Home / உள்நாட்டு செய்திகள் / ராஜபக்சவின் மீள்வருகை சீன – இலங்கை உறவுகளை மேலும் நெருக்கமாக்கும்

ராஜபக்சவின் மீள்வருகை சீன – இலங்கை உறவுகளை மேலும் நெருக்கமாக்கும்

 

மீண்டும் இந்தியாவின் முக்கிய அயல்நாடொன்று நீண்டகாலத்துக்கு இழுபடக்கூடிய சிக்கலான குழப்பநிலைக்கான சகல அறிகுறிகளையும் கொண்ட அரசியல் நெருக்கடியொன்றுக்குள் சிக்கியிருக்கிறது. இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையே குறிப்பாக பொருளாதார விவகாரங்களில் அண்மைய சில மாதங்களாக முறுகல் அதிகரித்துவந்ததது. ஆனால், கடந்த வெள்ளிக்கிழமை மாலை திடீரென விக்கிரமசிங்க பதவி நீக்கப்படுவார் என்று எவரும் எதிர்பார்த்திருக்கவில்லை.

விக்கிரமசிங்கவின் பதவி நீக்கம் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஆட்சியதிகாரத்துக்கு மீளவருவதற்கு வழியேற்படுத்தியிருக்கிறது. கடந்த பெப்ரவரியில் உள்ளூராட்சி தேர்தல்களில் அவரது புதிய கட்சி பெருவெற்றி பெற்ற நாளிலிருந்து ராஜபக்ச அரசியல் அதிகார மையத்துக்குத் திரும்பிவருவதற்காக தனது முயற்சிகளைத் தீவிரப்படுத்தியிருந்தார். அவர் பிரதமராக நியமிக்கப்பட்டதற்கு மறுநாள் ஜனாதிபதி சிறிசேன பாராளுமன்றத்தை நவம்பர் 16 வரை இடைநிறுத்துவதற்கு பிறப்பித்த உத்தரவையடுத்து நெருக்கடி இன்னொரு திருப்பத்தை எடுத்திருக்கிறது. பாராளுமன்றத்தில் தனக்கு பெரும்பான்மை ஆதரவு இருப்பதை நிரூபிப்பதற்கு தனக்கு உடனடியாக வாய்ப்புத்தரப்படவேண்டும் என்று விக்கிரமசிங்க வலியுறுத்திக்கொண்டிருந்த நிலையிலேயே பாராளுமன்றம் இடைநிறுத்தப்பட்டது.

 

விக்கிரமசிங்கவுடனான தனது கூட்டணியை முடிவுக்கு கொண்டுவருவதற்கு சிறிசேன தீர்மானித்ததும் புதிய பொதுத்தேர்தலை நடத்துவதற்கு வசதியாக பாராளுமன்றத்தைக் கலைத்திருந்தால் அது சரியான நடவடிக்கையாக இருந்திருக்கும். அடுத்த வருட இறுதியில் நடைபெறவிருக்கும் ஜனாதிபதி தேர்தல், அதைத்தொடர்ந்து நடத்தப்படவேண்டியிருக்கும் பொதுத்தேர்தல் ஆகியவற்றுக்கு முன்னதாக அதிகாரத்தைத் தக்கவைத்து தங்களது நிலைகளை வலுப்படுத்துவதே சிறிசேனவினதும் ராஜபக்சவினதும் பிரதானமான அக்கறை என்பதை நிகழ்வுப்போக்குகள் தௌளிவாக உணர்த்துகின்றன.

கால் நூற்றாண்டுக்கும் அதிகமான காலமாக நீடித்த உள்நாட்டுப்போரில் விடுதலை புலிகளைத் தோற்கடித்த ராஜபக்ச போர்க்குற்றங்கள், ஊழல் மோசடி மற்றும் குடும்ப அரசியல் ஆதிக்கம் தொடர்பில் குற்றச்சாட்டுகளுக்கு தொடர்ச்சியாக முகங்கொடுக்கவேண்டியவராக இருக்கிறார். ஆனால், தான் எந்த தவறையும் செய்யவில்லை என்று அவர் மறுத்துவருகிறார். அவரது மீள்வருகை அரசியல் எதிரிகளையும் ஊடகங்களையும் ஒடுக்குமுறைக்குள்ளாக்கிய ஒரு யுகத்துக்கு நாடு மீண்டும் திரும்பிச்செல்லக்கூடும் என்ற பீதியை சில வட்டாரங்களில் ஏற்கெனவே கிளப்பியிருக்கிறது.

உள்நாட்டுப் போரில் விடுதலை புலிகளுக்கு எதிராக அரசாங்கப்படைகள் கண்ட வெற்றிக்கு அரசியல் தலைமையை வழங்கியவர் என்ற காரணத்தால் இலங்கையில் தொடர்ந்து மிகுந்த செல்வாக்குடையவராக விளங்கும் ராஜபக்ச சீனாவுக்கு மிகவும் நெருக்கமானவராக நோக்கப்படுகிறார். கடந்த மாதம் இந்திய உயர்மட்டத் தலைவர்களுடன் பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்காக அவர் புதுடில்லிக்கு விஜயம் செய்திருந்தார் என்றபோதிலும் விக்கிரமசிங்கவே இந்தியாவுக்கு மிகவும் நெருக்கமானவராக கருதப்படுகிறார். ராஜபக்சவின் மீள்வருகை அயல்நாடுகளில் செல்வாக்கைச் செலுத்துவதற்காக சீனாவுடன் இந்தியா கடுமையான போட்டியில் ஈடுபட்டிருக்கும் ஒரு நேரத்தில் பெய்ஜிங்கிற்கும் இலங்கைக்கும் இடையேயான உறவுகள் மேலும் நெருக்கமடைய வழிவகுக்கலாம்.

” கடன்பொறி” யொன்றுக்குள் இலங்கை ஆழமாக விழுந்துவிடக்கூடுமென்ற அச்சத்துக்கு மத்தியிலும் ராஜபக்ச மீண்டும்  முக்கியமான திட்டங்களுக்கு நிதியுதவியைப் பெறுவதற்காக சீனாவை நாடக்கூடும்.கொழும்பு நிலைவரங்களை இந்தியா உன்னிப்பாக அவதானித்துக்கொண்டிருக்கிறது என்று அதிகாரிகள் கூறியதைத் தவிர இலங்கை அரசியல் நெருக்கடி குறித்து உத்தியோகபூர்வமாக இந்தியா இதுவரை பிரதிபலிப்பை வெளிப்படுத்தவில்லை.

இலங்கையின் நிலைவரங்களைக் கையாளுகின்றபோது இந்தியாவின் வெளியுறவுக்கொள்கை வகுப்பாளர்கள் இவ்வருட ஆரம்பத்தில் மாலைதீவில் ஏற்பட்ட  அரசியல் உறுதியின்மையில் இருந்து பெற்ற படிப்பினைகளை மனதிற்கொண்டு செயற்படவேண்டியது அவசியமானதாகும்.

 

About இனியவன்

x

Check Also

வெல்லம்பிட்டிய பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு இடமாற்றம்

வெல்லம்பிட்டிய பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உடன் அமுலுக்குவரும் வகையில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதியின் பேரில் இந்த இடமாற்றம் ...

%d bloggers like this: