இருதரப்பு வரலாற்று உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில் ஜப்பான் சென்றுள்ள ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன ஜப்பான் பேரரசர் அகிஹித்தோவை சந்தித்துள்ளார்.
பேரரசர் அகிஹித்தோவும், பேரரசி மிச்சிக்கோவும் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுக்கும், முதற் பெண்மணி ஜயந்தி சிறிசேனவுக்கும் மகத்தான வரவேற்பு அளித்தார்கள்.
ஜனாதிபதியின் விஜயம் பற்றி மகிழ்ச்சி வெளியிட்ட ஜப்பான் பேரரசர், அவரது வருகை இருதரப்பு உறவுளை மேலும் வலுப்படுத்தும் என்று நம்பிக்கை வெளியிட்டார். ஜப்பானுக்கு விஜயம் செய்யுமாறு விடுத்த அழைப்பு பற்றியும் ஜனாதிபதி நன்றி தெரிவித்தார்.
இலங்கைக்கு 1981ஆம் ஆண்டு காலப்பகுதியில் தாம் விஜயம் செய்ததாகக் கூறிய ஜப்பான் பேரரசர், அந்த விஜயத்தின் போது தலதா மாளிகைக்கு சென்று வழிபாடுகளில் ஈடுபட்டதாகவும் குறிப்பிட்டார். இலங்கைக்கு எந்த வேளையிலும் உதவி வழங்க தாம் தயார் என ஜப்பான் பேரரசர் அகிஹித்தோ குறிப்பிட்டார்.