Home / உலகச் செய்திகள் / பட்டப்பகலில் காணாமல் போகும் தமிழீழ மண்ணும் தமிழ் மக்களும்.

பட்டப்பகலில் காணாமல் போகும் தமிழீழ மண்ணும் தமிழ் மக்களும்.

பட்டப்பகலில் காணாமல் போகும் தமிழீழ மண்ணும் தமிழ் மக்களும்.

“யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்று இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பெருமையுடன் கூறிய பண்பாட்டினம் , இன்று “யாதும் ஊரே யாவர்க்கும் அடிமை” என்ற துயர்தோய்ந்த வாழ்நிலையில் தனக்கென நிலையான வாழ்வின்றி , அரசின்றி , இருப்பிடமின்றி உலகின் நாலா புறங்களிலும் கடற் சாதாளைகள் போல் அலைந்து சீரழியும் நிலையில் உள்ளது .

எத்தகைய பெருமைகளும் , எத்தகைய தத்துவங்களும் , எத்தகைய கோட்பாடுகளும் , எத்தகை இலட்சியங்களும் வாழ்நிலையால் நிர்ணயிக்கப்பட வேண்டுமே தவிர மாயாஜால வார்த்தைகளாலோ, பிரசங்கங்களாலோ, உபதேசங்களாலோ , மனோரம்ய கற்பனைகளாலோ அல்ல.

தமிழ் தலைவர்கள் தங்கள் கோவணத் துணிகளால் தங்கள் கண்களை இறுக்க கட்டிக் கொண்டு மந்திரித்த வார்த்தைகளால் புதையல் தேடிக் கொண்டிருக்கும் போது , சிங்கள தலைவர்கள் தங்கள் இராஜதந்திர வாள்வீச்சால் தமிழ் மண்ணை பட்டப்பகலில் காணாமல் போகச் செய்யும் வித்தையில் முன்னேறிச் செல்கிறார்கள்..

இஸ்ரேலிய அரசியற் சட்ட ஏற்பாட்டில் “”The Law of Return “” என்ற ஒரு சட்ட ஏற்பாடு உண்டு. அதன்படி ஒரு யூதன் ( ஆண், பெண்) உலகில் எங்கு பிறந்திருந்தாலும் எங்கு வாழ்ந்து கொண்டிருந்தாலும் அவர் பிறப்பால் இஸ்ரேலிய குடிமகனாக/ குடிமகளாக ஆவதற்கான தகுதி உடையவர் என்று கூறுகிறது. யதார்த்தத்தில் இனக்கலப்புள்ள திருமண உறவுகள் நடைபெறுவதைக் கருத்திற் கொண்டு பாட்டன் – பாட்டி இருவரில் ஒருவர் யூதராக இருந்தால் பேரப்பிள்ளை இஸ்ரேலியக் குடியுரிமை பெறுவதற்கான தகுதி உடையது என்று கூறுகிறது. ஒரு யூதன் உலகில் எங்கு வாழ்ந்தாலும் அவன் தலைநிமிர்ந்து வாழலாம் என்ற அந்தஸ்தை இந்த ஏற்பாடு அவனுக்கு வழங்கியுள்ளது. இதை இன்னொரு வகையிற் சொல்வதென்றால் உலகெங்கும் வாழும் யூதர்களின் கலசமாகவும் கவசமாகவும் இஸ்ரேலிய அரசு அமைந்துள்ளது.

இப்படி வீடு கடந்து, நாடு கடந்து, கண்டம் கடந்து , காலங்களையும் கடந்து யூதர்கள் சிந்தித்து தமது தேசிய வாழ்வை வடிவமைக்கும் போது தமிழ் தலைவர்களோ தம்முன்னுள்ள அன்றாட நாட்களுக்கான அரசியலைப் பற்றிக்கூட சிந்திக்க இயலாதவர்களாய் காணப்படுகின்றனர . ஒரு மிகச்சாதாரண தேர்தல் கொள்கையைக்கூ வகுக்க இயலாமல் தத்தளிக்கும் தமிழ் தலைவர்களால் எப்படி தமிழ் மக்களுக்கு வழி காட்டவும் , தமிழீழ இலட்சியத்தை நிலைநாட்டவும் முடியும்? கடற் சாதாளைகள் போல் அடிபடும் தமிழ் மக்களின் வாழ்நிலையை புரிந்து கொள்வதற்கான அடிப்படையைத் தமிழ் தலைவர்களின் இத்தகைய இயலாமைகளைக் கட்டிடங்களாகக் கொண்டு புரிந்துகொள்ளலாம்.

ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ள நாள் அறிவிக்கப்பட்டு 2 வாரங்களின் பின்பு தமிழ்த் தலைவர்கள் தேர்தல் பற்றிய கொள்கையை வகுப்பதற்காக ஒன்றுகூடத் தொடங்கினார்கள். தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையை முன்னிறுத்தி ஒரு தமிழ் பொது வேட்பாளரை ஜனாதிபதி தேர்தலில் நிறுத்துவது புத்திசாலித்தனமானதென பெரும்பான்மையோரால்
உணரப்பட்ட போதும் காலம் போதாதெனக்கூறி அத்தெரிவு கைவிடப்பட்டது.

அப்படி ஒரு பொது வேட்பாளரை நிறுத்துவது என்பது மறைமுகமாக பொது வாக்கெடுப்புக்கு சமமானதாக அமையக் கூடியது என்பதும் கருத்தில் எடுக்க தக்கது.

தைப்பொங்கல் எப்போது வரும் என்பது முன்கூட்டியே தெரியும்; அப்படியே தீபாவளியும் எப்போது வரும் என்பதும் முன்கூட்டியே தெரியும்; கிறிஸ்மஸ் தினமும் எப்போது வரும் என்பதும் முன்கூட்டியே தெரியும். அத்தகைய வரிசையில் இலங்கையில் ஜனாதிபதி தேர்தல் இந்த ஆண்டு இறுதிக்குள் வரும் என்பதும் முன்கூட்டியே தெரிந்த விடயம். எப்படியோ தமிழ் தலைவர்களின் பொறுப்பற்ற அரசியலால் “” பொது வேட்பாளரை நிறுத்துதல்”” என்ற அறிவுபூர்வமான ஒரு நல்ல தெரிவு கைநழுவிப் போனது.

தமிழ் தேசிய ஒருமைப்பாட்டையும் தமிழ் தேசிய ஐக்கியத்தையும் நிலைநாட்ட ஏற்றவகையில் இவ்வாறு நிறுத்தப்படும் ஒரு தமிழ் பொது வேட்பாளருக்கு வாக்கு அளிப்பதும் , அடுத்து சாத்தியமான வகையில் பேரம் பேசலுக்கேற்ப இரண்டாவது வாக்கை இன்னொரு வேட்பாளருக்கு அளிப்பதும் , பேரம் பேசல் சாத்தியமற்றுப் போகும் போது இரண்டாவது வாக்கை அளிக்காமல்விடவும் விருப்பத் தேர்வுத் தேர்தல் முறையில் வாய்ப்புண்டு.

ஆனால் இம்முறை நிகழவுள்ள தேர்தல் பற்றி தமிழ் தலைவர்கள் தீர்க்கமான தீர்மானமற்றிருக்கும் பின்னணியில் , தமிழ் மக்கள் குழம்பிப் போயிருக்கும் சூழலில் , தமிழ் மக்களின் வாக்குகள் சின்னாபின்னப்பட்டு காட்டாறாய்ப் பாய்ந்து எதிரிகளின் குட்டைகளை நிரப்பக்கூடிய அபாயம் உண்டு. இதன் மூலம் தமிழ் மக்கள் அரசியல் ஆளுமையற்றுவிட்டனர் என்றும், இனிமேல் அவர்கள் இலங்கையின் அரசியலை நிர்ணயிக்கவல்ல ஒரு சக்தி அல்ல என்றும் எதிரிகள் பிரச்சாரத்தை மேற்கொள்ளவும் வாய்ப்புகள் உண்டு.

கோத்தபாய ராஜபக்ஷவாயினும் சரி , சஜித் பிரேமதாசவாயினும் சரி, வேறு எந்த சிங்கள தலைவர்கள் ஆயினும் சரி கட்டமைக்கப்பட்ட தமிழ் இனப்படுகொலையை மேலும் புது வழிகளில் முன்னெடுப்பதில் உறுதியான கொள்கையையும் பலமான திட்டங்களையும் உடையவர்களாகவே காணப்படுகின்றனர்.

பலமான அரச நிறுவனக் கட்டமைப்புடன் கூடிய வகையில் அறிஞர்கள் , அதிகாரிகள் , பௌத்த நிறுவன பிக்குகள் மற்றும் ஊடகவியலாளர்கள் எனப் பலதரப்பட்டோரது கூட்டு உழைப்போடும் கட்டமைக்கப்பட்ட சிங்கள பேரினவாத பொதுமனம் மேற்படி அனைத்தும் திரண்டு திடசித்தமான அரசியல் தலைமைத்துவத்திற்க் கூடாக தமிழ் மண்ணை முற்றிலும் சிங்கள பௌத்த மயப்படுத்தும் செயல்திட்டதை முழு அளவில் முன்னெடுக்கின்றது.

பதவிக்கு வரக்கூடிய இரண்டு ஜனாதிபதி வேட்பாளர்களும் அபிவிருத்திக்கூடாக சிங்கள மயமாக்கலை முன்னெடுப்பதற்க்கேற்ற தமது கொள்கையைத் தெளிவாக அறிவித்துள்ளனர்.

அபிவிருத்திக் கூடாக தமிழ் மண்ணை கபளீகரம் செய்து , சிங்கள மயமாக்கலை நிறைவேற்றுவது என்பதே கோத்தபாய ராஜபக்சவினதும் சஜித் பிரேமதாசவினதும் கொள்கைத் திட்டமாகும்.

இம்மாதம் 11 ஆம் தேதி நிகழ்ந்த எல்பிட்டிய பிரதேச சபை தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன 57 வீத வாக்குகளைப் பெற்று பெரு வெற்றியீட்டியுள்ளது. கோத்தபாய ராஜபக்ஷ ஜனாதிபதி வேட்பாளராக நியமனப் பத்திரம் தாக்கல் செய்த பின்பு நிகழ்ந்த இத்தேர்தலில் கிடைத்த மேற்படி வெற்றியானது ஜனாதிபதித் தேர்தலில் ராஜபக்ஷாக்களுக்கு கிடைக்கக்கூடிய வெற்றி கவாய்ப்பை அறிவிக்கும் ஒரு செய்தியாகவே உள்ளது.

அவ்வாறு வெற்றி பெற்று பதவிக்கு வந்ததும் ராஜபக்சக்கள் மேற்கொள்ளப் போகும் முக்கிய நடவடிக்கை ராஜபக்ச குடும்பத்தினர் வடக்கில் முகாமிட்டு சிங்கள மயமாக்கலை முழு அளவில் முன்னெடுப்பதாகும்.

இதன்படி முல்லைத்தீவில் ஒரு நவீன மீன்பிடி துறைமுகத்தை அமைப்பதும் முல்லைத்தீவு கடல் சூழ்ந்த பிராந்தியம் முழுவதையும் உல்லாசப் பயண மையமாக மாற்றுவதும் தமது முக்கிய திட்டமான நாமல் ராஜபக்ச யாழ்ப்பாணத்தில் பேசியுள்ளார். அதாவது தமிழ் பகுதியை அபிவிருத்தியின் மூலம் தாம் முன்னேற்ற போவதாகவும் தமிழ் மக்களுக்கு ஒரு புது வாழ்வு கிடைக்கும் என்றும் முலாம் பூசிய நச்சு மாத்திரையை நாமல் ராஜபக்ச இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

முல்லைத்தீவில் நவீன துறைமுகத்தை அமைத்து சிங்கள மீனவர்களை அங்கு வசதியாக குடியமர்த்தி அவர்களுக்கு ஆழ்கடல் மீன்பிடித் தொழில்களுக்கான , கடலில் வாரக் கணக்கில் தங்கி நின்று மீன்பிடிக்கவல்ல நவீன சிறு கப்பல்களை சீனா தொழில்நுட்ப உதவியோடு வழங்குவார்கள். அதன்மூலம் அப்பகுதியில் தமிழ் மீனவர்கள் இயல்பாகவே காணாமல் போய்விடுவார்கள். சிங்கள மீனவர் சனத்தொகை குடும்பம் குடும்பமாய் அப்பகுதியை முற்றிலும் கபளீகரம் செய்துவிடும். அப்போது தமிழ் சனத்தொகை என்பது சர்க்கரைப் பொங்கலுக்குள் மறைந்துபோன பயறு போல் ஆகிவிடும்.

மேலும் உல்லாசப் பயணத்துறை மூலம் பெரும் நட்சத்திர கொட்டல்களை கட்டுவார்கள். அதன்மூலம் வெளிநாட்டு உல்லாசப் பயணிகள் , உள்நாட்டு உல்லாச பயணிகள் என்போரின் மயமாக முல்லைத்தீவு மாற்றமடைந்து தமிழ் மணம் அங்கு சிறிதுமில்லாமல் போய்விடும். அத்தகைய முல்லைத்தீவு கிழக்கை வடக்கிலிருந்து துண்டிப்பதுடன் வன்னி சிங்களமயமாகி குடாநாடு தனிமைப்பட்டு சுருங்கும்.

அத்துடன் குடாநாட்டுக்கு உள்ளும் மேற்கொள்ளப்படக் கூடிய அபிவிருத்தி என்ற பெயரிலான பொருளாதார அலையின் வாயிலாக சிங்கள மயமாக்கல் தொழில்ரீதியாக முன்னெடுக்கப்படும். சிங்கள சனத்தொகை அங்கும் பெருகும். தமிழ் மண்ணில் ஏற்கனவே காணப்படும் 2, 00, 000 படையினரின் குடும்பங்கள் குறிப்பாக குடாநாட்டில் பதிவுக்கு உள்ளாகி வாக்கு சிட்டுக்கு உரியவகையாக மாறும். இதன்மூலம் குடாநாட்டின் அரசியலில் 2020 ஆம் ஆண்டு நிகழக்கூடிய தேர்தல்களில் தமிழர்கள் தமிழ் மண்ணில் சிறுபான்மை இனமாக மாறிவிடுவர். அத்தோடு தமிழ் அரசியல் என்பதே பொய்யாய்ப் பழங்கதையாய் பையவே காணாமல் போய்விடும்.

அபிவிருத்தி வாதம் என்பது கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலையை இலகுவாக முன்னெடுப்பதற்க்கேற்ற ஒரு கூரிய ஆயுதமாகும். இங்கு அபிவிருத்தி என்பது அரசியல் தீர்மானத்திற்கு உட்பட்டது . அது தமிழ் மக்களை இனக்கபளீகரம் செய்து சிங்கள மயமாக்கலை கொள்வதற்கான தீர்மானத்தின்படி நிகழ்வது.
தமிழ் மக்களுக்கான அபிவிருத்தி என்பது தமிழ் மக்களின் அரசியல் தீர்மானத்திற்கு உட்பட்டதாக அமைய வேண்டும். அது தமிழ் மக்களின் வாழ் நிலைக்கும் தேவைக்கும் பொருத்தமான நீண்ட நெடிய பண்பாட்டு வளர்ச்சிக்கு உட்பட்டதாக அமைய வேண்டும் . ஆனால் இங்கு ஆட்சியாளர்கள் சிங்கள பௌத்த இனமய.மாக்கலுக்கான அபிவிருத்தியை தமிழரின் தலைகள் மீது கவிழ்க்கிறார்கள்.

முள்ளிவாய்க்காலை உடனடுத்து
தமிழ் மக்களுக்கான தலைமைத்துவத்தை சீர்குலைப்பது என்பதில் சிங்கள இனவாதம் திட்டமிட்ட அளவுக்கு வெற்றி பெற்றுள்ளது. ராஜபக்சக்கள் முதல் 5 ஆண்டில் தமிழ் தலைவர்களை அச்சுறுத்தி அடக்கினார்கள். அடுத்துவந்த சிறிசேன- ரணிலின் 5 ஆண்டுகளில் அவர்கள் தமிழ் தலைவர்களை அணைத்துத் தமது கமக்கட்டுப் பிடிக்குள் தமிழ் தலைவர்களை அமுக்கி நெரித்த காலமாய் அமைந்தது . தமிழ் மக்கள் மத்தியில் ஏற்படக்கூடிய தலைமைத்துவ வெறுமை என்பது கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலையை முன்னெடுக்கத் தேவையான வாய்ப்புக்களை இலகுவாக வழங்கிவிடும். முள்ளிவாய்க்காலின் பின்னான காலகட்ட அரசியலை சிங்கள அறிஞர்களும் தலைவர்களும் பௌத்த மஹா சங்கத்தினரும் சரிவரத் திட்டமிட்டு மேற்கொண்டதன் வாயிலாக தமிழ்த் தலைமைத்துவத்தை தோலிருக்கச் சுளை பிடுங்கிவிட்டார்கள் . அதற்குப் பொருத்தமாக தமிழ் தலைமைத்துவர்களும் இலகுவாக வளைந்து கொடுத்தார்கள்.

இத்தகைய இறுதிகட்ட அழிவிலிருந்து தமிழ் இனத்தை தற்க்காப்பதற்கான அறிவுபூர்வமான புதிய பாதைகளை கண்டறிய வேண்டிய பொறுப்பு தமிழ் அறிஞர்களைப் பெரிதும் சார்ந்துள்ளது. அனைத்து வகையான குறுநில, சிறு புத்திகளையும் கடந்து தமிழினத்தை பாதுகாப்பதற்கான மேன்மையான சிந்தனையுடனும் பரந்த மனப்பாங்குடனும் செயற்படவல்ல அர்ப்பணிப்புள்ளங்கொண்ட அறிஞர்களை வரலாறு அழைக்கிறது. இது வரலாற்றின் இறுதி அழைப்பாகும்.

மு . திருநாவுக்கரசு.

About Radio tamizha

x

Check Also

RADIOTAMIZHA |பொலிஸ் தலைமையகம் முக்கிய அறிவிப்பு

கொவிட் -19 வைரஸ் பரவலை தடுப்பதன் நோக்கில் நேற்று புதன்கிழமை இரவு முதல் நாளை மறுதினம் அதிகாலை நான்கு மணிவரை ...

%d bloggers like this: