Home / உலகச் செய்திகள் / பிரெஞ்சு பிரதமர் Jean Castex இன்று கொரோனா வைரஸ் பரிசோதனை

பிரெஞ்சு பிரதமர் Jean Castex இன்று கொரோனா வைரஸ் பரிசோதனை

தொற்றாளருடன் ஒன்றாகப் பயணித்த
பிரதமருக்கு கொரோனா பரிசோதனை!

பிரெஞ்சு பிரதமர் Jean Castex இன்று கொரோனா வைரஸ் பரிசோதனை செய்துகொண்டார்.முதலாவது சோதனையில் அவருக்கு தொற்று உறுதிப்படுத்தப்படவில்லை. இதனால் ஏழு தினங்கள் கழித்து அவர் மீண்டும் இரண்டாவது பரிசோதனை செய்து கொள்ளவுள்ளார்.

வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நபர் ஒருவருடன் வாகனம் ஒன்றில் சில மணி நேரம் சேர்ந்து பயணித்துள்ளார் என்பது தெரியவந்ததை அடுத்தே உடனடியாக அவர் வைரஸ் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டார்.

பிரான்ஸில் நடைபெற்றுவரும் மாபெரும் மரதன் சைக்கிள் ஓட்டப் போட்டியின் (Tour de France) வீரர்கள் மற்றும் அந்தப் போட்டியின் நிறைவேற்றுப் பணிப்பாளரான Christian Prudhomme ஆகியோர் சில தினங்களுக்கு முன்னர் வைரஸ் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டிருந்தனர். அவர்களில் பணிப்பாளர் Christian Prudhomme அவர்களுக்கு மட்டும் வைரஸ் தொற்றி இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது.

கடந்த சனியன்று சைக்கிள் ஓட்டப் போட்டியைப் பார்வையிடுவதற்காக பிரதமர் Jean Castex வாகனம் ஒன்றில் பணிப்பாளர் Christian Prudhomme அவர்களுடன் ஒன்றாகச் சேர்ந்து பயணித்தருந்தார். அதன் பின்னரே Christian Prudhomme அவர்களுக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.

தொற்றாளர் ஒருவருடன் வாகனத்தில் ஒன்றாகப் பயணம் செய்தகாரணத்தால் சுய பாதுகாப்புக் கருதி பிரதமரும் தன்னைத்தானே வைரஸ் சோதனைக்கு உட்படுத்தியுள்ளார் என்று பிரதமர் அலுவலகம் இன்று தெரிவித்துள்ளது.

வாகனத்தில் இருவரும் மாஸ்க் அணிந்துகொண்டு சமூக இடைவெளி பேணியவாறே பயணம் செய்திருந்தனர் என்பதை பிரதமர் அலுவலகப் பேச்சாளர் ஒருவர் உறுதிப்படுத்தியுள்ளார்.

அடுத்த சில தினங்களுக்கு பிரதமரின் உத்தியோக பூர்வ சந்திப்புகள் அனைத்தும் வீடியோ மூலமாகவே இடம்பெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

உள்துறை அமைச்சர் Gérald Darmanin பிரதமருடன் மதிய உணவு விருந்தொன்றில் கலந்துகொண்ட காரணத்தால் அவரும் வைரஸ் பரிசோதனை செய்யவேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது. பிரதமருடைய சோதனை முடிவு தெரியவந்த பின்னரே உள்துறை அமைச்சர் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, அதிபர் மக்ரோன் சில தினங்களுக்கு முன்னர் தன்னை வைரஸ் பரிசோதனைக்கு உட்படுத்தினார் என்று தகவல் வெளியாகி உள்ளது.

மக்ரோன் லெபனான் நாட்டுக்கும் தொடர்ந்து ஈராக்குக்கும் விஜயம் செய்து திரும்பிய பின்னர் கடந்த திங்களன்று தானாகவே பி. சி. ஆர். எனப்படும் வைரஸ் சோதனையைச் செய்து தொற்று ஏற்படவில்லை என்பதை உறுதி செய்து கொண்டார் என்ற தகவலை இன்று பொது நிகழ்வு ஒன்றில் அவரே வெளியிட்டுள்ளார்.

அதிபர் மக்ரோன் இதற்கு முன்னரும் ஏற்கனவே வைரஸ் சோதனை செய்துகொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

About Radio tamizha

x

Check Also

பிரான்ஸில் கொலை செய்யப்பட்ட இலங்கை குடும்பம் மேலதிக தகவல்

பிரான்ஸில் நேற்று இலங்கை குடும்பம் ஒன்று அடித்து படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான மேலதிக தகவல்கள் வெளியாகியுள்ளன. Noisy-le-Sec, (Seine-Saint-Denis) நகரின் ...