Home / இந்திய செய்திகள் / ஐயப்பன் கோவிலுக்குள் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க தேவசம் போர்டு ஆதரவு !

ஐயப்பன் கோவிலுக்குள் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க தேவசம் போர்டு ஆதரவு !

பாலின பாகுபாடுகளை காரணம் காட்டி சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் வழிபாடு மேற்கொள்ள அனுமதி மறுப்பதென்பது சட்டவிரோத செயல். ஆகவே, சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் சென்று வழிபடுவதற்கு பெண்களுக்கு அனுமதி வழங்கப்பட வேண்டும் என கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அதிரடி தீர்ப்பு வழங்கியிருந்தது உச்ச நீதிமன்றம்.

உச்ச நீதிமன்றத்தின் மேற்காண் தீர்ப்புக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து இந்துத்துவ அமைப்புகளும், பொதுமக்களும் நாடு முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்ட வந்த நிலையில், உச்ச நீதிமன்ற தீர்ப்பினை அமுல்படுத்துவதில் மும்முரம் காட்டியது கேரள அரசு.

அந்த முயற்சிகளில் சில தோல்விகளை தழுவ ,கடந்த மாதம் கேரளாவைச் சேர்ந்த பிந்து மற்றும் கனகதுர்கா என்ற இரு பெண்கள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சபரிமலை ஐயப்பன் கோவிலில் வழிபாடு மேற்கொண்டனர்.

அவர்களைப் போன்றே பல பெண்களும் சபரிமலை கோவிலுக்குள் சென்று வழிபாடு மேற்கொண்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கும் நிலையில், சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள்ளாக பெண்களை அனுமதிப்பது தொடர்பான உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பினை எதிர்த்து தொடுக்கப்பட்டிருந்த சீராய்வு மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

இந்த நிலையில் சபரிமலை தேவசம் போர்டின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ராகேஷ் திவேதி, “சபரிமலை கோவிலுக்குள் பெண்கள் நுழைவதில் தவறு கிடையாது. சபரிமலையில் பெண்கள் நுழைவிற்கு எதிராக பழக்க வழக்கங்கள் இருந்ததாக வரலாற்று ஆவணங்கள் எதிலும் ஆதாரமும் இல்லை. அதனால் அதை கடைபிடிக்க வேண்டிய அவசியம் கிடையாது. நாங்கள் பெண்கள் நுழைவை ஆதரிக்கிறோம்” என்ற வாதத்தினை முன்வைத்தார்.

ஆனால் இதற்கு முன்னதாக, அனைத்து வயது பெண்களையும் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் அனுமதிக்க தேவசம் போர்டு எதிர்ப்பு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

 

About அகமுகிலன்

x

Check Also

அஜித், விஜய் உள்ளிட்ட நடிகர்கள் வாக்களிப்பு

அஜித்குமார்: தென் சென்னை மக்களவைத் தொகுதிக்குட்பட்ட திருவான்மியூரில் காலை 7.05 மணியளவில் நடிகர் அஜீத் தனது மனைவி ஷாலினியுடன் வரிசையில் ...

%d bloggers like this: