Home / உள்நாட்டு செய்திகள் / டெல்லி நீதிமன்றம் தண்டனை உத்தரவு!

டெல்லி நீதிமன்றம் தண்டனை உத்தரவு!

பெண் ஊழியரை துன்புறுத்திய குற்றச்சாட்டில் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் இந்தியாவுக்கான முன்னாள் பிராந்திய அதிகாரி லலித் டி சில்வாவக்கு டெல்லி நீதிமன்றம் தண்டனை உத்தரவு பிறப்பித்தது.

டெல்லி, பாட்டியாலா நீதிமன்றத்தின் பெருநகர நீதிபதி தேவ் சரோஹா நேற்று (புதன்கிழமை) காணொளி தொடர்பாடல் மூலம் தீர்ப்பை அறிவித்தார். இந்நிலையில், குற்றம் சாட்டப்பட்ட லலித் டி சில்வா முன்னிலையில் 2020 நவம்பர் 17 ஆம் திகதி தண்டனைக் காலம் குறித்து அறிவிக்கப்படவுள்ளது.

இதேவேளை, சர்வதேச விமான சேவைகள் கொரோனா நெருக்கடியால் செயற்படாத நிலையில் லலித் டி சில்வா நேற்று நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை எனவும், தண்டனைக் காலம் அறிவிக்கும்போது குற்றம் சாட்டப்பட்டவர்கள் மன்றில் ஆஜராக வேண்டியது அவசியம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த வழக்கில், பாதிக்கப்பட்ட பெண் சார்பில் ஆஜரான சட்டத்தரணி அஜய் வர்மா, குறித்த விமான நிறுவனத்துக்கு 12 வருடங்களாக சிறந்த சேவையை பெண் ஊழியர் செய்தபோதும் அவர் சட்டவிரோதமாக பணி நீக்கம் செய்யப்பட்டதாக தெரிவித்துள்ளார்.

அத்துடன், பெண்களுக்கு பாதுகாப்பான வேலைச் சூழல் உருவாக்கப்படவில்லை எனவும் இந்த பணி நீக்கம் தொழிற்றுறை தீர்ப்பாயத்தின் கீழ் முறையிடப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

இதனிடையே, ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் டெல்லி அலுவலகத்தில் விற்பனை நிர்வாகியாக இருந்த குறித்த பாதிக்கப்பட்ட பெண், தனக்கு நடந்தவற்றை பொலிஸில் முறைப்பாடு செய்ய தடுக்கப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், குற்றம் செய்தவர்கள் மீது சரியான நடவடிக்கை எடுக்கப்படும் என நிர்வாகிகள் தனக்கு உறுதியளித்த போதும் எதுவும் செய்யப்படவில்லை எனவும் முறைப்பாடு அளித்ததற்காக தனக்கு எதிராக பழிவாங்கும் முயற்சியான, டெல்லியில் இருந்து கொச்சிக்கு பணிமாற்றம் செய்யப்பட்டதாக குறித்த பெண் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், டெல்லியில் இருந்து கொச்சி அலுவலகத்தில் பணியமர்த்தப்பட்ட பின்னரும் குற்றம் சாட்டப்பட்டவர் தொடர்ந்து தன்னைத் துன்புறுத்தியதாக பெண் ஊழியர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், ஐ.பி.சி.யின் 509ஆவது பிரிவின் கீழ் குற்றம் சாட்டப்பட்டவர் குற்றவாளி என நீதிமன்றம் கண்டறிந்துள்ளது.

About VITHUSHA

x

Check Also

பருத்தித்துறை கடலில் கஞ்சா

தமிழ்நாட்டில் இருந்து சட்டவிரோதமாக கேரளா கஞ்சா கடத்தி வந்த மூவர் இன்று(22)பருத்தித்துறை கடலில் வைத்து கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். ரோந்தில் ...