கண்டியில் வன்முறைகள் இடம்பெற்ற பகுதிக்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று சனிக்கிழமை காலை விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார்.
கண்டியின் சில பகுதிகளுக்கு விஜயம் செய்த பிரதமர் உள்ளிட்ட குழுவினர், தாக்குதல் நடத்தப்பட்ட மற்றும் சேதங்களுக்கு உள்ளாகிய வர்த்தக நிலையங்கள், பள்ளிவாசல்கள், வீடுகளுக்கும் சென்று பார்வையிட்டனர்.
பிரதமரின் இந்த விஜயத்தில் அமைச்சர்களான லக்ஷ்மன் கிரியெல்ல, ரவூப் ஹக்கீம் உள்ளிட்டவர்களும் கலந்துகொண்டிருந்தனர்.
கள நிலவரங்களை விசாரித்த பிரதமர் ரணில், இன்று பகல் மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற விசேட கலந்துரையாடலிலும் ஈடுபட்டார்.
திகன, கெங்கல்ல பகுதிகளில் ஏற்பட்ட வன்முறைகளில் முஸ்லிம் வர்த்தக நிலையங்கள், வீடுகளில் ஏற்பட்ட இடிபாடுகள் இதுவரை அகற்றப்படாத நிலையில் பிரதமர் தலைமையிலான குழுவினர் இவற்றை பார்வையிட்டுள்ளனர்.
அத்துடன் பாதிக்கப்பட்ட பிரிவினரில் சிலருடன் பிரதமர் தலைமையிலான குழுவினர் கலந்துரையாடலையும் நடத்தியுள்ளனர்.
கண்டி திகன மற்றும் தெல்தெனிய பகுதியில் இடம்பெற்ற கொலைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு இடம்பெற்ற வன்முறைகளினால் நூற்றுக்கும் மேற்பட்ட வர்த்தக நிலையங்கள், வீடுகள் என்பன சேதமாக்கப்பட்டன.
இதன் காரணமாக 5 நாட்களுக்கு பொலிஸ் ஊரடங்குச் சட்டமும் அமுல்படுத்தப்பட்டு நேற்று நீக்கப்பட்டது.
இந்த நிலையில் பாதிப்பு இடம்பெற்ற பகுதிக்கு விஜயம் செய்த பிரதமர், அதனைத் தொடர்ந்து கண்டி மாவட்ட செயலகத்தில் அதிகாரிகளுடன் சந்திப்பை நடத்தினார்.
எதிர்வரும் வெள்ளிக்கிழமைக்கு முன்னதாக ஏற்பட்ட பாதிப்புக்களை சரிசெய்வதற்கு அதிகாரிகளை பணித்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, பாதிக்கப்பட்டவர்களுக்கு நட்டஈட்டுத் தொகையையும் வழங்கும்படியும் உத்தரவிட்டார்.
மேலும் உயிரிழந்தவர்களின் உறவினர்களுக்கு முதற்கட்டமாக ஒரு இலட்சம் ரூபாவும், அடுத்த அமைச்சரவைக் கூட்டத்தின் பின்னர் 4 இலட்சம் ரூபாவை வழங்கவும் எதிர்பார்ப்பதாக பிரதமர் தெரிவித்தார்.