Home / உள்நாட்டு செய்திகள் / 20ஆவது திருத்தச் சட்டமூலம் நாடாளுமன்றில் சமர்ப்பிப்பு

20ஆவது திருத்தச் சட்டமூலம் நாடாளுமன்றில் சமர்ப்பிப்பு

அரசியலமைப்பின் 20ஆவது திருத்தச் சட்டமூலம் நீதி அமைச்சர் அலி சப்ரியினால் சற்றுமுன்னர் நாடாளுமன்றில் முன்வைக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, திருத்தச் சட்டமூலத்திற்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பினை வெளியிட்டு வருகின்றனர்.

எதிர்ப்புகளுக்கு மத்தியில் 20ஆவது திருத்தச் சட்டமூலம் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ளது

அரசியலமைப்பின் 20ஆவது திருத்தச் சட்டமூலம் இன்று (செவ்வாய்க்கிழமை) நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

நீதியமைச்சரும் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரியினால் இந்த சட்டமூலம் இன்றைய தினம் முதலாம் வாசிப்பிற்காக நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ளது.

அதன் பின்னர் அதனை சவாலுக்குட்படுத்தி யாரேனும் உயர் நீதிமன்றத்தை நாடினால் நீதிமன்றம் 21 நாட்களுக்குள் அதுதொடர்பான தீர்ப்பை தெரிவிக்கவேண்டும் என நாடாளுமன்ற செயலாளர் நாயக அலுவலகம் தெரிவித்துள்ளது.

குறித்த காலப்பகுதியில் இந்த அரசியலமைப்பு தொடர்பாக எந்தவொரு தீர்மானத்தையும் எடுக்க நாடாளுமன்றத்திற்கு உரிமை இல்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

நீதிமன்ற தீர்ப்பு வழங்கப்பட்டதன் பின்னரே இரண்டாம் வாசிப்பிற்காக அரசியலமைப்பு திருத்த சட்டமூலம் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படும்.

இரண்டாவது வாசிப்பு நிறைவடைந்த பின்னர் வாக்கெடுப்பு இடம்பெறவுள்ளதுடன், அதில் நாடாளுமன்றத்தில் மூன்றின் இரண்டு பெரும்பான்மையை பெற்றுக்கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்படுகின்றது.

பின்னர் செயற்குழு கூட்டத்தின் போது 20ஆவது திருத்தத்தின் அனைத்து பிரிவுகளையும் ஒவ்வொன்றாக ஆராய்ந்து திருத்தங்கள் இருப்பின் அதனை தெரிவிப்பதற்கு வாய்ப்பு வழங்கப்படும் எனவும் நாடாளுமன்ற செயலாளர் நாயக அலுவலகம் தெரிவித்துள்ளது.

அதனைத் தொடர்ந்து, மூன்றாவது வாசிப்பின்போது வாக்கெடுப்பு இடம்பெறவுள்ளதுடன், அதில் நாடாளுமன்றத்தில் மூன்றின் இரண்டு பெரும்பான்மையை பெற்றுக்கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்படுகின்றது.

இறுதியாக சபாநாயகர் அரசியலமைப்பில் கையொப்பமிட்டதை அடுத்து அது சட்டமாக மாறும் என நாடாளுமன்ற செயலாளர் நாயக அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

கடந்த செப்டம்பர் மாதம் 2ஆம் திகதி, உத்தேச 20ஆவது திருத்தச் சட்டமூலத்திற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியதுடன், செப்டம்பர் மாதம் 3ஆம் திகதி அது வர்த்தமானியில் வெளியாகியது.

20ஆவது திருத்தச் சட்டமூல வரைபிற்கு எதிர்க்கட்சிகள், சிவில் அமைப்புகள், மனித உரிமை ஆர்வலர்கள் என பல்வேறு தரப்பினரும் தங்களது எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றனர்.

இதனையடுத்து, 20ஆவது திருத்தச் சட்டமூல வரைபு தொடர்பாக ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிப்பதற்காக பிரதமரினால் குழுவொன்று நியமிக்கப்பட்டது.

பிரதமரினால் நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை கடந்த 15ஆம் திகதி பிரதமரிடம் கையளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, எவ்வித மாற்றங்களும் இன்றி, அரசியலமைப்பின் 20ஆவது திருத்தச் சட்டமூலம் இன்று நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படும் என அறிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

About VITHUSHA

x

Check Also

பருத்தித்துறை கடலில் கஞ்சா

தமிழ்நாட்டில் இருந்து சட்டவிரோதமாக கேரளா கஞ்சா கடத்தி வந்த மூவர் இன்று(22)பருத்தித்துறை கடலில் வைத்து கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். ரோந்தில் ...