Home / விளையாட்டுச் செய்திகள் / உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று ஆட்டத்தில் இந்தியா – ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றன.

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று ஆட்டத்தில் இந்தியா – ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றன.

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் சவுத்தாம்டன் நகரில் இன்று பிற்பகலில் நடைபெறும் ஆட்டத்தில் இந்தியா – ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றன.

விராட் கோலி தலைமையிலான இந்திய அணி 4 ஆட்டங்களில் விளையாடி 3 வெற்றிகளுடன் 7 புள்ளிகள் பெற்று பட்டியலில் 4-வது இடத்தில் உள்ளது. ‘மேன் இன் புளூ’ என வர்ணிக்கப்படும் இந்திய அணியானது தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் ஆகிய அணிகளுக்கு எதிராக முழுமையான செயல்திறன்களை வெளிப்படுத்தி வெற்றி கண்டிருந்தது. அதேவேளையில் நியூஸிலாந்து அணிக்கு எதிரான ஆட்டம் மழை காரணமாக ரத்தாகியிருந்தது.

அணியின் டாப் ஆர்டர் பேட்டிங் நிலைத் தன்மையான வகையில் சிறந்த தொடக்கம் அமைத்து கொடுப்பது, பந்து வீச்சாளர்கள் உயர்மட்ட செயல்திறனை வெளிப்படுத்துவது, சில அற்புதமான பீல்டிங் என இந்திய அணி வெற்றி பெற்ற 3 ஆட்டங்களிலும் ஆதிக்க போக்கை கடைபிடித்திருந்தது. ரோஹித் சர்மா இரு சதங்கள், ஒரு அரை சதம் என 319 ரன்கள் சேர்த்து அதிக ரன்கள் விளாசியவர்களின் பட்டியலில் 4-வது இடத்தில் உள்ளார்.

கடைசியாக பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 113 பந்துகளில் 140 ரன்கள் விளாசிய அவரிடம் இருந்து மேலும் ஒரு சிறந்த ஆட்டம் வெளிப்படக்கூடும். 2 அரை சதங்கள் அடித்துள்ள விராட் கோலி, களமிறங்கிய முதல் ஆட்டத்திலேயே 57 ரன்கள் சேர்த்த கே.எல்.ராகுல் ஆகியோரும் சிறந்த வடிவில் உள்ளனர்.

இது ஒருபுறம் இருக்க பெருவிரலில் ஏற்பட்டுள்ள காயம் காரணமாக ஷிகர் தவண் விலகியுள்ளது, தொடை பகுதியில் ஏற்பட்டுள்ள தசைப் பிடிப்பால் புவனேஷ்வர் குமார் அவதிப்பட்டு வருவது இந்திய அணி நிர்வாகத்தை சற்று கவலையடைச் செய்துள்ளது. இவை தவிர காயம் அடைந்துள்ள வீரர்களின் பட்டியலில் தற்போது விஜய் சங்கரும் இணைந்துள்ளார்.

பயிற்சியின் போது ஜஸ்பிரித் பும்ரா வீசிய யார்க்கரானது விஜய் சங்கரின் கணுக்காலை பதம் பார்த்தது. இதனால் இன்றைய ஆட்டத்தில் விஜய் சங்கர் களமிறங்குவது சந்தேகம் என கூறப் பட்டது. ஆனால் நேற்றுமுன்தினம் நடைபெற்ற பத்திரிகையாளர்கள் சந்திப்பின் போது, விஜய் சங்கருக்கு ஏற்பட்ட காயம் பயப்படும்படியானது இல்லை. போட்டிக்கான உடற் தகுதியை அவர், அடைந்துவிடுவார் என பும்ரா கூறியிருந்தார்.

ஒருவேளை விஜய் சங்கருக்கு ஓய்வு கொடுக்கப்பட்டால் தினேஷ் கார்த்திக் அல்லது ரிஷப் பந்த்துக்கு வாய்ப்பு வழங்கப்படக்கூடும். அதேவேளையில் புவனேஷ்வர்குமார் இடத்தை மொகமது ஷமி பூர்த்தி செய்ய உள்ளார்.

குல்பாதின் நயிப் தலைமையிலான ஆப்கானிஸ்தான் அணியானது உலகக் கோப்பை தகுதி சுற்று ஆட்டங்கள், கடந்த ஆண்டு நடைபெற்ற ஆசிய கோப்பை தொடர் ஆகியவற்றில் செய்த மாயாஜாலங்களை இம்முறை பிரதிபலிக்கச் செய்யத் தவறியது. அந்த அணி இதுவரை மோதிய 5 ஆட்டங்களிலும் படுதோல்விகளை சந்தித்துள்ளது.

இந்த ஆட்டங்களில் பேட்டிங், பந்து வீச்சில் சராசரிக்கும் குறைந்த அளவிலான செயல்திறனையே ஆப்கானிஸ்தான் அணி வெளிப்படுத்தியுள்ளது. மேலும் மோசமான பீல்டிங்கும் அந்த அணிக்கு பாதகமாக அமைந்தன. நட்சத்திர சுழற்பந்து வீச்சாளரான ரஷித் கான் பார்மில் இல்லாதது ஒட்டுமொத்த அணியையும் பாதித்துள்ளது.

இந்தத் தொடரில் 4 இன்னிங்ஸில் 31.5 ஓவர்களை வீசியுள்ள ரஷித் கான் 224 ரன்களை தாரை வார்த்த நிலையில் 3 விக்கெட்களை மட்டுமே கைப்பற்ற முடிந்தது. ஆப்கானிஸ்தான் அணியில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய பந்து வீச்சாளர்கள் என யாரும் இல்லாத சூழ்நிலையை இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் சரியாக பயன்படுத்திக் கொள்ள முயற்சிக்கக்கூடும். இன்றைய ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி பெறும் பட்சத்தில் அரை இறுதிக்கு முன்னேறுவதற்கான வாய்ப்பை நெருங்கும்.

அணி விவரம்

இந்தியா: விராட் கோலி (கேப்டன்), ரோஹித் சர்மா, கே.எல்.ராகுல், மகேந்திர சிங் தோனி, கேதார் ஜாதவ், ரிஷப் பந்த், தினேஷ் கார்த்திக், ஹர்திக் பாண்டியா, விஜய் சங்கர், ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், யுவேந்திர சாஹல், மொகமது ஷமி, ஜஸ்பிரித் பும்ரா, புவனேஷ்வர் குமார்.

ஆப்கானிஸ்தான்: குல்பாதின் நயிப் (கேப்டன்), இம்ராம் அலி கில், நூர் அலி ஸத்ரன், ஹஸ்ரத்துல்லா ஷசாய், ரஹ்மத் ஷா, அஸ்கர் ஆப்கான், ஹஸ்மதுல்லா ஷாகிதி, நஜிபுல்லா ஸத்ரன், சமியூல்லா ஷின்வாரி, மொகமது நபி, ரஷித் கான், தவ்லத் ஸத்ரன், அப்தாப் ஆலம், ஹமித் ஹசன், முஜீப் உர் ரஹ்மான்

About இனியவன்

x

Check Also

இலங்கை VS மேற்கிந்திய தீவுகள் இறுதி T20 போட்டி இன்று!

இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான இரண்டாவதும் இறுதியுமான இருபதுக்கு இருபது கிரிக்கெட் போட்டி இன்று இடம்பெறவுள்ளது. மேற்கிந்திய ...

%d bloggers like this: