Home / உலகச் செய்திகள் / டிரம்ப் – கிம் சந்திப்பு: முடிந்தது உணவு இடைவேளை, அடுத்து என்ன?

டிரம்ப் – கிம் சந்திப்பு: முடிந்தது உணவு இடைவேளை, அடுத்து என்ன?

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மற்றும் வட கொரிய தலைவர் கிம் ஜாங்-உன் இடையிலான வரலாற்று சிறப்புமிக்க உச்சிமாநாடு சிங்கப்பூரிலுள்ள சென்டோசா தீவில் தற்போது நடைபெற்று வருகிறது.

Presentational grey line

சிங்கப்பூரிலிருந்து நேரலை

“நரகத்தில் சிறப்பு இடம்?”

1,30,000 பேரை சிறையில் அடைத்து, சர்வாதிகாரியாக இருக்கும் கிம்மிற்கு நரகத்தில் சிறப்பு இடம் உண்டா? என்று கேள்வி எழுப்பியுள்ளார் அமெரிக்க எழுத்தாளர் நிக் ப்ரியன்ட்.

10.30: 9 மாதங்களுக்கு முன்பு வசைமொழி பொழிந்தனர்

‘சேர்மன் கிம்மின் பேச்சுவார்த்தைக்கான அழைப்பினை மூன்று மாதங்களுக்கு முன்பே அமெரிக்க அதிபர் டிரம்ப் ஏற்றுக்கொண்டார். அதே சமயம் வெறும் ஒன்பது மாதங்களுக்கு முன்பு கிம்மை ‘குட்டி ராக்கெட் மனிதர்’ என டிரம்ப் அழைத்ததும், டிரம்பை `பலவீனமான முதியவர்` என கிம் அழைத்ததும் நடந்தது.

”தற்போது அவர்கள் ஒரு உறவை உருவாக்கி சமாதானம் பேசுகிறார்கள். நிச்சயம் பெரும் தடைகளை கடக்க வேண்டி இருக்கும்.”

10.25:எச்சரிக்கையுடன் சிரித்த தலைவர்கள், லாரா பிக்கர்கொரிய செய்தியாளர்

”இது வரலாற்றில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மற்றும் குறிப்பிடத்தக்க கைகுலுக்கல்களில் ஒன்றாகும். இரு தலைவர்களின் சந்திப்பு நிகழ்ந்த வெள்ளை போர்ட்டிகோவில் யாரும் எண்ணிப்பார்க்காத வகையில், ஆறு அமெரிக்க கொடிகளின் அருகில் ஆறு வட கொரிய கொடிகள் பறந்தன.

”பிறகு இரு தலைவர்களும் தோன்றி, எச்சரிக்கையுடன் சிரித்தனர். தனது வழக்கான சிவப்பு நிற டையில் டிரம்ப் தோன்றினார். கிம்மும் தனது வழக்கான கறுப்பு நிர மாவோ உடையில் தோன்றினார். 12 நொடிகளுக்குக் கைக்குலுக்கல் நீடித்தது. பிறகு தங்களது மொழிப்பெயர்ப்பாளர்களுடன் அருகில் உள்ள அறைக்கு இருவரும் நடந்து சென்றார்கள்.

Presentational grey line

10.21: “எதிர்பார்த்ததை விட சிறந்ததாக இருக்கும்”

அவர்கள் என்ன ஒப்பந்தம் செய்து கொள்ளப் போகிறார்கள் என்பது குறித்த தகவல் ஏதும் வெளிவரவில்லை.

ஆனால் “இது யாரும் எதிர்பார்த்ததை விட சிறந்ததாக இருக்கும்” என்று அதிபர் டிரம்ப் செய்தியாளர்களிடம் கூறினார்.

10.17: தோட்டத்தில் டிரம்ப்-கிம்

“கையெழுத்திட” போவதற்கு முன் தோட்டத்தில் நடந்த டிரம்ப் – கிம்

10.16: உடன்படிக்கையில்கையெழுத்தா?

கையெழுத்திட தாங்கள் இருவரும் செல்வதாக டிரம்ப் கூறியுள்ளார். இதில் நாம் என்ன எதிர்பார்க்கலாம்? ”இரு கொரிய நாடுகளின் உச்சிமாநாட்டில் ஏற்படுத்தப்பட்ட உடன்படிக்கையைப் போன்ற ஒரு உடன்படிக்கையில் இருவரும் கையெழுத்திடலாம்” என அமெரிக்க அரசியல் ஆய்வாளர் ராபர்ட் கெல்லி கூறுகிறார்.

Presentational grey line

10.13 “கிம் என்னை நம்ப வேண்டும்” – டிரம்ப்

தான் ஒப்பந்தங்கள் செய்வதில் வல்லவர் என்று கூறிய டிரம்ப், கிம் தன்னை நம்ப வேண்டும் என்று கூறினார். ஆனால் வட கொரியா இதனை கூர்ந்து கவனிக்கும்.

10.12: எது குறித்த கையெழுத்து?

எதுகுறித்த உடன்படிக்கை கையெழுத்தாகும் என்று தெரியவில்லை. “இன்னும் சில நிமிடங்களில் தெரிய வரும்” என்று டிரம்ப் தெரிவித்தார்.

Presentational grey line

10.09: மதிய உணவு இடைவேளை முடிந்தது

மதிய உணவை முடித்த டிரம்பும் கிம்மும் தோட்டத்தில் உலா வருகின்றனர்.

“கையெழுத்து நடவடிக்கைகள்” நடைபெற உள்ளதாக செய்தியாளர்களிடம் தெரிவித்தார் அதிபர் டிரம்ப்.

9.50: கைக்குலுக்கலில் டிரம்புக்கு ஏமாற்றம்?

இதுவரை மூன்று முறை டிரம்பும் கிம்மும் கைக்குலுக்கி கொண்டுள்ளனர். மூன்று முறையும் அதிபர் டிரம்ப்தான் முதலில் கையை நீட்டினார் என்று பிபிசியிடம் கூறினார். உடல்மொழி நிபுணரான மனோஜ் வாசுதேவன். தனது ஆதிக்கத்தை உறுதிபடுத்தும் விதமாக டிரம்ப் இவ்வாறு செய்திருக்கலாம் என்று அவர் தெரிவித்தார்.

ஆனால், டிரம்ப் எதிர்பார்த்த கைக்குலுக்கலை அவர் பெறவில்லை என்று குறிப்பிட்ட மனோஜ், அமெரிக்க கலாசாரத்தில், நீண்ட நேர கைக்குலுக்கும் முறை பின்பற்றப்படும் என்றும், டிரம்புக்கு அது கிடைக்கவில்லை என்று கூறினார்.

Presentational grey line

9.21: ‘இதுவரை உச்சிமாநாட்டில் நடந்தவை என்ன?’

நீங்கள் இப்போது ஐரோப்பாவில் இருக்கிறீர்கள் என்றால், இப்போதுதான் நீங்கள் எழுந்து இருப்பீர்கள் அல்லது நீங்கள் இப்போது ஆசியாவில் இருக்கிறீர்கள் என்றால் மதிய உணவு நேரத்தில் இருப்பீர்கள்.

வரலாற்று சிறப்புமிக்க இந்த உச்சிமாநாட்டின் சிறப்பு செய்தி சேகரிப்புக்கு உங்களை வரவேற்கிறோம்.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பும் , வட கொரிய அதிபர் கிம் ஜோங் – உன்னும் சந்தித்து கைகுலுக்கி கொண்டனர்.

சரி, ஏன் இதனை வரலாற்று சிறப்புமிக்க சந்திப்பு என்று விளிக்கிறோம்?

ஏனெனில், இதற்கு முன்பாக பதவியில் இருக்கும்போது எந்த அமெரிக்க அதிபரும் வட கொரிய தலைவரை சந்தித்தது இல்லை.

பல தசாப்தங்களாக, மனித உரிமை மீறல், அணு ஆயுத சோதனை காரணமாக அந்நாடு ஒதுக்கி வைக்கப்பட்டிருந்தது.

கடந்தமாதம்தான், தமது வெளியுறவு கொள்கைகளில் மாற்றம் கொண்டுவந்து கிம்மை சந்திக்க டிரம்ப் சம்மதம் தெரிவித்தார். வரலாற்றின் போக்கில் இது மிகப்பெரிய திருப்பம் என்பதால் இதற்கு இவ்வளவு முக்கியத்துவம் தருகிறோம்.

Presentational grey line

9.00: ‘ஏன் நிகழ்ச்சி நிரலில் மனித உரிமை குறித்த உரையாடல்கள் இல்லை?’

“அமெரிக்க மனித உரிமை குறித்த விஷயங்களை கொண்டு வந்தால், அதற்கு வட கொரியர்கள் மிக மோசமாக எதிர்வினையாற்றுவார்கள். அதுதான், நிகழ்ச்சி நிரலில் மனித உரிமை குறித்த உரையாடல்கள் இல்லாததற்கு காரணம்,” என்கிறார் புஷன் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ராபர்ட் கெல்லி.

“மனித உரிமை குறித்த விஷயங்கள் கொண்டுவந்ததுதான் வட கொரியா உடனான முந்தைய பேச்சு வார்த்தைகளை சிதைத்தது.அதேநேரம், பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெறும்பட்சத்தில், மனித உரிமை அமைப்புகளிடமிருந்து கடுமையான அழுத்தம் வரும்.” என்கிறார் அவர்.

8.55: ‘உச்சி மாநாட்டில் என்ன உணவு?’

என்னதான் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பேச்சுவார்த்தை என்றாலும் அரசியல் தலைவர்களும் உணவு உண்ண வேண்டும் தானே? சரி மதியம் உச்சி மாநாட்டில் என்ன உணவு? மேற்கத்திய உணவு கலவையாக மெனு உள்ளது. குறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால், தென் கொரிய உணவுகளின் ஆதிக்கம் தெரிகிறது.

8.51: ‘பதில் கூற மறுத்த கிம்’

செய்தியாளர்கள் கிம் ஜோங் – உன்னிடம், உங்கள் பிரதேசத்தை அணு ஆயுதமற்ற பிரதேசமாக மாற்றுவீர்களா என்று இருமுறை கேட்டனர். ஆனால், அதற்கு பதில் அளிக்காமல் சென்றார் வட கொரிய தலைவர்.

பேச்சுவார்த்தை சுமூகமாக போய் கொண்டிருப்பதாக கூறினார் டிரம்ப்.

8.50: ’38 நிமிடங்களில் நிகழ்த்தப்பட்ட வரலாறு’

அமெரிக்க அதிபர் டிரம்பும் வட கொரிய அதிபர் கிம் ஜோங் – உன்னும் தனிமையில் 38 நிமிடங்கள் உரையாடியதை வெள்ளை மாளிகை உறுதி செய்துள்ளது.

8.40: ‘பேச்சுவார்த்தையில் முக்கியபங்கு வகிக்கும் பெண்’

இன்று காலை பேச்சுவார்த்தை தொடங்கியதிலிருந்து, பேச்சுவார்த்தை நடத்தும் குழுவில் இந்த பெண் காணப்படுகிறார். யார் இவர்? என்ற கேள்வி அங்கு குழுமியிருந்த அனைவரிடமும் இருந்தது.

“அவர் வெறும் வார்த்தைகளை மொழிப்பெயர்க்கும் மொழிப்பெயர்ப்பாளர் மட்டுமல்ல, அனைத்து பொருளையும் புரிந்து விளக்குபவர். அவர் தான் பேச்சுவர்த்தை நடக்கும் அறையில் முக்கிய நபர்” என்று கேத்ரீன் என்றவர் ட்வீட் செய்துள்ளார்.

8.30: ‘சிறை தேசம்’

வட கொரியா ஒரு சிறை தேசம். மனித உரிமை மீறல்களில் மோசமாக ஈடுபடும் தேசம். அந்நாட்டில் 2.5 கோடி மக்கள் சிறையில் இருக்கிறார்கள் என்று உச்சிமாநாடு நடக்கும் இந்த தருணத்தில் ட்வீட்டரில் பதிவிட்டுள்ளார் வாஷிங்டன் போஸ்ட் செய்தியாளர் அன்னா.

8.10: ‘மாறுபட்ட பாணி’

“முந்தைய வட கொரிய தலைவர்களிடமிருந்து வேறுபட்டவராக கிம் இருக்கிறார். அவரது தந்தை கிம் ஜோங் – இல்லிடமிருந்து வேறுபடுகிறார். அவரது பாணி வித்தியாசமானதாக இருக்கிறது” என்கிறார்கள் சிங்கப்பூரில் இருக்கும் பிபிசி செய்தியாளர்கள் ருபேர்ட் விங் ஃபீல்ட்.

மேலும் அவர்கள், “செயலில் எவ்வளவு வித்தியாசத்தை காட்டப் போகிறார் என்பதுதான் எல்லோருடைய மனதிலும் உள்ள கேள்வி?” என்கிறார்கள் அவர்கள்.

Presentational grey line

7.53: சிறப்பாக செல்லும் பேச்சுவார்த்தை

கிம் ஜோங் – உன் உடனான பேச்சுவார்த்தை எவ்வாறாக செல்கிறது என்று டிரம்பிடம் கேட்டோம். அதற்கு, “மிக மிக சிறப்பாக செல்கிறது. சிறந்த உறவு” என்று டிரம்ப் கூறியதாக வெள்ளை மாளிகை செய்தியாளர் ஸ்காட் ஹார்ஸ்லி ட்வீட் ஒன்றை பகிர்ந்துள்ளார்.

7.50: வட கொரிய பேராளர்கள் யார் யார்?

கிம் யோங் – சொல் : இவர்தான் கிம் ஜோங் – உன்னின் வலது கை என்று கூறப்படுகிறது.

ரி யோங் – ஹொ : வட கொரியா வெளியுறவு துறை அமைச்சர். இவர் முன்னதாகவே 1990ல் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தியதில் அனுபவம் வாய்ந்தவர்.

ரி சு – யோங்: இவர் முன்னாள் வெளியுறவு துறை அமைச்சர். ஆனால், இப்போதும் வட கொரியாவின் சக்திமிகுந்த தலைவராக இருக்கிறார்.

Presentational grey line

7.45: டிரம்புடன் இருப்பது யார்?

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் ஒரு பக்கம் அமெரிக்க உள்துறை செயலாளர் மைக் போம்பியோவும், இன்னொரு பக்கம் வெள்ளை மாளிகை பணியாளர்களின் தலைவர் ஜான் எஃப். கெல்லியும் அமர்ந்திருக்கிறார்கள்.

பாதுகாப்பு ஆலோசகர் ஜான் போல்டனும் அந்த அறையில் உள்ளார்.

7.40: மனித உரிமை குறித்த உரையாடல் எங்கே?

வட கொரியாவிலிருந்து தப்பி அமெரிக்கா சென்ற கிரேஸ் ஜோ பிபிசியிடம், “மனித உரிமை குறித்து இந்த சந்திப்பில் விவாதிக்கப்படாமல் இருப்பது எனக்கு கவலை அளிக்கிறது. அணு ஆயுத விவகாரத்தை மனித உரிமை விவகாரத்திலிருந்து பிரித்தெடுக்க முடியாது. மக்கள் பஞ்சத்தில், பசியில் மாண்டு கொண்டிருந்தபோது, அவர்கள் (வட கொரியா) அணு ஆயுதங்களை உருவாக்குவதில் தீவிரமாக இருந்தனர்” என்கிறார்.

7.25: தனியாக நூலகத்தில் பேச்சு வார்த்தை நடத்திய டிரம்பும், கிம்மும் பேச்சுவார்த்தை முடித்து வெளியே வந்தனர்.

7.22 :கிம் ஜோங் – உன்னின் ஆங்கில அறிவு எப்படி?

‘நைஸ் டூ மீட் யூ மிஸ்டர் பிரஸிடெண்ட்,” என்று ஆங்கிலத்தில் டிரம்பிடம் பேசி உள்ளார் கிம்.

வட கொரியா தலைவர்கள் குறித்து வெளி உலகத்திற்கு அதிகம் தெரியாது. ஆனால், கிம் ஆங்கிலத்தில் புலமை பெற்றவர் என்று கூறப்படுகிறது.

7. 12: இந்த சந்திப்பு குறித்து தென் கொரியா என்ன சொல்கிறது?

தென் கொரியா அதிபர் தொடர்ந்து இது குறித்து பகிர்ந்த ட்வீட்டுகளில், இதனை முக்கியத்துவம் வாய்ந்த வாரலாற்று நிகழ்வாக வர்ணித்துள்ளார். “போரிலிருந்து அமைதியை நோக்கி நகர்ந்த வரலாற்று மைல்கல்’ இது என்கிறார்.

7.05: தென் கொரியா அதிபர் மூன் ஜே – இன் இந்த வரலாற்று சிறப்புமிக்க சந்திப்பை நேரலையில் பார்த்துக் கொண்டிருக்கிறார்.

7. 00: உலகமே இந்த பேச்சுவார்த்தையை கவனித்துக் கொண்டிருக்கிறது. ஆனால், வட கொரியாவை தவிர.

பிரபல தொலைக்காட்சி மானிட்டரிங் குழு, ஒரே தருணத்தில் தென் கொரியா, சீனா, ஜப்பான் மற்றும் வடகொரியாவில் ஒளிபரப்பு செய்யப்படும் நிகழ்வினை ஸ்க்ரீன்சாட் எடுத்தது.

எப்படி இருந்தது அந்த கைகுலுக்கல்?

6.44: மனப்பூர்வமானதாக இருந்தது. ஆனால், அதே நேரம் மிகை நட்பானதாக இல்லை. தென் கொரியா அதிபர் மூன் ஜே வை சில வாரங்களுக்கு முன், கிம் சந்தித்தபோது இருவரும் ஆரத்தழுவிக் கொண்டனர். ஆனால், அப்படியான இணக்கும் இல்லை.

6. 42: ‘இப்போது நாம் இருக்கும் இடத்தை அடைந்திருப்பது, அவ்வளவு எளிதானது இல்லை’ என்கிறார் வட கொரிய அதிபர் கிம்.

6.33: எதை குறித்தெல்லாம் பேச இருக்கிறார்கள். தென் கொரிய மற்றும் வட கொரிய சண்டையை அதிகாரப்பூர்வமாக முடிவுக்கு கொண்டு வருவது. வட கொரியா மற்றும் அமெரிக்க இடையே நிலவும் பதற்றத்தை தணிப்பது. இயன்றால் வட கொரியாவில் அமெரிக்க தூதரகம் திறப்பது. வட கொரியாவை அணு ஆயுதமற்ற நாடாக்குவது. தென் கொரியாவில் உள்ள அமெரிக்க படைகளை திரும்ப பெறுவது. இவை குறித்தெல்லாம் உரையாட இருக்கிறார்கள். ஆனால், இவை அனைத்தையும் 45 நிமிடங்களில் பேசி ஒரு தீர்வை எட்டிவிட முடியுமா?

6.30 : முதலில் இரு நாட்டு தலைவர்களும் தனியாக சந்திக்கிறார்கள். அவர்களுடன் மொழிப்பெயர்ப்பாளர்கள் மட்டும் இருப்பார்கள். சில மணிதுளிகளுக்கு பின்பே, பிற அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடக்கும் அறை உள்ளே வருவார்கள்.

6.28: இரு நாட்டு தலைவர்களும் பேச்சுவார்த்தை நடைபெற இருக்கும் கேப்பல்லா விடுதிக்கு வந்தடைந்தனர்.

6.22: இந்த பேச்சுவார்த்தை குறித்த வரைகலைப்படம் ட்வீட்டர் மற்றும் இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்டுள்ளது.

6.14: பேச்சுவார்த்தைக்கு முன் டிரம்பிற்கு ஒரு கெட்ட செய்தி வந்துள்ளது. அவரது பொருளாதார ஆலோசகர் மாரடைப்பின் காரணமாக அமெரிக்காவில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்.

6.13: பேச்சுவார்த்தை இங்குதான் இன்னும் 20 நிமிடங்களில் நடைபெற இருக்கிறது.

6.03: கிம் உள்ளூர் நேரப்படி 2 மணிக்கு புறப்படுகிறார். இதனை அறிந்த உள்ளூர் மக்கள் ஆச்சர்யம் அடைந்ததாக கூறுகிறார் பிபிசி செய்தியாளர் ரூபர்ட் விங் ஃபீல்ட். இரண்டு நாட்கள் தங்கி நீண்ட பேச்சுவார்த்தையை இரு நாட்டு தலைவர்களும் நடத்துவார்கள் என்று அம்மக்கள் எதிர்பார்த்ததாக விவரிக்கிறார் ரூபர்ட்.

5.55 : சென்டோசா தீவு வந்தடைந்தார் டிரம்ப்

5. 48 : கிம் ஜோங் – உன்னை புகழ்வது வருத்தம் தருகிறது என்கிறார்கள் வட கொரியாவிலிருந்து தப்பி வந்த மக்கள். அவர்கள் பிபிசி செய்தியாளர்கள் ஹீத்தர் சென் மற்றும் மிஞ்சி லீ ஆகியோருடன் தங்கள் வட கொரிய அனுபவங்களை பகிர்ந்துக் கொள்கிறார்கள். வட கொரியாவிலிருந்து தப்பிய ஓவிய கலைஞரான சோய், “வட கொரியாவில் நாங்கள் மிகவும் கொடுமைபடுத்தப்பட்டோம். உலக தலைவர்களுடன் கிம் அணிவகுத்து வருவது என்னை கோபப்படுத்துகிறது.” என்கிறார். சோய் வட கொரியாவிலிருந்து 2012 ஆம் ஆண்டு தப்பி தென் கொரியா சென்றார்.

 

 

 

 

 

About இனியவன்

x

Check Also

ஆஃபிரிக்காவின் இளம் கோடீஸ்வரர் கடத்தல்

ஆஃபிரிக்காவில் இளம் கோடீஸ்வரர் என்று கூறப்பட்ட மொஹமத் டஹ்ஜி, முகமூடி அணிந்த துப்பாக்கிதாரி ஒருவரால் டான்சானியாவின் முக்கிய நகரமான டர் ...

%d bloggers like this: