Home / உள்நாட்டு செய்திகள் / ரிஷாட் பதியுதீனுக்கு எதிராக 66 உறுப்பினர்கள் கையொப்பம்!!

ரிஷாட் பதியுதீனுக்கு எதிராக 66 உறுப்பினர்கள் கையொப்பம்!!

அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கு எதிராக 10 குற்றச்சாட்டுகள் அடங்கிய அவநம்பிக்கை பிரேரணையை ஒன்றிணைந்த எதிரணி, சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் இன்று முற்பகல் கையளிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் வைத்து குறித்த அவநம்பிக்கை பிரேரணை கையளிக்கப்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

இந்த அவநம்பிக்கை பிரேரணையில் 66 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையொப்பமிட்டுள்ளனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

66 நாடாளுமன்ற உறுப்பினர்கள், அவநம்பிக்கை பிரேரணையில் நேரடியாக கையொப்பமிட்டுள்ளதுடன், வெளிநாடு சென்றுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களான ப்ரசன்ன ரணதுங்க மற்றும் சனத் நிஷாந்த ஆகியோர் அவநம்பிக்கை பிரேரணைக்கு ஆதரவளித்து சபாநாயகருக்கு தொலைநகல் மூலம் கடிதம் அனுப்பியுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்தில் சுயாதீன உறுப்பினர்களாக செயற்படும் அத்துரலிய ரத்தன தேரர், ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து அண்மையில் எதிரக்கட்சியில் இணைந்துகொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் அசோக ப்ரியந்த மற்றும் ஆனந்த அளுத்கமகே ஆகியோரும் அவநம்பிக்கை பிரேரணையில் கையொப்பமிட்டுள்ளனர்.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான டிலான் பெரேரா, எஸ்.பி. திஸாநாயக்க, திலங்க சுமத்திபால மற்றும் நிஷாந்த முத்துஹெட்டிகம ஆகியோரும் அவநம்பிக்கை பிரேரணையில் கைச்சாத்திட்டுள்ளனர்.

இதேநேரம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து எதிர்க்கட்சியில் இணைந்த நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரனும் குறித்த அவநம்பிக்கை பிரேரணையில் கையொப்பமிட்டுள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் தொடர்பில் கைது செய்யப்பட்ட ஒரு தரப்பினரை விடுவிக்குமாறு அழுத்தம் வழங்கியமை, கொழும்பு சினமன்ட் க்ரான்ட் விருந்தகத்தில் தற்கொலைக் குண்டுத் தாக்குதலை மேற்கொண்ட இன்ஷாப் அஹமட் இப்றாஹிம்முக்கு சொந்தமான வெல்லம்பிட்டியில் உள்ள செப்பு தொழிற்சாலைக்கு, விதிமுறைகளுக்கு அப்பற்சென்று கைத்தொழில்துறை அமைச்சின் வெற்று தோட்டாக்களை வழங்கியமை முதலான குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன.

அத்துடன், அமைச்சரின் சகோதரர்களுள் ஒருவரான ரிப்கான் பதியுதீன், இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு, மன்னார் காவல்துறை நிலையத்தில் கையளிக்கப்பட்டதன் பின்னர், நீதிமனறில் முன்னிலைப்படுத்தாமல் அழுத்தங்களின் அடிப்படையில் விடுவிக்கப்பட்டமை உள்ளிட்ட 10 குற்றச்சாட்டுகள், ஒன்றிணைந்த எதிரணியின் அவநம்பிக்கை பிரேரணையில் உள்ளடங்கியுள்ளது.

இந்த அவநம்பிக்கை பிரேரணை கையளிக்கப்பட்டதன் பின்னர் எமது செய்திச் சேவையிடம் கருத்து தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில, குறித்த பிரேரணையை விரைவில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள தினம் ஒன்றை ஒதுக்கித் தருமாறு சபாநாயகரிடம் கோரியுள்ளதாக தெரிவித்தார்.

இந்த நிலையில், கட்சித் தலைவர்களுடன் கலந்துரையாடி இதற்கான தீர்மானத்தை மேற்கொள்ள உள்ளதாக சபாநாயகர் கூறினார் என உதய கம்மன்பில குறிப்பிட்டுள்ளார்.

இதேநேரம், குறித்து அவநம்பிக்கை பிரேரணை நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டதன் பின்னர், அது குறித்து ஆராய உள்ளதாக ஜே.வி.பி தெரிவித்துள்ளது.

கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க இதனைத் தெரிவித்துள்ளார்.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

 

About அகமுகிலன்

x

Check Also

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவித்தல்!!

நாட்டின் பல பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யகூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. மத்திய் சப்ரகமுவ ...

%d bloggers like this: