Home / இந்திய செய்திகள் / கேரள வெள்ளம்: விலங்குகளை மீட்கும் சென்னை இளைஞர்கள்

கேரள வெள்ளம்: விலங்குகளை மீட்கும் சென்னை இளைஞர்கள்

சென்னையில் இருந்து சென்றிருக்கும் நால்வர் குழு ஒன்று, கேரள வெள்ளத்திலிருந்து விலங்குகளை மீட்கும் படங்கள் சமூக வலைதளங்களில் பரவலாக பரவியது. இந்த பணியை மேற்கொண்டு வருபவர்களின் மனித நேயத்தை சமூக ஊடகத்தில் கொண்டாடி தீர்க்கின்றனர் இணையவாசிகள்.

பிரபல செய்திச் சேவை தமிழ் அவர்களிடம் தொடர்பு கொண்டு பேசியது. இந்த பணிகளை ஒருங்கிணைத்து வரும், ஷ்ரவன் குமார், “துயர்மிகு நாட்களாக நகர்ந்து கொண்டிருக்கிறது” என்கிறார்.

“நேற்று ஓரிடத்தில் மட்டும் 18 நாய்களை மீட்டோம். நேற்று எங்களுக்கு ஒரு சவாலான நாள்தான். சொல்லப்போனால், நேற்று மட்டும் அல்ல கழுத்தளவில் தண்ணீரில் நின்று கொண்டு அந்த உயிர்களை மீட்பது சவாலாக இருக்கிறது.”என்கிறார் மீட்புப் பணிக்காக களத்தில் இருக்கும் நிஷாந்த்.

மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ள இந்த இளைஞர்கள் அனைவரும் நன்கு பயிற்றுவிக்கப்பட்டவர்கள். சிலர் தேசிய பேரிடர் மீட்புக் குழுவிலும் பணிபுரிந்தவர்கள். சென்னை வெள்ளத்தின் போதும் இவர்கள் இந்த உன்னத பணியை மேற்கொண்டார்கள்.

‘எங்கும் மனிதம் உள்ளது’

நாடு முழுவதும் தங்களுக்கு தன்னார்வலர்கள் இருக்கிறார்கள். அவர்களை வாட்ஸ் ஆப் குழு மூலம் தாங்கள் ஒருங்கிணைக்கிறோம் என்கிறார் ஷ்ரவன்.

 

இந்த பணியில் ஈடுபட்டிருக்கும் நிஷாந்த். இதற்கு முன்னர் உத்தரகாண்ட், காசிரங்கா மற்றும் சென்னை வெள்ளத்தில் விலங்குகளை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாக கூறுகிறார்.

“இந்த புவியில் மனிதனுகுள்ள உரிமைகள் அனைத்தும் பிற உயிரினங்களுக்கும் உள்ளன. அதனை நாம் அங்கீரிக்க வேண்டும். இந்த விலங்குகள் ஏதோ ஒரு வகையில் தன் எஜமானருக்கு உதவி இருக்கும். இப்போதும் அதனால் இயன்றால் தன் எஜமானருக்கு உதவும். இயலாததால்தான் நம் உதவியை வேண்டி நிற்கிறது. அதற்கு உதவ வேண்டியது இயன்றவர்களின் பொறுப்பு” என்கிறார் அவர்.

 

தற்போது கேரள வெள்ளத்தில் சிக்கியுள்ள நாய்கள், ஆடு மாடுகள் போன்ற விலங்குகளை மீட்டு அதன் உரிமையாளர்களிடம் சேர்த்து வரும் நால்வரில் இவரும் ஒருவர்.

வீட்டு விலங்குகள் மட்டுமின்றி காட்டு விலங்குகளையும் மீட்க இவர்கள் பயிற்சி பெற்றுள்ளனர்.

வெள்ளம் வற்ற தொடங்குவதால் பாம்புகள் வெளியே வர தொடங்கும் என்பதால் அது குறித்து தனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் நிஷாந்த்.

எட்டு வயது சிறுமியின் கொடை உள்ளம்

அவள் பெயர் அனுப்ரியா. விழுப்புரத்தை சேர்ந்த அவளுக்கு வயது எட்டு. அவளுக்கு ஒரு கனவு இருந்தது. அந்த வயதிற்கே உரிய எளிமையான கனவுதான் அது. மிதிவண்டி வாங்க வேண்டும். செம்மண் புழுதியில் அந்த மிதிவண்டியில் உலாவ வேண்டும். நன்கு மிதிவண்டி பழகியபின் அந்த மிதிவண்டியில் தன் பெற்றோரை வைத்து அழைத்து செல்ல வேண்டும் என்பதுதான் அந்த கனவு. அதற்காக சிறுக சிறுக தன் உண்டியலில் காசை சேர்த்தாள். 8,846 ரூபாய் வரை சேர்ந்துவிட்டது. அப்போதுதான் அவளுக்கு தன் தந்தை மூலம் கேரளா வெள்ளம் குறித்தும், அதன் பாதிப்புகள் குறித்தும் தெரிய வந்தது. உடைந்து போனாள். கொஞ்சமும் யோசிக்காமல் தன் கனவை தானே கலைத்து தான் சேமித்து வைத்திருந்த தொகையை வெள்ள நிவாரணத்திற்கு அனுப்பினாள்.

விஷ்ணு, மத்திய பிரதேசத்தை சேர்ந்தவர். குளிர்காலத்தில் தம் மாநிலத்திலிருந்து கம்பளி போர்வைகளை எடுத்துக் கொண்டு கேரளாவில் தெரு தெருவாக விற்பார்.இந்த முறை கேரளா சென்றவர் கேரள வெள்ளத்தையும் அதன் பாதிப்புகளையும் கண்டு அதிர்ந்தார். அவருக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. அள்ளிக் கொடுக்க வங்கி இருப்பும் இல்லை. தன்னிடம் இருந்த 50 கம்பளி போர்வைகளை கேரள வெள்ள நிவாரணமாக அளித்தார்.

இது ஒரு அனுப்ரியாவின், விஷ்ணுவின் கதை அல்ல. இந்தியா முழுவதும் எத்தனையோ அனுப்ரியாக்களும், விஷ்ணுகளும் எல்லைகள் கடந்து தங்களாலான உதவிகளை செய்து வருகிறார்கள்.

 

அதிலும் கேரள மீனவர்களின் பணி மகத்தானது. இது வரை அவர்களே ஆயிரகணக்கானோரை மீட்டு இருப்பார்கள் என்கிறது தகவல்கள். கேரள முதல்வர் பினராயி விஜயன் நெகிழ்ந்து ‘கேரளாவின் கதாநாயகர்கள் எம் மீனவர்கள்’ என்றார்.

இப்படி தங்களால் ஆன உதவிகளை, அனைத்து தரப்பினரும் செய்து வருகிறார்கள். மனிதர்களை நோக்கி மட்டும் மக்களின் கரங்கள் நீளவில்லை, ‘காக்கை குருவியும் எங்கள் சாதியன’ விலங்குகளுக்காகவும் வெள்ளத்தில் இறங்கி வேலை செய்கிறார்கள் மக்கள்.

 

About இனியவன்

x

Check Also

தவறுதலாக வாக்களித்ததால் விரலை வெட்டிக்கொண்ட இளைஞர் !!

தவறுதலாக பாரதிய ஜனதா கட்சிக்கு வாக்களித்து விட்டதால் உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த வாக்காளர் ஒருவர் தனது விரலை வெட்டிக்கொண்டார். இந்தியாவின் ...

%d bloggers like this: