Home / உள்நாட்டு செய்திகள் / RADIOTAMIZHA | ஐக்கிய தேசிய கட்சிக்கும் அரசாங்கத்திற்கும் இடையில் ஒரு கலந்துரையாடல் இடம்பெற்றது.

RADIOTAMIZHA | ஐக்கிய தேசிய கட்சிக்கும் அரசாங்கத்திற்கும் இடையில் ஒரு கலந்துரையாடல் இடம்பெற்றது.

ஐக்கிய தேசிய கட்சிக்கும் அரசாங்கத்திற்கும் இடையில் – கொரோனா நோய்க்கிருமி தொற்றுப் பரவலுடன நாட்டில் உருவாகியுள்ள நிலைமை தொடர்பாக இன்று ஒரு கலந்துரையாடல் இடம்பெற்றது.

அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தி பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ மற்றும் என்னுடைய தலைமையில் – அமைச்சர்களான தினேஷ் குணவர்த்தன, நிமல் சிறிபால டி சில்வா, விமல் வீரவங்ச, பந்துல குணவர்த்தன, ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, டலஸ் அழகப்பெரும ஆகியோரும்;

ஐக்கிய தேசிய கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தி உப தலைவர் ரவீ கருணாநாயக, அர்ஜுன ரணதுங்க, ருவன் விஜேவர்த்தன, தயா கமகே, பாலித ரங்கேபண்டார, நவீன் திஸாநாயக, லக்ஷ்மன் விஜயமான்ன ஆகியோரும்;

எனது செயலாளர் கலாநிதி பீ.பி ஜயசுந்தர, நிதி அமைச்சின் செயலாளர் எஸ். ஆட்டிகல மற்றும் மத்திய வங்கியின் ஆளுநர் பேராசிரியர் டபிள்யு டீ. லக்ஷ்மன் ஆகியோரும் – ஜனாதிபதி செயலகத்தில் நிகழ்ந்த இந்த இரண்டு மணி நேர கலந்துரையாடலில் பங்கேற்றிருந்தனர்.

கொரோனா நோய்த்தொற்று நாட்டினுள் பரவுவதைத் தவிர்ப்பதற்கு அரசாங்கம் இதுவரை முன்னெடுத்துள்ள செயற்பாடுகள் மற்றும் எதிர்காலத்தில் திட்டமிட்டுள்ள நிகழ்ச்சித்திட்டங்கள் பற்றி நான் விரிவாக விளக்கினேன்.

தற்போது நோய்த்தொற்று உடையவர்களில் பெரும்பாலானவர்கள் நோய்த்தடுப்பு மத்திய நிலையங்களில் அடையாளம் காணப்பட்டவர்கள் அல்லது இதற்கு முன்னர் வைரஸ் தொற்றுக்குள்ளாகியவர்களுடன் நெருக்கமாகப் பழகியவர்களுக்கு மத்தியிலிருந்து அடையாளம் காணப்பட்டவர்கள். இது – நோய்க்கிருமி பரவலைக் கட்டுப்படுத்துவதற்குப் பெரிதும் உதவியது என்பதை நான் விளக்கினேன்.

மக்களின் வாழ்க்கையைச் சுமுகமாகப் பேணுவதற்கு அத்தியாவசிய சேவைகள், உணவுப் பொருட்கள், மருந்துப் பொருட்களை விநியோகிக்கும் பொறிமுறை மற்றும் விசேட செயலணி நடைமுறைப்படுத்தியுள்ள நிகழ்ச்சித்திட்டம் பற்றி அதன் தலைவரும் எனது சிறப்பு பிரதிநிதியுமான பசில் ராஜபக்ஷ அவர்கள் விளக்கினார்.

நாட்டில் இனம்காணப்பட்ட 65 லட்சம் குடும்பங்களில் 53 லட்சம் குடும்பங்களுக்கு ஏப்ரல் மாதம் 09 ஆம் திகதிக்கு முன்னர் 5000 ரூபாய்களைப் பெற்றுக்கொடுக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக பசில் ராஜபக்ஷ அவர்கள் குறிப்பிட்டார்.

நோய்த்தொற்றுப் பரவுவதை ஒழிப்பதற்காக முன்னெடுக்கப்பட்டுள்ள நிகழ்ச்சித்திட்டம் மக்களின் இயல்பு வாழ்க்கைக்கு ஏற்படுத்தக்கூடிய தடைகளைக் குறைக்கும் வகையில் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பது இருதரப்பினதும் கருத்தாக இருந்தது.

இந்த நிகழ்ச்சித் திட்டம் அரசியல் சார்பற்றதாக இருக்க வேண்டும் என்பதிலும் இரு தரப்பினரும் உடன்பட்டனர்.

நாட்டின் பொருளாதார செயற்பாடுகள் வீழ்ச்சியுறாது தொடர்ச்சியாகப் பேணுவதும் அரச ஊழியர்கள், வர்த்தகர்கள், பெருந்தோட்டத் துறை மக்கள் மற்றும் நாளாந்தம் பல்வேறு தொழில்களில் ஈடுபட்டுள்ளவர்கள், சுய தொழில்களில் ஈடுபட்டுள்ளவர்கள் ஆகியோர் முகம்கொடுத்துள்ள சிரமங்கள் குறித்தும், அவற்றுக்கு வழங்க முடியுமான தீர்வுகள் குறித்தும் இரு தரப்பினரும் கலந்துரையாடினோம்.

மருத்துவர்கள், தாதிகள் உள்ளிட்ட அனைத்து சுகாதார ஊழியர்கள், மற்றும் முப்படையினர், காவல்துறையினர் உள்ளிட்ட அனைத்துப் பாதுகாப்புத் தரப்பினரின் அர்ப்பணிப்பும் இரு தரப்பினரினதும் பாராட்டுதலுக்கும் நன்றிகளுக்கும் உரித்தானது.

கலந்துரையாடலில் கலந்துகொண்டவர்கள் மாவட்ட மட்டத்தில் தத்தமது கட்சிப் பிரதிநிதிகளுக்கு அறிவூட்டுவதற்கும் உடன்பட்டதுடன், இரண்டு மணித்தியாலங்களுக்கும் மேல் இடம்பெற்ற இக்கலந்துரையாடல் மிகவும் சுமுகமாகவும் வெற்றிகரமாகவும் இடம்பெற்றது – ஜனாதிபதி ஊடக பிரிவு.

About இனியவன்

x

Check Also

உயித்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகள் நிறைவு

2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகள் நிறைவடைந்துள்ளதாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றுக்கு அறிவித்துள்ளனர். இது தொடர்பான கோப்புகள் ...