Home / உலகச் செய்திகள் / சிங்கப்பூர் மக்கள் என்ன நினைக்கிறார்கள்?

சிங்கப்பூர் மக்கள் என்ன நினைக்கிறார்கள்?

லிட்டில் இந்தியா – இந்த பதமே அதில் பொதிந்துள்ள அனைத்து தகவல்களையும் விவரித்துவிடுகிறது. இரண்டு கிலோமீட்டர் பரப்பில் விரிந்துள்ள இந்தப் பகுதியில் பெரும்பாலானோர்கள் இந்தியர்கள். ஆயிரத்திற்கும் மேற்பட்ட கடைகளின் உரிமையாளர்கள் இந்தியர்கள். அதிலும் குறிப்பாக தமிழர்கள்.

பதினைந்து ஆண்டுகளுக்கு முன் சிங்கப்பூர் வந்த பிரகாஷ் இந்தப் பகுதியில் ஒரு உணவகத்தை நடத்தி வருகிறார். அவர், “இரண்டு கிலோமீட்டர் பரப்பில் உள்ள இந்த பகுதியில் மட்டும் ஏறத்தாழ 300 உணவகங்களுக்கு மேல் உள்ளன. இந்தியாவுக்கு வெளியே ஒரு சிறிய பரப்பில் இத்தனை உணவகங்களை வேறு எங்கும் காண முடியாது.”

‘எங்கு காணினும் தமிழ்’

லிட்டில் இந்தியா பகுதியில் உள்ள சந்தையில் எங்கும் மக்கள் நீக்கமற நிறைந்து இருக்கிறார்கள். இந்திய சந்தைகளை போல அங்கு வழிகளை கண்டுபிடிப்பது அவ்வளவு சுலபமாக இல்லை.

சந்தையின் இருபக்கமும் உள்ள கடைகளின் பெயர் பலகைகளில் தமிழே பிரதானமாக காணப்படுகின்றன. சிங்கப்பூரின் மக்கள் தொகையில் ஏழு சதவீதம் பேர் லிட்டில் இந்தியாவில்தான் வசிக்கிறார்கள்.

சீனர்கள் மற்றும் மலாய் மக்களுக்கு அடுத்து தமிழர்கள்தான் சிங்கப்பூரில் அதிக எண்ணிக்கையில் வசிக்கிறார்கள். சிங்கப்பூரை கட்டியெழுப்பியதில் தமிழர்களுக்கு ஒரு முக்கிய பங்கு உள்ளது.

தமிழும் சிங்கப்பூரின் அலுவல் மொழிகளில் ஒன்று.

சிங்கப்பூர் அமைச்சகத்தில் பல அமைச்சர்கள் தமிழர்கள். குறிப்பாக, வெளியுறவுத் துறை அமைச்சர் விவியன் பாலக்கிருஷ்ணன்.

தமிழர்களுக்கு அடுத்து தெலுங்கு, பஞ்சாபி மக்கள் கணிசமான எண்ணிக்கையில் வசிக்கிறார்கள்.

லிட்டில் இந்தியாவும், லாஜ்பட் நகரும்

லிட்டில் இந்தியா பகுதி ஞாயிற்றுக்கிழமைகளில் டெல்லி லாஜ்பட் நகர் போலவே இருக்கிறது. எங்கு காணினும் மக்கள் கூட்டம். வணிக வளாகங்களில் பெரும் எண்ணிக்கையில் மக்கள் கூடுகிறார்கள். பிரபலமான உணவகங்களில் உணவு அருந்துவதற்காக நீண்ட வரிசையில் மக்கள் காத்திருக்கிறார்கள்.

கடைகள் மட்டுமல்ல இந்த லிட்டில் இந்தியாவில் குடியிருப்புகளும் இருக்கிறது. அந்நாட்டின் பிறபகுதிகளில் உள்ள வீடுகளின் தோற்றத்தில் இல்லாமல், வேறு வடிவத்தில் இருக்கின்றன இங்குள்ள வீடுகள்.

இந்தியாவை பூர்வீகமாக கொண்ட பலர் சிங்கப்பூர் அமைச்சரவையில் இருக்கிறார்கள். அதே நேரம் அவர்கள் தங்கள் துறைகளை தாண்டி பிற அரசியல் நிகழ்வுகளில் அதிகம் கவனம் செலுத்துவதாக தெரியவில்லை.

அதனால்தான், செவ்வாய்க்கிழமை நடக்க இருக்கும் வரலாற்று சிறப்புமிக்க, அமெரிக்கா அதிபர் டிரம்ப் மற்றும் வட கொரியா அதிபர் கிம் ஜோங் – உன் சந்திப்பில் அதிகம் கவனம் செலுத்தாமல் அவர்கள் இருக்கிறார்கள் என்கிறார்கள் சிங்கப்பூர் மக்கள்.

இந்த சந்திப்பினால் தங்களுக்கு வருவாய் இழப்பு ஏற்படுவதாக கூறுகிறார் ஒரு டாக்சி ஓட்டுநர். அவர், “இந்த மாநாட்டின் காரணமாக, நகரெங்கும் பாதுகாப்பு வசதிகள் அதிகரிக்கப்பட்டுள்ளது. பல சாலைகள் அடைக்கப்பட்டுள்ளது மாற்று பாதைகளில் செல்ல வேண்டி இருக்கிறது. இதனால் வாடிக்கையாளர்களை இழக்க நேரிடுகிறது.” என்கிறார்.

‘ஆர்வம் இல்லை, பெருமிதம் இருக்கிறது’

நான் பார்த்தவரை டிரம்ப் – கிம் சந்திப்பில் சிங்கப்பூர் மக்களுக்கு பெரிதாக ஆர்வம் இல்லை. அதேநேரம், தங்கள் நாட்டில் இந்த சந்திப்பு நடப்பது குறித்த பெருமிதம் சிங்கப்பூர் மக்களுக்கு இருக்கிறது என்பதை அங்கு சிலரிடம் உரையாடிய போது உணர முடிந்தது.

நம்மிடம் பேசிய ஒருவர் பெருமிதத்துடன், “சிங்கப்பூர் மதிக்கப்படும்” என்றார்.

ஞாயிற்றுக்கிழமை சிங்கப்பூர் பிரதமரை சந்தித்த கிம் ஜோங் – உன், “இந்த மாநாடு வெற்றி அடைந்தால், அதற்கு சிங்கப்பூரும் ஒரு காரணம்” என்றார்.

‘2500 செய்தியாளர்கள்’

இந்த மாநாட்டிற்காக அரசாங்கம் பெரிய அளவில் சிறப்பான ஏற்பாடுகளை செய்துள்ளது. அதிகளவில் போலீஸ் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருக்கிறார்கள். உலகெங்கிலுமிருந்து ஏறத்தாழ 2500 செய்தியாளர்கள் இந்த மாநாடு குறித்து செய்தி சேகரிக்க வந்திருக்கிறார்கள்.

அங்கு எந்த செய்திதாளை வாங்கி படித்தாலும், எந்த தொலைக்காட்சி சேனலை மாற்றினாலும் இந்த சந்திப்பு குறித்த செய்திதான் முதன்மையாக இருக்கிறது.

அரை கி.மீ தொலைவில் இரு தலைவர்கள்

அமெரிக்க அதிபர் டிரம்பும், வட கொரிய அதிபர் கிம் ஜோங் – உன்னும் அரை கிலோமீட்டர் தொலைவில் இரு வேறு ஐந்து நட்சத்திர விடுதியில் தங்கி இருக்கிறார்கள்.

இருநாட்டு தலைவர்களும் செவ்வாய்க்கிழமை மாலை சிங்கப்பூரில் உள்ள சென்டோசா தீவில் சந்திக்கிறார்கள். அமெரிக்க அதிபரை சந்திக்கும் முதல் வட கொரிய தலைவராக கிம் ஜோங் உன் இருப்பார்.

வட கொரியா அணு ஆயுதமற்ற நாடாக மாற அமெரிக்கா விரும்புகிறது.

வடக்கு மற்றும் தென் கொரியா இடையே சண்டை நிறுத்தம் 1952 ஆம் ஆண்டு முதல் உள்ளது. ஆனால், அமைதி ஒப்பந்தம் ஏதும் இல்லை.

எப்படி அப்போதைய அமெரிக்க அதிபர் பில் கிளிண்டன் மேற்பார்வையில் 1993ஆம் ஆண்டு பாலத்தீன தலைவர் யாசர் அராபத், இஸ்ரேல் பிரதமர் ராபின் இடையே நடந்த சந்திப்பு வரலாற்றில் முக்கிய இடம் பிடித்ததோ, சிங்கப்பூர் மாநாடு வெற்றிப் பெற்றால் இந்த சந்திப்பும் வரலாற்றில் அழுத்தமான இடத்தை பிடிக்கும்.

About இனியவன்

x

Check Also

பயங்கரவாதத்தை ஆதரித்த அவுஸ்திரேலிய செனட்டர் மீது முட்டைத் தாக்குதல்!

49 பேர் மரணமடைந்த நியூசிலந்துப் பள்ளிவாசல் தாக்குதல்களைப்பற்றி அஸ்திரெலிய செனட்டர் ஃப்ரேஷர் அன்னிங்  வெளியிட்ட கருத்துகள் உலகளவில் விமர்சிக்கப்பட்டது. அந்தச் சர்ச்சைக்கு மத்தியில் ...

%d bloggers like this: