Home / இந்திய செய்திகள் / டிக் டாக்கில் முழுநேர அடிமைகளாக 120 மில்லியன் பேர்-அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு!!

டிக் டாக்கில் முழுநேர அடிமைகளாக 120 மில்லியன் பேர்-அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு!!

இந்தியாவில் டிக்டாக் செயலியில் தங்கள் நடிப்புத் திறமையை வீடியோவாக பதிவிட்டு லைக்கிற்காக காத்திருப்போர் 12 கோடி பேர் என்று டிக்டாக் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. வீடியோ பதிவிடுபவர்களுக்கு தற்கொலை எண்ணத்தை தவிர்க்க கவுன்சிலிங் அளிக்க உள்ளதாகவும் அறிவித்துள்ளனர்.

டிக்டாக்கில் வீடியோ பதிவிட்டு தங்கள் திறமைகளைக் காட்டி பொழுதைக் கழித்து வந்த பலர், தற்போது டிக்டாக்கில் கிடைக்கும் லைக்கிற்காக ஏங்கும் முழுநேர அடிமைகளாக மாறிபோய்விட்டனர் என்பதற்கு இந்த வீடியோ சான்று..!

சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்தவர்கள் முதல், சீரியசாக நடித்தாலும் வாய்ப்பு கிடைக்காதவர்கள் வரை அனைவரும் டிக்டாக்கில் கலந்து கட்டி தங்கள் திறமையைக் காட்டி வருகின்றனர்

இந்தியாவில் டிக்டாக், ஹெலோ, விகோ லைட் போன்ற செயலிகளை தனது கட்டுப்பாட்டிற்குள் வைத்துக் கொண்டு, பொழுதுபோக்கு விரும்பிகளை மெய்மறந்து ஆட வைத்துக் கொண்டிருப்பது பைட் டான்ஸ் என்ற தகவல் தொழில் நுட்ப நிறுவனம்..!

இந்தியாவில் மும்பை மற்றும் டெல்லியில் அலுவலகங்களை கொண்டு செயல்படும் இந்த நிறுவனத்திற்கு உலக அளவில் 50 அலுவலகங்கள் உள்ளன. இந்தியாவில் மட்டும் ஆங்கிலம், தமிழ், தெலுங்கு, மலையாளம், ஒடியா, இந்தி, மராத்தி உள்ளிட்ட 11 மொழிகளிலும், சர்வதேச அளவில் 150 மொழிகளிலும் செயலிகளை இயக்குகிறது.

இந்தியாவில் பட்டிதொட்டிகளிலும், நவ நாகரீக மாநகரங்களிலும், பெண்களும் ஆண்களும் டிக்டாக்கில் செய்கின்ற சேட்டைகளைப் பார்த்து ரசித்து, அதனை டிக் டாக்கில் பதிவிடுவதற்கான அனுமதியை வழங்குவதற்காகவே 500 பேர் கொண்ட பணியாளர் குழு 24 மணி நேரமும் பணியில் உள்ளது.

கடந்த ஒரு ஆண்டில் மட்டும் டிக்டாக்கில் ஆபாசம் மற்றும் வன்முறையை தூண்டும் வகையில் பதிவிடப்பட்ட 60 லட்சம் வீடியோக்களை டிக்டாக் பணியாளர்கள் அழித்துள்ளதாக, பைட் டான்ஸ் நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் பெல்லே பல்டொஷா(belle baldoza) தெரிவித்தார்.

டிக்டாக்கில் 12 கோடி பேர் தங்களது வீடியோக்களை பதிவு செய்துள்ளதாகவும், ஹெலோ செயலியில் 4 கோடி பேரும், விகோ செயலியில் 2 கோடி பேரும் தங்களது திறமைகளைக் காட்டி வீடியோக்களை பதிவிட்டுள்ளதாகவும் பெல்லே பல்டொஷா(belle baldoza) தெரிவித்தார்

மேலும், அண்மைகாலமாக பல்வேறு சர்ச்சையில் சிக்கி உள்ள டிக்டாக் செயலியை பாதுகாப்பானதாக மாற்ற 13 விதிகளுடன் செயல்பாட்டை மேப்படுத்தி உள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி 13 வயதுக்குட்பட்டோர் டிக்டாக் செயலியை பயன்படுத்தாமல் இருக்கவும், ஒருவர் அதிகபட்சம் எத்தனை நிமிடங்கள் அதனை பயன்படுத்த வேண்டும் என்ற நேரக் கட்டுப்பாடும் தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

டிக்டாக் செயலிக்கு முகநூல் போல கடவுச்சொல்லை பயன்படுத்தும் முறை செயல்பாட்டில் உள்ளதாகவும், டிக்டாக் செயலியில் உள்ள வீடியோக்கள் அனைத்தும் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு ஆபாச வன்முறை வீடியோக்கள் உடனடியாக நீக்கப்படுவதாகவும் தெரிவித்தார். இதற்கான 13 விதிகள் அடங்கிய உத்தரவாதத்தை கொடுத்த பின்னரே இந்தியாவில் டிக்டாக்கிற்கு விதிக்கப்பட்ட தடை விலக்கிக் கொள்ளப்பட்டதாக பெல்லே பல்டொஷா(belle baldoza) தெரிவித்தார்.

இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் தமிழகத்தில் மட்டும் தான் டிக்டாக் செயலியை முன்வைத்து தற்கொலை, சாதி பிரச்சனை , ஆபாச பேச்சு, கலாச்சார சீரழிவு போன்ற சர்ச்சைகள் எழுவதால் அது தொடர்பாக புகார் அளிக்க தனி தொலைபேசி எண்ணையும், கண்காணிப்பு அதிகாரி ஒருவரையும் பணி அமர்த்தி உள்ளதாக பெல்லே பல்டொஷா((belle baldoza)) தெரிவித்தார்.

தற்கொலை செய்யும் எண்ணத்தில் இனி யாராவது வீடியோ பதிவிட்டால் அவர்களது செல்போனிற்கு தொடர்பு கொண்டு கவுன்சிலிங் அளிக்கும் புதிய தொழில் நுட்பம் திங்கட்கிழமை முதல் செயல்பாட்டிற்கு வர உள்ளதாகவும் பெல்லெ பல்டொஷா(belle baldoza) தெரிவித்தார்.

டிக்டாக் செயலி மூலம் இந்தியாவில் விளம்பர வருவாயாக மட்டும் பல நூறு கோடிகளை குவிக்கும் பைட் டான்ஸ் தகவல் தொழில் நுட்ப நிறுவனம், இந்தியாவில் இனி தடை விதிக்கும் வகையில் நடந்து கொள்ளக்கூடாது என்பதற்காக பல்வேறு முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டாலும், நம்மவர்கள் பதிவிடும் வீடியோக்கள் டிக்டாக் செயலியை மீண்டும் தெருவிற்கு இழுத்து வந்துவிடும் என்பதில் அய்யமில்லை..!

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About அகமுகிலன்

x

Check Also

மகாத்மா காந்தியின் 150 வது பிறந்தநாளை முன்னிட்டு காந்தி நினைவிடத்தில் மோடி, தலைவர்கள் மரியாதை

புதுடில்லி : மகாத்மா காந்தியின் 150 வது பிறந்தநாளை முன்னிட்டு டில்லி ராஜ்காட்டில் உள்ள காந்தி நினைவிடத்தில் தலைவர்கள் மரியாதை ...

%d bloggers like this: