந்து 6 ஓவர்களில் 36 ரன்கள் கூட்டணி அமைத்தனர். 166/5 என்ற நிலையில் 23 பந்துகளில் 2 பவுண்டரிகளுடன் 21 ரன்கள் எடுத்த ஜத்ரான் பாண்டியாவின் ஸ்லோ ஆஃப் கட்டரில் ஷார்ட் மிட்விக்கெட்டில் சாஹலிடம் கேட்ச் ஆனார். ஆனால் இவர் மொகமது ஷமியை லாங் ஆஃப் மேல் அடித்த பவுண்டரி ஷமிக்கு கோபத்தை ஏற்படுத்தியது. அவ்வளவு க்ளீன் ஹிட் அது.

ரஷீத் கான் இறங்கினார். 16 பந்துகளில் 1 பவுண்டரியுடன் 14 ரன்கள் எடுத்து இவரும் நபியும் ஸ்கோரை 46வது ஒவரில் 190 ரன்களுக்கு உயர்த்த கோலியின் வயிற்றில் மோட்டார் ஓடத்தொடங்கியது, ஆனால் ரஷீத் கான் தோனியின் ஸ்டம்பிங்கிற்கு சாஹலிடம் ஆட்டமிழந்தார். விக்கெட் கீப்பர் இம்ரான் அலிகில் இறங்கினார். 45.4 ஓவர்களில் 190/7 என்று 26 பந்துகளில் 35 ரன்கள் வெற்றிக்கு என்ற நிலையில் அலிகில் (7), நபியுடன் இணைந்து 4 ஓவர்களில் 23 ரன்களைச் சேர்க்க முடிந்தது, இந்தக் கூட்டணியின் போதுதான் பும்ராவின் ஷார்ட் பிட்ச் பந்தை நபி மிகப்பெரிய சிக்ஸரை அடித்து அச்சமூட்டினார். ஆனால் 50வது ஓவரை ஷமி மிகத்துல்லியமாக வீசி ஒரு பவுண்டரி மட்டுமே கொடுத்து ஹாட்ரிக் சாதனை புரிய ஆப்கான் அணி வேதனையுடன் 213 ரன்களில் முடிந்தது.

ஹாட்ரிக் நாயகன் ஷமி 40 ரன்களுக்கு 4 விக்கெட், பும்ரா 39 ரன்களுக்கு 2 விக்கெட். சாஹல் 36 ரன்களுக்கும் பாண்டியா 51 ரன்களுக்கும் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர், குல்தீப் 10 ஓவரில் 39 விக்கெட் இல்லை டைட்டாக வைத்திருந்தார்

ஆட்ட நாயகன் பும்ராவுக்கு வழங்கப்பட்டது, ஆனால் உண்மையில் 2 விக்கெட்டுகளையும் இந்திய அணியை பயமுறுத்திய அரைசதத்தையும் எடுத்து ஆப்கான் இன்னிங்ஸை 50வது ஓவர் வரைக் கொண்டு வந்து ஒரு போராளி இன்னிங்சை ஆடிய நபிக்கு வழங்கியிருந்தால் சிறப்பாக இருந்திருக்கும். இந்த ஆட்டத்தின் மூலம் கிரிக்கெட் வென்றுள்ளது.

About இனியவன்

x

Check Also

இலங்கை VS மேற்கிந்திய தீவுகள் இறுதி T20 போட்டி இன்று!

இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான இரண்டாவதும் இறுதியுமான இருபதுக்கு இருபது கிரிக்கெட் போட்டி இன்று இடம்பெறவுள்ளது. மேற்கிந்திய ...

%d bloggers like this: