Home / சினிமா செய்திகள் / நட்புனா என்னானு தெரியுமா – விமர்சனம்

நட்புனா என்னானு தெரியுமா – விமர்சனம்

விமர்சனம்

நடிப்பு – கவின், ராஜு, அருண்ராஜா காமராஜ், ரம்யா நம்பீசன்
தயாரிப்பு – லிப்ரொ புரொடக்ஷன்ஸ்
இயக்கம் – சிவா அரவிந்த்
இசை – ஜஸ்டின் பிரபாகரன்
வெளியான தேதி – 17 மே 2019
நேரம் – 2 மணி நேரம் 2 நிமிடம்
ரேட்டிங் – 2.75/5

சினிமாவிற்கு கதை எழுத வரவில்லையா, இருக்கவே இருக்கிறது, அட்லீ பார்முலா என இன்றைய இயக்குனர்கள் யோசிக்க ஆரம்பித்துவிட்டார்கள் போலிருக்கிறது.

பாக்யராஜ் இயக்கத்தில் வெளிவந்த ‘இன்று போய் நாளை’ படத்தை ஏற்கெனவே உரிமை வாங்காமல் ‘கண்ணா லட்டு திண்ண ஆசையா’ என்று எடுத்து வசூலை அள்ளினார்கள். இப்போது அதே கதையை மீண்டும் ‘நட்புனா என்னானு தெரியுமா’ என மீண்டும் எடுத்திருக்கிறார்கள்.

எந்தக் காலத்திற்கும் பொருத்தமான ஒரு கதை, முதல் பாதியில் மட்டும் என்ன சொல்வது என்று புரியாமல் தவித்திருக்கும் இயக்குனர் சிவ அரவிந்த், இரண்டாவது பாதியை கலகலப்பாகவும், சுவாரசியமாகவும் நகர்த்தி படத்தை ரசிக்க வைத்திருக்கிறார்.

கவின், ராஜு, அருண்ராஜா காமராஜ் மூவரும் சிறுவயதிலிருந்தே நெருங்கிய நண்பர்கள். பத்தாவது படிப்புக்கு மேல் தாண்டாதவர்கள் மிகவும் தாமதமாக யோசித்து திருமண வேலைகளை செய்து கொடுக்கும் வேலையை செய்ய ஆரம்பிக்கிறார்கள். ஒரு இடத்தில் ரம்யா நம்பீசனைப் பார்க்கும் ராஜு அவரைக் காதலிக்க ஆரம்பிக்கிறார். ரம்யாவைத்தான் காதலிக்கப் போகிறேன் என கவின், அருண்ராஜா ஆகியோருக்கு காட்டுகிறார். அப்போது ரம்யாவிடம் திடீரெனச் சென்று கவின் அவரைக் காதலிப்பதாகச் சொல்ல, ரம்யாவும் அதற்கு சம்மதிக்கிறார். பின்னர்தான் கவின், ரம்யாவைக் காதலிப்பது ராஜுவுக்குத் தெரிய வருகிறது. இருவரும் சண்டை போட்டுப் பிரிகிறார்கள். ராஜுவின் பக்கம் அருண்ராஜா சென்றுவிடுகிறார். கவின் தனியாக நிற்கிறார். பிரிந்த நண்பர்கள் இணைந்தார்களா, கவின், ரம்யா காதல் என்ன ஆனது என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

கவின், டிவியில் ஒளிபரப்பான ‘சரவணன் மீனாட்சி’ தொடரிலேயே தன் யதார்த்த நடிப்பால் நேயர்களைக் கவர்ந்தவர். இந்தப் படத்தில் நாயகனாக நடித்திருக்கிறார். சின்னத்திரையில் நடித்த யதார்த்தமான நடிப்பை பெரிய திரையிலும் கொடுத்திருக்கிறார். இனி, மினிமம் பட்ஜெட் படங்களின் நாயகனாக வலம் வருவதற்கு நல்ல வாய்ப்பு கிடைக்கும். சரியாகப் பயன்படுத்திக் கொண்டால் அவருக்கு நல்லது.

இரண்டாவது ஹீரோவாக புதுமுகம் ராஜு. புதுமுகம் என்று சொல்ல முடியாதபடி முதல் படத்திலேயே மிகவும் இயல்பாக நடித்திருக்கிறார். கவினைக் காட்டிலும் இவருக்கு நடிப்பை வெளிப்படுத்தக் கூடிய அதிக வாய்ப்பு. காதலிப்பது, நண்பனால் ஏமாற்றப்படுவது, காதலில் தோல்வியடைவது என அவர் கதாபாத்திரத்தில் சேர்க்கப்பட்ட அத்தனை உணர்வுகளையும் சரியாகவே கொடுத்திருக்கிறார்.

மூன்றாவது ஹீரோவாக அருண்ராஜா காமராஜ். படத்தின் கலகலப்புக்கு பெரிதும் உதவுபவர். அவருடைய அப்பாவித்தனமான முகமும், செய்கைகளும் சுவாரசியம். ‘கனா’ படத்தை இயக்கி வெற்றி பெற்றவர். தொடர்ந்து நடித்தால் மணிவண்ணன் இடத்தை எட்டிப் பிடிப்பது நிச்சயம்.

இந்த மூன்று நண்பர்களின் நடிப்புதான் படத்திற்கு முதுகெலும்பு. அவர்களுடைய நடிப்புதான் படத்தைக் காப்பாற்றுகிறது.

கதாநாயகியாக ரம்யா நம்பீசன். கொஞ்சம் முதிர்ச்சியாகத் தெரிகிறார். அதற்காகவே அவருக்கு மாடர்ன் உடைகளைப் போட்டு சமாளித்திருக்கிறார்கள் போலிருக்கிறது. அதிகமான காட்சிகள் இல்லை என்றாலும் நடிப்பில் அவருடைய அனுபவம் தெரிகிறது.

படம் முழுவதும் மூன்று நண்பர்களைச் சுற்றியே நகர்வதால் மற்ற கதாபாத்திரங்களுக்கு அதிக காட்சிகள் இல்லை. இளவரசு மட்டும் அவ்வப் போது வந்து போகிறார். மொட்ட ராஜேந்திரன், மன்சூரலிகான், அழகம் பெருமாள், ரமா ஆகியோர் சில காட்சிகளில் மட்டும் வந்து போகிறார்கள்.

இந்த மாதிரியான படங்களுக்கு பாடல்கள்தான் விசிட்டிங் கார்டாக அமைய வேண்டும். அதை இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபகாரன் செய்யத் தவறிவிட்டார். ஒரு பாடல் கூட மனதில் நிற்கவில்லை.

ஒரு ஏரியாவுக்குள்ளேயே மொத்த படத்தையும் முடித்திருக்கிறார்கள். பெரிய செலவுகள் இல்லாமல் இப்படி தயாராகும் படங்கள் ரசிகர்களுக்குக் கொஞ்சம் சுவாரசியத்தைக் கொடுத்தாலே போதும் வெற்றி பெற்றுவிடும். முதல் பாதியில் செய்யத் தவறியதை இரண்டாவது பாதியில் செய்து ஈடு செய்துவிட்டார் இயக்குனர்.

நண்பர்கள், நட்பு என்றாலே இளைஞர்கள் தியேட்டர்களுக்கு வந்துவிடுவார்கள். அப்படி வருபவர்கள் படம் பார்த்துவிட்டு திரும்பிப் போகும் போது ஏமாற்றம் இல்லாமல்தான் போவார்கள்.

நட்புனா என்னானு தெரியுமா – நன்று

About இனியவன்

x

Check Also

தளபதி 63 படத்தில் இணைந்த மற்றுமொரு நடிகை!!

அட்லி இயக்கத்தில் விஜய் – நயன்தாரா நடிப்பில் உருவாகி வரும் தளபதி 63 படத்தில் இளம் நாயகிகள் பலரும் நடித்து ...

%d bloggers like this: