Home / உள்நாட்டு செய்திகள் / ரவிகரன் மற்றும் அவர் சார்ந்த குழுவினர் திலீபனின் நினைவேந்தலை முன்னெடுக்க கூடாது

ரவிகரன் மற்றும் அவர் சார்ந்த குழுவினர் திலீபனின் நினைவேந்தலை முன்னெடுக்க கூடாது

வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் துரைராசா ரவிகரன் மற்றும் அவர் சார்ந்த குழுவினர் இம்முறை 18.09.2020 தொடக்கம் 26.09.2020 வரையான காலப்பகுதியில், திலீபனுடைய நினைவேந்தலையோ, உண்ணாவிரத நிகழ்வுகளையோ முன்னெடுக்கமுடியாது என முல்லைத்தீவு நீதிவான் நீதிமன்றம் தடைக்கட்டளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

முல்லைத்தீவு தலைமை பொலிஸ் பரிசோதகர் இது விடயம் தொடர்பில், முல்லைத்தீவு நீதிவான் நீதிமன்றத்தில் AR/681/2020 வழக்கிலக்கத்தில் வளக்குத்தாக்கல் செய்ததற்கமைய, நீதிமன்றம் குறித்த தடைக்கட்டளை உத்தரவினைப் பிறப்பித்துள்ளது.

இந் நிலையில் முல்லைத்தீவு தலைமைப் பொலிஸ் பரிசோதகர் நேற்று(வெள்ளிக்கிழமை) வடமாகாணசபையின் முன்னாள் உறுப்பினர் துரைராசா ரவிகரனின் இல்லத்திற்குச் சென்று நீதிமன்றத்தின் குறித்த தடைக்கட்டளை உத்தரவினை அவரிடம் கையளித்துள்ளார்.

குறித்த தடைக்கட்டளையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

முல்லைத்தீவு தலைமைப் பொலிஸ் பரிசோதகரினால், தடைசெய்யப்பட்ட தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் உறுப்பினராக இருந்த திலீபன் எனப்படும் இராசையா பார்த்தீபன் என்பவரை நினைவுகூரும் முகமாக துரைராசா ரவிகரன் ஆகிய உங்களால் உண்ணாவிரத நினைவு வைபவத்தினையும், ஒன்றுகூடல் கூட்டத்தினையும் 18.09.2020 தொடக்கம் 26.09.2020ஆம் திகதி வரையான காலப்பகுதியில் முல்லைத்தீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நடாத்துவதற்கு ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதாக விண்ணப்பித்து, இச் செயலானது பொலிஸ் சட்டக்கோவை 79(2)பிரிவின்கீழ் சேர்த்து வாசிக்கப்படும் 79(3) சட்டக்கோவைப் பிரிவின்கீழ் தண்டிக்கப்படவேண்டிய குற்றமாகும்.

மேலும் 1891ஆம் ஆண்டு 3ஆம் இலக்க தனிமைப்படுத்தல் மற்றும் நோய்கள் தடுப்புச்சட்டக்கோவையின் கீழ் தண்டிக்கப்படவேண்டிய குற்றம் என்பதுடன் பயங்கரவாதத் ஒழிப்பு சம்பந்தமாக 2011.08.29ஆம் திகதி வெளியிடப்பட்ட விசேட வர்த்தமானி இலக்கம் 1721/2கீழ் தண்டிக்கப்படவேண்டிய குற்றம் என விண்ணப்பத்தை மேற்கொண்டுள்ளார்.

இதனடிப்படையில் அரசினால் தடைசெய்யப்பட்ட அமைப்புத் தொடர்பில் பெயர்குறிப்பிடப்பட்ட நீவிர் எவ்விதமான உண்ணாவிரத நிகழ்வுகளையோ, நினைவேந்தல் கூட்டங்களையோ, வேறு ஏதேனும் வைபவங்களை 18.09.2020 தொடக்கம் 26.09.2020 வரையான காலப்பகுதியில் நடாத்துவதற்கு 1979ஆம் ஆண்டின் 15ஆம் இலக்க குற்றவியல் நடவடிக்கை சட்டக்கோவையின் 106(1) (3) பிரிவின் கீழ் எனக்கு வழங்கப்பட்ட அதிகாரத்தின் அடிப்படையில் தடைசெய்து கட்டளையாக்குகின்றேன்“ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

About VITHUSHA

x

Check Also

கிளிநொச்சியில் மறைத்து வைத்திருந்த வாள்கள்

கிளிநொச்சி- பளை, முல்லையடி பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், மூன்று வாள்கள் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன. ஏ9 வீதிக்கு அருகாமையில், மின்சார ...