Home / உள்நாட்டு செய்திகள் / இலங்கைக்கு மேலும் நெருக்கடி; ஐ.நா உதவி செயலாளர் கடும் கண்டனம்..!

இலங்கைக்கு மேலும் நெருக்கடி; ஐ.நா உதவி செயலாளர் கடும் கண்டனம்..!

இலங்கையில், சிவில் சமூகப் பிரதிநிதிகள் அச்சுறுத்தப்பட்டு வருவதாக ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகளுக்கான உதவிச்செயலர் அன்ட்ரூ கில்மோர் குற்றம்சாட்டியுள்ளதுடன் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபையின் 34வது அமர்வில் தொடரில் கலந்துகொண்டிருந்த எஸ்.கணேசநாதன் மற்றும் சிவில் சமூகப் பிரதிநிதிகள் அச்சுறுத்தப்பட்டது தொடர்பாக ஐக்கிய நாடுகள் சிறப்பு அறிக்கையாளர்கள் விசாரணை செய்திருந்தார்கள்.

இது குறித்த அறிக்கை, ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகளுக்கான உதவிச்செயலர் அன்ட்ரூ கில்மோர் நேற்று வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “2017ஆம் ஆண்டு மார்ச் மாதம் 7- 9ஆம் திகதிகளுக்கு இடையில் இலங்கையின் தற்போதைய மனித உரிமைகள் நிலைமைகள் தொடர்பாக எஸ்.கணேசநாதன் உரையாற்றியிருந்தார்.

2017 மார்ச் 11ஆம் திகதி கல்முனை பொலிஸ் நிலையத்மை சேர்ந்த குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கணேசநாதனின் வீட்டுக்குச் சென்று, அவரது உறவினர்களை அச்சுறுத்தியுள்ளனர்.

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 34வது அமர்வில் எஸ்.கணேசநாதன் கலந்து கொண்டமையினால், அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டமை குறித்து, நிபுணர்கள் தீவிர கரிசனை வெளியிட்டுள்ளனர்.

அதேவேளை, இந்த அறிக்கை சமர்ப்பிக்கப்படும் நேரம் வரையில், இலங்கை அரசாங்கத்திடம் இருந்து எந்த அறிக்கையும் கிடைக்கவில்லை.

மனித உரிமைகள் தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையுடன் ஒத்துழைக்கின்ற மனித உரிமை ஆர்வலர்கள் அச்சுறுத்தலை எதிர்கொள்வது உலகெங்கும் அதிகரித்து வருகிறது.

பயணத் தடைகள், சொத்துக்கள் முடக்கம், தடுத்து வைப்பு, சித்திரவதைகள் போன்ற மிரட்டல்கள், அச்சுறுத்தல்களை தனிநபர்களும், குழுக்களும் சந்தித்துள்ளனர். இது வெளிப்படையாக வெறுக்கத்தக்க செயல்.

ஒவ்வொரு ஆண்டும், இத்தகைய மிரட்டல்கள் குறித்த அறிக்கைகளை சமர்ப்பிக்க நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளோம். அந்தந்த அரசாங்கங்கள், ஐ.நா நிறுவனங்களுடனும், பொறிமுறைகளுடனும் ஒத்துழைக்க வேண்டும்.

மக்கள், உரிமை, கௌரவத்துக்கு எதிரான இந்த நச்சுப்பின்னணியை மௌனமாக பார்த்துக் கொண்டிருக்க முடியாது. இத்தகைய அச்சுறுத்தல்கள் அதிகரித்து வரும் நிலையில், இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கு இன்னமும் விரிவான அணுகுமுறை அவசியம்.” என அவர் தனது அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, நம்பிக்கையைக் கட்டியெழுப்பும் நடவடிக்கைகளை இலங்கை துரிதமாக மேற்கொள்ள வேண்டும் என்றும் ஐ.நா மனித உரிமை ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேன் அண்மையில் வலியுறுத்தியிருந்தார்.

இது இலங்கைக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ள நிலையில், தற்போது உரிமைகளுக்கான உதவிச்செயலரின் அறிக்கை இலங்கைக்கு மேலும் நெருக்கடியை ஏற்படுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

About கலைப்பிரியன்

x

Check Also

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் விமான பயண சேவைகள் இன்று முதல்

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் விமான பயண சேவைகள் இன்று முதல் பொது மக்களுக்காக ஆரம்பிக்கப்படவுள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் ...

%d bloggers like this: