Home / இந்திய செய்திகள் / இந்திய விமானி அபிநந்தன் பாகிஸ்தானில் அனுபவித்த சித்தரவதைகள்…

இந்திய விமானி அபிநந்தன் பாகிஸ்தானில் அனுபவித்த சித்தரவதைகள்…

இந்திய விமானப்படை வீரர் அபிநந்தனை பாகிஸ்தான் ராணுவத்தினர் துன்புறுத்திய தகவல் வெளியாகி உள்ளது. அபிநந்தனை தூக்கமின்றி தவிக்க விட்டதோடு, தனித்து அடைத்து வைத்து பாகிஸ்தான் ராணுவத்தினர் தாக்கியுள்ளனர்.

இந்திய எல்லைக்குள் நுழைந்து தாக்குதல் நடத்த திட்டமிட்ட பாகிஸ்தான் விமானங்களை கடந்த மாதம் 27-ஆம் தேதி இந்திய விமானப்படை விரட்டி அடித்தது. இதில் பாகிஸ்தானின் எப்-16 ரக விமானத்தை சுட்டு வீழ்த்திய இந்திய விமானப்படை வீரர் அபிநந்தனின் விமானமும் சுட்டு வீழ்த்தப்பட்டது.

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பாராசூட் மூலம் இறங்கிய அவரை அந்நாட்டு ராணுவத்தினர் பிடித்துச் சென்றனர். பாகிஸ்தான் ராணுவத்தின் பிடியில் இருந்த போது அபிநந்தன் சித்ரவதையை அனுபவித்ததாக இந்திய விமானப்படை உயரதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

27-ஆம் தேதி அன்று அபிநந்தனை பிடித்த பாகிஸ்தான் ராணுவம், அவரை தாக்கியதாகவும், தனித்து அடைத்து வைத்ததாகவும் அந்த அதிகாரி தெரிவித்துள்ளார். அபிநந்தன் பிடிபட்ட முதல் 24 மணி நேரத்தில் அவருக்கு பாகிஸ்தான் ராணுவம், மருத்துவ சிகிச்சை எதுவும் அளிக்கவில்லை என்றும் அதற்கு மாறாக அவரை நீண்ட நேரம் நிற்க வைத்தே கேள்விகளை கேட்டு துளைத்து எடுத்ததாகவும், தாக்கியதாகவும் இந்திய அதிகாரி குறிப்பிட்டார்.

இந்திய போர் விமானங்கள் எங்கெங்கு நிறுத்தப்பட்டுள்ளன? போர் தளவாட போக்குவரத்து எப்படி நடைபெறுகிறது?, எல்லைக்கு ராணுவத்தை அனுப்பும் நடவடிக்கைகள் என்னென்ன?, இந்திய விமானப்படை தகவல் பரிமாற்றத்திற்கு பயன்படுத்தும் ரேடியோ அலை வரிசை என்ன? என்பது போன்ற கேள்விகளை கேட்டு அபிநந்தனை பாகிஸ்தான் ராணுவம் சித்ரவதை செய்ததாக இந்திய அதிகாரி தெரிவித்துள்ளார்.

ஆனால் அபிநந்தன் மிக சாதுர்யமாக விசாரணையை ஏதிர்கொண்டதாகவும், 24 மணி நேரத்திற்கு ஒரு முறை இந்திய விமானப்படை தனது தகவல் பரிமாற்ற ரேடியோ அலைவரிசை மாற்றிக் கொள்ளும் என்பதால், முதல் 24 மணி நேரம் வரை, அதுகுறித்த தகவலை அபிநந்தன் பாகிஸ்தான் ராணுவத்திடம் தெரிவிக்கவில்லை என்றும் இந்திய அதிகாரி கூறினார்.

போர் விமானிகளுக்கு இந்திய விமானப்படை பயிற்சி அளிக்கும் போதே, எதிரிகளிடம் சிக்கினால் என்னென்ன செய்ய வேண்டும் என்பதை சொல்லிக் கொடுப்பதாக அந்த அதிகாரி தெரிவித்தார். இந்த பயிற்சியை கச்சிதமாக பயன்படுத்தி அபிநந்தன் நடந்து கொண்டதாகவும், பாகிஸ்தான் ராணுவத்தின் சித்ரவதைகள் துணிச்சலுடன் அவர் எதிர்கொண்டு தாங்கியதாகவும் அந்த அதிகாரி பாராட்டு தெரிவித்தார்.

அபிநந்தனை பிடித்த கணம் முதல் அவரை இடம் விட்டு இடம் மாற்றிக் கொண்டே இருந்த பாகிஸ்தான் ராணுவம், அவரை தூங்கவிடாமல் துன்புறுத்தியதாக இந்திய அதிகாரி குறிப்பிட்டார்.

பாகிஸ்தான் ராணுவமும், விமானப்படையும் மாறி கேள்வி கேட்டு துளைத்தது என்றும், அபிநந்தன் தனித்து அடைத்து வைக்கப்பட்டிருந்த அறையில் காது கிழியும் அளவுக்கு சத்தமாக கர்ண கொடூரமான பாடல்கள் ஒலிபரப்பி, மன அளவில் அபிநந்தனை தளர்வடைய செய்யும் முயற்சியிலும் பாகிஸ்தான் ராணுவம் ஈடுபட்டுள்ளது.

அவர் பிடிபட்ட இரண்டாவது நாளிலேயே அமெரிக்கா, இங்கிலாந்து, சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகள் பாகிஸ்தானை தொடர்பு கொண்டு அழுத்தம் கொடுத்ததை சுட்டிக்காட்டிய இந்திய அதிகாரி, இந்த சர்வதேச அழுத்தம் காரணமாக பாகிஸ்தான் ராணுவம் அபிநந்தனை விசாரிக்கும் முறையை மாற்றிக் கொண்டது என்றார்.

ஆனாலும் அபிநந்தனை மனதளவில் சித்ரவதை செய்யும் போக்கை பாகிஸ்தான் ராணுவம் கையாண்டது என்றும், சர்வதேச நிர்பந்தம் காரணமாக மூன்றாவது நாளில் அவரை விடுவித்தது என்றும் இந்திய அதிகாரி தெரிவித்துள்ளார்.

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE

 

 

About அகமுகிலன்

x

Check Also

வைகாசி விசாகத் திருவிழாவில் குவிந்த ஏராளமான பக்தர்கள்!!

திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவில் வைகாசி விசாகத் திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். அறுபடை வீடுகளில் இரண்டாவது படை வீடான திருச்செந்தூர் ...

%d bloggers like this: