சுவிசில் பேர்ண் மாநில பிரதான எதிர்க்கட்சியான “எஸ்.பி” கட்சியின் சார்பில் தூண் நகரசபை தேர்தலில் போட்டியிட்ட யாழ். புங்குடுதீவைச் சேர்ந்த தமிழ் பெண் தர்ஷிகா கிருஸ்ணானந்தம் வடிவேலு 2916 வாக்குகள் பெற்று வெற்றியடைந்துள்ளார்.
இவரே சுவிஸ் தூண் நகரசபையில் முதன்முதலாக வெற்றியீட்டிய முதல் தமிழ்ப்பெண் என்பது பெருமைக்குரிய விடயம்.
யாழ். புங்குடுதீவில் பிறந்து சிறுவயதிலேயே சுவிஸ் வந்து இங்கு படித்து பட்டம் பெற்று, தற்போது சுவிஸின் “எஸ்.பி” எனும் சோஷலிஸ ஜனநாயகக் கட்சியில் தூண் மாநில நிர்வாக சபை உறுப்பினர்களில் ஒருவராக விளங்கி வரும் தர்ஷிகா சுவிஸில் தமிழ்ச் சமூகத்தின் வழிகாட்டியாகவும் புலம்பெயர் தமிழர்களை ஒன்றிணைக்கும் பாலமாகவும் செயற்பட்டு வருகின்றார்.
அதுமட்டுமன்றி இவர் தூண் நகரசபையில் பிரதேச தமிழ் மக்களின் மதம் மற்றும் இந்துமதம், கலாச்சாரம் தொடர்பான ஆலோசகர் பட்டியலில் ஓர் ஆலோசகராக செயற்பட்டு வந்தார் .
சுவிற்ஸர்லாந்தில் தஞ்சமடைந்துள்ள இலங்கை அகதிகள் தொடர்பில் அந்நாட்டின் உப ஜனாதிபதியும் நீதியமைச்சருமான சைமனேட்டா சொமாருகாவின் பிரதிநிதி மற்றும் அரசியல் பிரமுகர்களுடன் முக்கிய சந்திப்பொன்றையும் தர்சிகா அண்மையில் மேற்கொண்டிருந்தார்.
இவரின் வெற்றி சுவிஸ் வாழ் தமிழ் மக்களுக்கு கிடைத்த வெற்றி என பலரும் வாழ்த்துக்களை இவருக்கு வழங்கி வருகின்றனர்.