Home / விளையாட்டுச் செய்திகள் / கிரிக்கெட் எனக்கு போராடக் கற்றுக்கொடுத்தது: ஓய்வை அறிவித்து யுவராஜ் நெகிழ்ச்சிப் பேச்சு

கிரிக்கெட் எனக்கு போராடக் கற்றுக்கொடுத்தது: ஓய்வை அறிவித்து யுவராஜ் நெகிழ்ச்சிப் பேச்சு

 

கடந்த 2011 உலக கோப்பை தொடர் நாயகன், ‘ஆல் ரவுண்டர்’ யுவராஜ் சிங் கிரிக்கெட் அரங்கில் இருந்து முழுவதுமாக ஓய்வு பெற்றார்.

இந்திய அணியின் ‘ஆல் ரவுண்டர்’ யுவராஜ் சிங் 37. கடந்த 2000, அக்., 3ல் கென்ய அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் களமிறங்கினார். கடந்த 2007 ‘டுவென்டி–20’ உலக கோப்பை தொடரில் இங்கிலாந்துக்கு எதிராக லீக் போட்டியில் ஸ்டூவர்ட் பிராட் வீசிய ஓவரில் 6 பந்திலும் 6 சிக்சர் அடித்து சாதித்தார். ‘டுவென்டி–20’ அரங்கில் அதிவேக அரைசதம் (12 பந்து) கடந்த வீரர் இவர் தான்.

2011ல் இந்தியாவில் நடந்த உலக கோப்பை தொடரில் (50 ஓவர்) மிரட்டினார் யுவராஜ் (362 ரன், 15 விக்.,). 300 ரன்கள், 15 விக்கெட்டுகள் வீழ்த்திய முதல் ‘ஆல் ரவுண்டர்’ என பெருமை பெற்ற இவர், தொடர் நாயகன் விருதை தட்டிச் சென்றார்.

2012ல் நுரையீரல் கேன்சரால் அவதிப்பட்டு, மீண்டு வந்து இந்திய அணியில் இடம் பிடித்தார். கடைசியாக 2017ல் விண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் பங்கேற்றார். இதன் பின் இந்திய அணியில் இடம் கிடைக்கவில்லை.

மீண்டும் இந்திய அணிக்கு திரும்ப முயற்சித்த இவருக்கான வாய்ப்பு கடைசி வரை கைகூடவில்லை. இதையடுத்து சர்வதேச கிரிக்கெட் மற்றும் பிரிமியர் அரங்கில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

யுவராஜ் சிங் கூறியது: ஓய்வு பெறுவது என்பது கடினமான முடிவு தான் என்றாலும் மிக அழகான தருணம். 25 ஆண்டுகள், இதில் 17 ஆண்டுகள் சர்வதேச அரங்கில் தேசத்திற்காக விளையாட வாய்ப்பு கிடைத்த போது எனது ரத்தம், வியர்வை சிந்தி வெற்றிக்கு போராடினேன். தற்போது எல்லாம் முடிந்து விடைபெறும் தருணம் வந்து விட்டது.

இந்திய அணிக்காக 400க்கும் மேற்பட்ட போட்டிகளில் பங்கேற்றது உண்மையில் எனக்கு கிடைத்த அதிர்ஷ்டம் தான். கிரிக்கெட் விளையாட துவங்கிய போது, இவ்வளவு போட்டிகளில் பங்கேற்பேன் என ஒருபோதும் கற்பனை கூட செய்து பார்த்தது இல்லை.

வார்த்தை இல்லை

எனது கிரிக்கெட் வாழ்க்கையை திரும்பிப் பார்த்தால் அன்பு மற்றும் வெறுப்பு என இரண்டும் கலந்திருக்கும். அதேநேரம் கிரிக்கெட்டினை வெறுத்ததாக நினைவில்லை. ஏனெனில் அதன் மீதான காதல் தான் என்னை இந்த நிலைமைக்கு கொண்டு வந்தது. எனது வாழ்க்கையின் கடைசி தருணங்கள் வரை இது நீடித்து இருக்கும். இந்த உணர்வு விவரிக்க வார்த்தைகளே இல்லை.

வாழ்க்கையில் எப்படி விழுவது, விழுந்தால் எப்படி உடனே எழுவது, எதிர்த்து போட்டியிடுவது எப்படி என அனைத்தையும் கிரிக்கெட் தான் எனக்கு கற்றுக் கொடுத்தது. போட்டிகளில் நிறைய முறை சொதப்பி உள்ளேன், அடுத்து வெற்றிகரமாக மீண்டுள்ளேன். ஆனால் ஒருபோதும் நம்பிக்கையை விட்டுக் கொடுத்தது இல்லை. எனது கடைசி மூச்சு உள்ளவரையில் இனிமேலும் அப்படித் தான் இருப்பேன்.

கிரிக்கெட் உலகில் நீடிக்க உதவிய அனைவருக்கும் நன்றி. கேன்சர் சிகிச்சைக்கு உதவிய இந்திய கிரிக்கெட் போர்டுக்கு நன்றி. எனது பவுண்டேஷன் மூலம் கேன்சரால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தொடர்ந்து உதவி செய்யப் போகிறேன்.

About இனியவன்

x

Check Also

உலகக்கிண்ணத்தை சுவீகரிக்கும் கனவு யாருக்கு நிஜமாகும்?

இம்முறை உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி  இன்று(14) நடைபெறவுள்ளது. முதற்தடவையாக உலகக்கிண்ணத்தை சுவீகரிக்கும் எதிர்பார்ப்புடன் இங்கிலாந்தும் நியூசிலாந்தும் இறுதிப்போட்டியில் களமிறங்கவுள்ளன. ...

%d bloggers like this: