Home / உலகச் செய்திகள் / RADIOTAMIZHA | உலக நாடுகளை உலுக்கியெடுக்கும் கொரோனா-உயிரிழந்தோர் எண்ணிக்கை 83 ஆயிரத்தை தாண்டியது

RADIOTAMIZHA | உலக நாடுகளை உலுக்கியெடுக்கும் கொரோனா-உயிரிழந்தோர் எண்ணிக்கை 83 ஆயிரத்தை தாண்டியது

உலக நாடுகளை உலுக்கியெடுக்கும் கொரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை, 14 லட்சத்து 50 ஆயிரத்தை நெருங்கி கொண்டிருக்கிறது. உயிரிழந்தோர் எண்ணிக்கை 83 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

கொரோனா பாதிப்பால் கொத்து, கொத்தாக மரணங்களை எதிர்கொண்ட ஊகான் நகரம், ஆயிரக்கணக்கான உயிர்களை காவு கொடுத்த நிலையில், அதிலிருந்து, விடுபட்டு, தற்போது இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளது. இருப்பினும், சீனாவிலும், அங்கொன்றும், இங்கொன்றுமாக, கொரோனா பாதிப்பு இருந்து கொண்டு தான் இருக்கிறது.

தற்போதைய நிலவரப்படி, உலகளவில் கொரோனா தொற்று நோயால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை, 14,50,000ஐ நெருங்கி கொண்டிருக்கிறது. அந்த பெருந்தொற்றுக்கு பலியானோரின் எண்ணிக்கை, 83,000ஐ தாண்டியுள்ளது. சுமார் 3,09,000 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டுள்ளனர்.

இத்தாலியில் உயிரிழப்பு 17,127 ஆக அதிகரித்துள்ளது. பன்னாட்டளவில் கொரோனாவுக்கு உயிரிழந்தோர் பட்டியலில் இத்தாலி தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. அந்நாட்டில், 1,35,586 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

இத்தாலிக்கு அடுத்தபடியாக, அதிகளவில், கொரோனா மரணங்களை எதிர்கொண்டிருக்கும் நாடு ஸ்பெயின்..
ஸ்பெயினில் இன்று ஒரே நாளில் 510 பேர் பலியாகியுள்ளனர். இதனால், உயிரிழப்பு 14,555 ஆக உயர்ந்துள்ளது. அங்கு பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,46,690 ஆக அதிகரித்துள்ளது.

வல்லரசு நாடுகளின் முதன்மையானதாக தன்னை முன்னிறுத்தும் அமெரிக்கா, கட்டுக்கடங்காது பரவும் கொரோனா தொற்றுநோயால் ஆடிப்போயுள்ளது. குறுகிய காலத்தில், கொரோனா பாதிப்பும், பலியும் அதிகரித்துள்ளதால், அமெரிக்கா செய்வதறியாது திகைத்து நிற்கிறது. அமெரிக்காவில் பலியானோரின் எண்ணிக்கை, 12,857ஆக உயர்ந்துள்ளது. தொற்றுநோயால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 4 லட்சத்தை கடந்து, சென்று கொண்டிருக்கிறது.

பிரான்ஸ் தேசம் கொரோனாவுக்கு 10,328 பேரை பலி கொடுத்துள்ளது. அந்நாட்டில் 1,09,069 பேர், கொரோனா தொற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பிரிட்டனில் கொரோனாவுக்கு 55,242 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 6,159ஆக உயர்ந்துள்ளது.

ஸ்பெயினுக்கு அடுத்தபடியாக, பெல்ஜியத்தில், இன்று, ஒரே நாளில் 205 பேர் கொரோனாவுக்கு காவு கொடுக்கப்பட்டுள்ளனர். அங்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2,240ஆக உயர்ந்துள்ளது. 23,403 பேர் வரையில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனா பாதிப்பு வேகமெடுக்க தொடங்கிய சிங்கப்பூர், தாய்லாந்து, கத்தார், சவுதி அரேபியா, துபாயை உள்ளடக்கிய ஐக்கிய அரபு அமீரகம், தென் ஆப்பிரிக்கா, சிலி, கொலம்பியா போன்ற நாடுகளில், புதிதாக யாருக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில், அந்த தொற்றுநோய் முழு அளவில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதை, புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE 

About Radio tamizha

x

Check Also

4 கொரோனா தடுப்பூசிகள் இறுதிகட்டத்தில் உள்ளது . ட்ரம்ப்

அமெரிக்காவில் 4 கொரோனா தடுப்பூசிகள் இறுதிகட்ட பரிசோதனை நிலையில் உள்ளதென ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். கொரோனா வைரஸை தடுக்கும் ...