Home / இந்திய செய்திகள் / சோனியா தலைமையில் காங்கிரஸ் அடைந்ததும், இழந்ததும் என்னென்ன?

சோனியா தலைமையில் காங்கிரஸ் அடைந்ததும், இழந்ததும் என்னென்ன?

பாராளுமன்ற குளிர்கால கூட்டம் வெள்ளிக்கிழமை தொடங்கியது. அப்போது செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ‘இது நான் பணியில் இருந்து ஓய்வுபெறுவதற்கான நேரம்’ என்று குறிப்பிட்டார். அதன்பிறகு காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரண்தீப் சிங் சுர்ஜேவாலா, ‘காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து மட்டுமே விலகியுள்ளார், அரசியலில் இருந்து அல்ல’ என்று டிவிட்டர் செய்தியில் கூறியுள்ளார். இது குறித்து மதுகர் உபாத்தியாயாவின் கட்டுரை.

132 ஆண்டு பாரம்பரியம் கொண்ட அரசியல் கட்சியில் சோனியா காந்தி நீடிப்பது சுலபமானதா அல்லது சிரமமானதா என்ற கேள்விக்கான பதிலை அவர் மட்டுமே சொல்லமுடியும்.

அரசியலில் பல்வேறு கோணங்களை இருந்து இந்தக்கூற்றை ஆராயும்போது, காங்கிரஸ் கட்சியில் சோனியாவைத் தவிர மூன்று பெண்கள் மட்டுமே தலைவர் பதவியில் இருந்திருக்கிறார்கள் என்பதை குறிப்பிட வேண்டியது அவசியம்.

சுதந்திரத்திற்கு முன் அன்னி பெசண்ட், சுதந்திரத்திற்குப் பிறகு, சரோஜினி நாயுடு மற்றும் இந்திரா காந்தி ஆகிய மூவரே காங்கிரஸ் கட்சியை தலைமைதாங்கி வழிநடத்திய பெண் தலைவர்கள்.

 

சரி அரசியலில் சோனியா காந்தி நீடிப்பது குறித்த கேள்விக்கு பதில் சொல்வாரா இல்லையா என்பது அவருடைய தனிப்பட்ட விருப்பம். பதில் சொல்லுவார் என்றால் எப்போது சொல்வார்? அரசியலில் ‘துரிதமான செயல்பாடு’ என்பது முக்கியத்துவம் வாய்ந்தது, எனவே இதுபற்றி உடனடியாக அவர் கருத்து சொல்வது அவசியமாகும். ஏனென்றால் கட்சிக்குள் தலைமை மாற்றம் என்பது ‘காங்கிரஸில் ஒரு சகாப்தத்தின் முடிவு’ என்று கட்சியின் மூத்த தலைவர்கள் கருதுகின்றனர்.

கட்சியின் தலைவராக 19 ஆண்டுகாலத்தில் சோனியா காந்தி எடுத்த முடிவுகளில் நன்மைகளும் இருந்தன, கட்சிக்கு ஊறு விளைவிக்கும் செயல்களும் இருந்தன.

சில வெளிப்படையானவை, சில உள்மறையானவை, முதலில் சோனியா காந்தியின் சிறப்பான செயல்பாடுகளை பற்றி ஆராய்வோம்.

பிரதமர் ஒருவரின் மருமகள் அல்லது மனைவி என்பதன் அடிப்படையில் மட்டுமே அவரது அரசியல் செயல்பாடுகளை மதிப்பிடமுடியாது என்பது சோனியா காந்தியின் விமர்சகர்கள்கூட ஏற்றுக்கொள்ளக்கூடிய அம்சம்.

  • `சோனியா காந்தியின் இரவு உடை இந்திராவின் ரத்தத்தால் நனைந்துபோனது’பப்புவாக இருந்து யுவராஜாக மாறிய ராகுல் காந்தி!
  • காங்கிரஸ் கட்சி மீண்டெழ ராகுல் கைகொடுப்பாரா?
 

காங்கிரஸ் கட்சியை சுயபலத்தில் நிலைபெற செய்தார்

நேரு-காந்தி குடும்ப உறுப்பினராக இருந்தது அரசியலில் நுழைவதற்கு சோனியா காந்திக்கு ராஜபாட்டை அமைத்துக் கொடுத்தது. ஆனால், பாதை இருந்தாலும் பயணிப்பவர் தனது முயற்சியினால்தானே அடியெடுத்து வைக்கவேண்டும்? 19 ஆண்டுகள் காங்கிரஸ் கட்சியின் தலைமையை ஏற்று நடத்தியது சோனியாவின் தனிச்சிறப்பு என்று கூறலாம்.

தொண்ணூறுகளில் கட்சியிலிருந்து பலர் பிரிந்து சென்ற நிலையில், நெருக்கடியில் இருந்த காங்கிரஸ் கட்சி விரைவிலேயே ஆட்சிக்குக் வரமுடிந்தது. ஒரு தேர்தலில் வெற்றி பெற்றுவிட்டால் பிரச்சனை முடிந்துவிட்டதா? தேசிய அளவிலான கட்சி அடுத்தடுத்து தேர்தல்களை சந்திக்கவேண்டும் வெற்றி பெறவேண்டும் என்ற அழுத்தம் தொடர்வதும் தவிர்க்கமுடியாத ஒன்று.

ஒருவேளை, இந்த தலைமைப்பண்புதான் தொடர்ந்து பல ஆண்டுகளாக உலகின் பத்து செல்வாக்கு மிக்க பெண்களிடையே ஒருவராக சோனியா காந்தி திகழ்ந்ததன் காரணத்தின் பின்னணியோ?

 

சோனியா காந்தி காங்கிரஸ் கட்சியின் தலைவராவதற்கு முன்பு 1996ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் கட்சி தோல்வியடைந்ததது. அப்போதுதான் கட்சியின் தலைமைப் பொறுப்பை சோனியா காந்தி ஏற்கவேண்டும் என்ற கோரிக்கை வலுத்தது. ஆனால் தனது கணவர் ராஜீவ் காந்தியின் மரணம் ஏற்படுத்திய வடு அவரை அரசியலில் இருந்து விலகியிருக்கச் சொன்னது.

இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு 1998ஆம் ஆண்டு கட்சியினரின் கோரிக்கையை ஏற்று தலைவர் பதவியை சோனியா காந்தி ஏற்றுக்கொண்டார். தீவிர அரசியலில் ஈடுபட்ட அவர், அரசியல் தந்திரங்கள், உள்ளடங்கிய சவால்கள், சூழ்ச்சிகள் என பல்வேறு தடைகளை எதிர்த்துப் போராடி, கட்சியை ஒன்றிணைத்தார். ஆறு வருடங்களில் அதாவது 2004ஆம் ஆண்டில் காங்கிரஸை ஆட்சிப்பீடத்தில் அமர்த்தினார்.

எதிர்க்கட்சிகள் சோனியா காந்தி அரசியல் அனுபவமற்றவர் என்ற நம்பிக்கையில் அவரின் தலைமையை அவநம்பிக்கையுடன் பார்த்துக்கொண்டிருந்தனர். ஆனால் அவர்களின் ஆசை நிராசையாக, நிலைமைகள் தலைகீழாக மாறின. ஒத்தகருத்துகள் கொண்ட கட்சிகளை இணைத்து ஐக்கிய முற்போக்கு கூட்டணியை உருவாக்கினார் சோனியா காந்தி.


காங்கிரஸின் ‘ஃபேவிகோல்’

சோனியா அதிகம் எதிர்கொண்ட விமர்சனம் அவர் வெளிநாட்டை சேர்ந்தவர் என்பதே. இது குறித்து பலவிதமான சர்ச்சைகள் கட்சிக்கு வெளியில் மட்டுமல்ல, உள்ளுக்குள்ளும் தொடர்ந்துக் கொண்டேயிருந்தன. இந்த விமர்சனமே அவரை ஆட்சியில் தலைவராக இருக்காமல், கட்சியின் தலைவராக மட்டுமே வைத்திருந்தது என்றும் கூறப்படுவதுண்டு.

கட்சியின் பல தலைவர்கள் கட்சியில் இருந்து வெளியேறத் தொடங்கினார்கள். கட்சியில் உறுதியற்ற தன்மை நிலவியது.

அன்று அரசியல் சூழல் காங்கிரஸ் கட்சிக்கு எதிராகவே நிலவியபோதும் காங்கிரஸ் என்ற பாரம்பரிய கட்சியை கட்டுக்கோப்பாக காப்பாற்றினார் என்பதை சோனியா காந்தியின் மாபெரும் சாதனையாக கருதலாம்

சோனியா காந்தியின் செயல்பாடுகளை பார்த்த சில விமர்சகர்கள் 10 ஜன்பத் முகவரியில் அவர் “ஃபெவிக்கால்” போல ஒட்டிக்கொண்டிருக்கிறார் என்று அழைத்தனர். அவர் திறன்மிக்க பசையாக காங்கிரஸ் தலைமையில் ஒட்டிக்கொண்டிருக்க வேண்டியது கட்சிக்கு அத்தியாவசிய தேவையாக இருந்தது. அந்த அத்தியாவசிய தேவையே சோனியா காந்தியின் தவறுகளுக்கும் காரணமாகியது.


சோனியா தன் அரசியல் வாழ்க்கையில் ஐந்து முக்கிய பின்னடைவுகளை சந்தித்தார். அவற்றில் ஒன்று அவருடைய உடல்நலம் தொடர்பானது, அதற்கு அவர் காரணம் இல்லையென்றாலும் மீதமுள்ள நான்குக்கும் அவரே பொறுப்பு.

ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் இரண்டாம் ஆட்சிக் காலத்தின்போது, உடல்நலக் குறைவு என்ற காரணத்தால் சோனியா காந்தி பொதுநிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வதை குறைக்கத் தொடங்கினார். தனது எழுபது வயதில், தீவிர அரசியலில் இருந்து முழுமையாக விலகி இருக்க விரும்பினார். 2019ஆம் ஆண்டு தேர்தலில் போட்டியிடவும் அவர் விரும்பவில்லை.

காங்கிரசில் ராகுல் காந்தியை ஏற்றுக் கொள்வதற்கு இருந்த தயக்கமும் தாமதமும் சோனியா காந்தியை பொறுப்பில் இருந்து விலகாமல் தடுத்தது. கடந்த பொதுத் தேர்தலுக்குப் பின் கட்சித் தொண்டர்களும் தலைவர்களும் மீண்டும் தன்னிடம்வந்து பிரியங்கா காந்தியை அரசியலுக்குள் கொண்டு வாருங்கள் என்று அழுத்தம் தருவதை சோனியா காந்தி விரும்பவில்லை.

  • பப்புவாக இருந்து யுவராஜாக மாறிய ராகுல் காந்தி!
  • ராகுல் காந்திக்காக டிவிட்டர் பதிவிடுவது செல்லப்பிராணி!

சோனியாவின் வார்த்தைகள் ‘கல்லில் பொறிக்கப்பட்டவை’

 

“காங்கிரசின் கடந்த காலம் சோனியா, எதிர்காலம் ராகுல் ” என்று கட்சியினர் கருதுவதே அவர்கள் தற்போது சோனியா காந்தியை அணுகி பழைய கோரிக்கையை மீண்டும் முன்வைக்காததற்கு காரணம் என்று கருதப்படுகிறது.

தனது விருப்பமான தலைவர்களை அருகில் வைத்துக்கொண்ட சோனியா காந்தி எப்போதும் அவர்களால் சூழப்பட்டிருந்தார் என்பது அவரின் குறைபாடாக பார்க்கப்பட்டது. இதற்கான விலையையும் அவர் கொடுக்க வேண்டியிருந்தது. கட்சியில் முகஸ்துதி கலாசாரம் வளர்ச்சியடைந்தது.

இதன் விளைவாக, சோனியா காந்தியின் இல்லமான 10, ஜன்பத் கூறும் எந்தவொரு விஷயமும் கேள்விக்கு அப்பாற்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டது. சோனியாவின் கருத்துக்கு உடன்படாதவர்கள், கருத்து கூறுபவர்கள் மற்றும் கேள்வி எழுப்புபவர்கள் கலகம் செய்பவர்களாக கருதி விலக்கப்பட்டனர்.

சோனியாவின் கருத்து “கல்லில் பொறிக்கப்பட்ட வார்த்தைகள்” என்று சொன்னார் கட்சியின் ஒரு மூத்தத்தலைவர். அதாவது சோனியா கூறிய வார்த்தைகளை மாற்றவோ அழிக்க முடியாது.

ஆட்சியில் இல்லாமலேயே அதிகாரங்களை மையப்படுத்திய சோனியா காந்தி அதிக அதிகாரம் படைத்தவராகவும், பிரதமருக்கு அடுத்த “இரண்டாம் அதிகார மையமாகவும்” திகழ்ந்தார் என்ற குற்றச்சாட்டு அவர்மீது தொடர்ந்து வைக்கப்பட்டது. இந்த குற்றசாட்டிற்கான ஆதாரங்களை மன்மோகன் சிங்கின் பத்து ஆண்டுகால ஆட்சியின்போது நேரடியாகப் பார்க்க முடிந்தது.

 

சோனியா காந்திக்கு ‘அரசியலில் தைரிய பற்றாக்குறை’ அதிகமாக இருந்தது. ராகுல் காந்தியின் அரசியல் பிரவேசம் பற்றி உறுதியான திட்டமிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளும் அளவு சோனியா காந்திக்கு தைரியம் இல்லை என்று அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

இதற்கு காரணம் “மகன் மேல் வைத்த பாசம்” என்று கூறினாலும், 132 கோடி மக்கள் வாழும் நாட்டில் 132 ஆண்டுகால காங்கிரஸ் கட்சிக்கு வேறு எந்த தலைவருமே கிடைக்கவில்லையா என்ற கேள்வி எழுவதையும் தவிர்க்கமுடியவில்லை.

சோனியா காந்தி தன்னுடைய அரசியல் கதாபாத்திரத்தில் சரியாக இயங்கினாரா என்பதற்கான சிறந்த மதிப்பீடு 2019ஆம் ஆண்டின் மக்களவைத் தேர்தல்களின் முடிவுகளில் தெரியுமா? அதற்காக காத்திருக்க வேண்டியது காலத்தின் கட்டாயம்.

காங்கிரஸ் அந்தத் தேர்தலில் வெற்றி பெற்றால் சோனியாவின் அரசியல் நடவடிக்கைகளை அளவிடும் தராசில் அவரது குறைகளின் தட்டு மேலெழும்பி, நிறைகளின் தட்டு பாரத்தால் கீழிறங்கி சோனியா காந்தி சிறந்த தலைவராக பணியாற்றினாரா என்பதை நிரூபிக்கும் என்று கருதலாம்.

About இனியவன்

x

Check Also

RADIOTAMIZHA | இந்தியாவில் 63 ஆயிரத்தை நெருங்கும் கொரோனா பாதிப்பு: 2,109 பேர் பலி

இந்தியாவில் இன்று (மே 10) காலை 9.00 மணி நிலவரப்படி, 62,939 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு, 2,109 பேர் உயிரிழந்துள்ளதாக ...

%d bloggers like this: