Home / கட்டுரைகள் / இன்று உலக காடுகள் தினம்

இன்று உலக காடுகள் தினம்

மணிநீரும் மண்ணும் மலையும் அணிநிழற் காடும் உடைய தரண்

என்று ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே காடுகளைப் பற்றிய உண்மையை உரக்கக் கூறியவர் வள்ளுவப் பெருந்தகை. காடுகள் என்பது வெறும் மரமும், செடி கொடிகளும் சேர்ந்த சாதாரண கட்டமைப்பு அல்ல. அவை உயிர்களின் ஆதாரம். மனிதன் உள்பட கோடானுகோடி உயிர்கள் வாழ்வதற்கு மூலமே வனங்கள்தான்.

எண்ணிக்கையில் குறைந்த ஆப்பிரிக்க புதர்க்காடுகளும், மழை கொட்டித் தீர்க்கும் அமேஸான் காடுகளும் இந்த உலகத்தை வாழ வைத்துக் கொண்டிருக்கின்றன. வனங்களில் பெய்யும் மழையே அனைத்து உயிரினங்களுக்கும் நீராதாரமாக இருக்கிறது. வளம் கொழிக்கும் ஆறுகளையும், அருவிகளையும், நமக்கு உணவு ஆதாரத்தையும் கொடுப்பவை காடுகளே. ஆனால், நகரமயமாக்கல், மனிதப் பேராசை, இயற்கைச் சீற்றம் உள்ளிட்ட காரணிகளால் நாளொன்றுக்கு ஆயிரக்கணக்கான ஹெக்டேர் வனம் அழிக்கப்பட்டு வருகிறது.

ஒரு நாட்டின் பரப்பளவில் 33 விழுக்காடு காடுகள் இருக்கவேண்டும் என்ற விதி இருந்தாலும், சாலைகள், பாலங்கள், குடியிருப்புகள் கட்டுவதற்காக வரைமுறையின்றி காடுகள் அழிக்கப்பட்டு வருகின்றன. காடுகளின் பரப்பளவு குறைவதால் வனவிலங்குகளுக்கும், மனிதர்களுக்கும் இடையேயான மோதல்களும் அதிகரித்து உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன.

வாகனங்கள் வெளியேற்றும் கரியமில வாயுவை மரங்கள் கிரகிக்காமல் இருந்திருந்தால், மனித இனம் என்றோ அழிந்திருக்கும். பருவநிலை மாற்றத்திற்கும் காடுகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. காடுகள் இல்லையேல் நாடுகள் இல்லை…. வனம் இன்றிப் போனால் மனித இனம் அற்றுப் போகும் என்பதை அனைவரும் உணர வேண்டியது அவசியம் மட்டுமல்ல அவசரமும் கூட!

 

About அகமுகிலன்

x

Check Also

Union Assurance நிறுவனத்தில் வேலைவாய்ப்பு வெற்றிடம்

அனைவருக்கும் பகிருங்கள்! மேலும் இது போன்ற வேலைவாய்ப்பு செய்திகளை பெற எங்கள் முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள் Facebook-LIKE      ...

%d bloggers like this: