Home / அறிவியல் CITY / யானையை தூக்கிலிட்டுக் கொன்ற கொடூரம்

யானையை தூக்கிலிட்டுக் கொன்ற கொடூரம்

அமெரிக்காவில் பாகனைக் கொன்ற யானையை தூக்கிலிட்டுக் கொன்ற கொடூரம்

அமெரிக்காவில் 19-ம் நூற்றாண்டுவாக்கில் பிரபலமான ஸ்பார்க்ஸ் வேர்ல்டு பேமஸ் சர்க்கஸ் நிறுவனத்தில் பார்வையாளர்களை மகிழ்விப்பதில் மேரியின் பெயர் மிகவும் பிரபலம். மேரி என்னும் பெயருக்கு ஏற்ப பார்வையாளர்களை கவர்ந்து குஷிப்படுத்துவதில் மேரியின் பங்கு அபாரமானது. தனது சகாக்களான மேலும் நான்கு யானைகளுடன் வியப்பூட்டும் வித்தைகளைச் செய்து மக்களின் கரகோஷத்தை மேரி பெற்று வந்தது.

இந்நிலையில் அமெரிக்காவின் டென்னிசி மாநிலத்தில் கடந்த 1916-ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் இந்த சர்க்கஸ் கம்பெனி முகாம் அமைத்தது. 12-9-1916 அன்று வழக்கம் போல் சர்க்கஸ் காட்சி நடந்தபோது மேரியை வழக்கமாக பராமரிக்கும் பாகனுக்குப் பதிலாக, அதே சர்க்கசில் வேலை செய்து வந்த ஒரு உதவியாளர் கையில் அங்குசத்துடன் மேரியின் முதுகில் ஒய்யாரமாக ஏறி அமர்ந்து மேடையில் வித்தைகளைக் காட்டத் தொடங்கினார்.

மேரியின் வாலை தும்பிக்கைகளால் பிடித்தவாறு மற்ற நான்கு யானைகளும் வழக்கம்போல் பார்வையாளர்களை பரவசப்படுத்திக் கொண்டிருந்த நேரத்தில் அங்கே ஓரமாகக் கிடந்த தர்பூசணி பழத் தோலின் மீது மேரியின் பார்வை திரும்பியது. அந்தநேரம் பார்த்து புதிய உதவியாளரான வால்டர் எல்ட்ரிட்ஜ் மேரியின் காதுப்புறத்தில் அங்குசத்தைப் பாய்ச்சினார். இதனால் மிரட்சி அடைந்த மேரி, தனது முதுகில் அமர்ந்திருந்த எல்ட்ரிட்ஜை தும்பிக்கையால் பிடித்து இழுத்து அருகாமையில் இருந்த குளிர்பானக் கடையின் மீது வீசியது. கீழே விழுந்து துடித்த அவரது தலையில் காலால் மிதித்து நசுக்கியது. இதனால் சம்பவ இடத்திலேயே எல்ட்ரிட்ஜ் துடிதுடித்து இறந்தார்.

கேளிக்கைக்காகவும் வேடிக்கைக்காகவும் சர்க்கஸ் பார்க்க கூடிய கூட்டம், இந்த கொடூர சம்பவத்தைப் பார்த்து திகிலடைந்து நின்றது. பார்வையாளர்களில் ஒருவர் தனது கைத்துப்பாக்கியை உருவி, மேரியை நோக்கி சரமாரியாக சுட்டார். அதன் தடித்த தோலுக்குள் பாய்ந்த ஐந்து குண்டுகள் மேரியை சற்றே நிலைகுலைய வைத்தாலும் உயிருக்கு பெரிய தீங்கு ஒன்றையும் ஏற்படுத்தவில்ல.

அங்கு கூடியிருந்த ரசிகர்கள், அந்த யானையைக் கொல்லுங்கள், அந்த யானையை கொல்லுங்கள் என்று ஆவேசமாக கூச்சலிட்டனர். இதையடுத்து மதம்பிடித்த அந்த யானையைக் கொன்றுவிட அந்த சர்க்கஸ் உரிமையாளர் சார்லி ஸ்பார்க்ஸ் தீர்மானித்தார்.

இதையடுத்து ராட்சத கிரேன் மூலம் மேரியை கட்டி டென்னிசி மாநிலம் யுனிகாய் கவுண்டியில் உள்ள கிளின்ச்பீல்டு ரெயில் சாலை பகுதிக்கு கொண்டு சென்றனர். வழக்கமாக சர்க்கசில் மேரியின் வாலைப் பிடித்துக் கொண்டு வரும் இதர நான்கு யானைகளும் கடமை உணர்ச்சி தவறாமல் மரண வாயிலை நோக்கி சென்ற மேரியின் வாலைப் பிடித்தபடி பின்னால் வந்தன.

13-9-1916 அன்று குழந்தைகள் உள்பட சுமார் 2500 பேர் மேரி கொல்லப்படும் காட்சியைக் காண்பதற்காக கூடியிருந்தனர்.

கொல்வதற்கு முன்னர் மேரி தப்பிச் சென்றுவிடாதபடி அதன் காலில் பெரிய தண்டவாளத்தை இணைத்து சங்கிலியால் கட்டினர். பின்னர் அதன் கழுத்தில் கனமான பெரிய சங்கிலியை கட்டி ராட்சத கிரேன் மூலம் மேலே தூக்கினர். அப்போது மேரியின் எலும்புகள் நொறுங்கும் சத்தமும் அது பிளிறும் ஓசையும் மனதை உருக்கும் வகையில் அமைந்தது.

சுமார் 5 அடி உயரத்துக்கு கிரேன் எழும்பிய பின்னர் மேரியின் கனம் தாங்காமல் சங்கிலி அறுந்துவிட, மேரி பரிதாபமாக கீழே விழுந்தது. இதில் சுமார் 5 டன் எடை கொண்ட மேரியின் இடுப்பு எலும்பு முறிந்தது.

வேறொரு கனமான சங்கிலி மூலம் மீண்டும் கழுத்தில் சுருக்கிடப்பட்ட மேரி, கிரேன் மூலம் தூக்கிலிடப்பட்டது. அழுகையும் பிளிறலுமாக சுமார் அரை மணி நேரம் நீடித்த மேரியின் ஜீவ மரணப் போராட்டத்தில் மரணம் வென்றது, அதன் ஜீவன் போனது என்பதை கால்நடை மருத்துவர் உறுதிப்படுத்தினார்.

மிருகவதை தடைச் சட்டங்கள் எல்லாம் அவ்வளவாக முக்கியத்துவம் பெறாத காலகட்டத்தில் வரலாற்றில் கருப்பு ஏடாக பதிவாகிவிட்ட மேரியின் மரணம், அன்றைய அமெரிக்க ஊடகங்களில் தலைப்புச் செய்திகளாக இடம்பெற்றன. சம்பவம் பழையதுதான் என்றாலும், தேர்க்காலில் நசுக்கி பசுவைக் கொன்ற மகனுக்கு அதே தண்டனை வழங்கிய மனுநீதி சோழன் ஆண்ட நம் நாட்டு மக்களும் இதை அறிந்து கொள்வதற்காக இதை நமது வாசகர்களுக்கு நினைவூட்டுகிறோம்.

                                                                                              Image may contain: one or more people, crowd and outdoor

About Radio tamizha

x

Check Also

RADIOTAMIZHA |வரலாற்றில் இன்று

நிகழ்வுகள் 1817 – ஆரம்பகால மிதிவண்டி, டான்டி குதிரை, கார்ல் வொன் டிராயிசு என்பவரால் இயக்கப்பட்டது. 1830 – 34,000 ...

%d bloggers like this: