Home / விளையாட்டுச் செய்திகள் / விஜய் வாழ்க்கையை மாற்றியது எது

விஜய் வாழ்க்கையை மாற்றியது எது

முத்தரப்பு தொடரில் வங்கதேசத்துக்கு எதிரான பைனல் தான் எனது கிரிக்கெட் வாழ்க்கையை மாற்றியது,’’ என விஜய் சங்கர் தெரிவித்தார்.

இந்திய அணி ‘ஆல் ரவுண்டர்’ தமிழகத்தின் விஜய் சங்கர் 29. கடந்த 2018 முத்தரப்பு ‘டுவென்டி–20’ தொடரின் பைனலில் (எதிர்–வங்கதேசம்) இவர் 19 பந்தில் 17 ரன் எடுக்க இந்திய அணிக்கு சிக்கல் ஏற்பட்டது. நல்லவேளையாக தினேஷ் கார்த்திக் 8 பந்தில் 29 ரன்கள் எடுத்து கோப்பை வெல்ல உதவினார்.

இருப்பினும் விஜய் சங்கர் மீது கடும் விமர்சனம் ஏற்பட்டது. இவற்றை தகர்த்து மீண்டும் அசத்திய இவர் உலக கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இடம் பிடித்தார். இதுகுறித்து விஜய் சங்கர் கூறியது:

கிரிக்கெட் வீரர் என்ற முறையில் முத்தரப்பு தொடரின் பைனல் தான் எனது வாழ்க்கையை மாற்றி விட்டது எனலாம். அன்று என்ன நடந்தது என எல்லோருக்கும் தெரியும். ஒரே நாளில் 50 அலைபேசி அழைப்புகள் வந்தன. பத்திரிகையாளர்கள் அடுத்தடுத்து அழைத்து, திரும்ப திரும்ப கேட்ட கேள்வியை கேட்டுக் கொண்டிருந்தனர். இது மிகப்பெரிய ஏமாற்றமாக இருந்தது.

இதிலிருந்து வெளியேற சற்று காலஅவகாசம் தேவைப்பட்டது. அதேநேரம், இந்த சம்பவம் தான், சிக்கலான நேரத்தில் இருந்து மீண்டு வருவது எப்படி என எனக்கு கற்றுக் கொடுத்தது. ஒரு மோசமான நாள் காரணமாக, இந்த உலகமே முடிந்து விடாது என எனக்கு உணர்த்தியது அந்த சம்பவம். எனக்கு மட்டுமல்ல, முன்னணி வீரர்கள் பலருக்கும் இதுபோல நடந்துள்ளன.

அந்த தொடரில் முதன் முறையாக அன்று தான் பேட்டிங் செய்தேன் என்பதால் அப்போதைக்கு என்ன செய்ய வேண்டும் என்பதை புரிந்து கொள்ள முடியவில்லை. ஆனால் இது தான் எனக்கு வாழ்க்கை பாடமாக அமைந்தது. இதன் பின் ஒவ்வொரு போட்டியிலும் 100 சதவீத அர்ப்பணிப்பு உணர்வுடன் செயல்பட வேண்டும் என முடிவு செய்தேன்.

இவ்வாறு விஜய் சங்கர் கூறினார்.

About இனியவன்

x

Check Also

உலகக்கிண்ணத்தை சுவீகரிக்கும் கனவு யாருக்கு நிஜமாகும்?

இம்முறை உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி  இன்று(14) நடைபெறவுள்ளது. முதற்தடவையாக உலகக்கிண்ணத்தை சுவீகரிக்கும் எதிர்பார்ப்புடன் இங்கிலாந்தும் நியூசிலாந்தும் இறுதிப்போட்டியில் களமிறங்கவுள்ளன. ...

%d bloggers like this: